/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஆண்டுக்கு ரூ.77,000 நிறைவான லாபம் தான்!
/
ஆண்டுக்கு ரூ.77,000 நிறைவான லாபம் தான்!
PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

கடந்த 10 ஆண்டுகளாக, 1 ஏக்கரில் நெல் மற்றும் எள் பயிரை இயற்கை முறையில் சாகுபடி செய்து, நிறைவான லாபம் பார்த்து வரும், மதுரை மாவட்டம் சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம்:
'டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' படித்திருக்கிறேன். மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபடியே விவசாயத்தையும் கவனிக்கிறேன்; 1 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்த 2005ல் அப்பா இறந்த பின், விவசாயத்தை கவனிக்க ஆரம்பித்தேன். அப்போது, ரசாயன உரங்கள் அதிகமாக பயன்படுத்தினேன். பூச்சி, நோய் தாக்குதல் அதிகரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் மகசூல் குறைந்து, போதுமான லாபம் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டேன்.
அதன்பின், 2014ல் இயற்கை விவசாயம் குறித்து நண்பர் கூறியதால், அதை ஆரம்பித்தேன். 50 சென்டில் சாகுபடி செய்த நவீன நெல் ரகத்தில், 18 மூட்டை நெல் மகசூல் கிடைத்தது.
பாரம்பரிய நெல் ரகத்தில், ஒன்பது மூட்டை தான் கிடைத்தது. நவீன நெல் ரகத்தை ஒப்பிடுகையில், பாரம்பரிய நெல் ரகங்களில் 50 சதவீதம் மகசூல் குறைவு.
ஆனால், அதுகுறித்து நான் சிறிதும் கவலைப்படவில்லை. படிப்படியாக மகசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், 1 ஏக்கரில் முழுமையாக பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டும் பயிர் செய்தேன். மகசூல் அளவு கூடிக்கிட்டே வந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆத்துார் கிச்சிலி சம்பா பயிர் செய்து வருகிறேன். 1 ஏக்கரில் கிடைக்கும், 1,625 கிலோ நெல்லை அரிசியாக மாற்றினால், 925 கிலோ அரிசியும், 50 கிலோ குருணையும் கிடைக்கும். அரிசியை, கிலோ 75 ரூபாய் என விற்பனை செய்கிறேன்.
இதன்படி, 925 கிலோ அரிசி விற்பனை வாயிலாக 69,375 ரூபாய் கிடைக்கும். குருணையை எங்கள் வீட்டு கோழிக்கு தீவனமாக பயன்படுத்திக் கொள்கிறேன். குருணை மதிப்பு, 1,750 ரூபாய்.
வைக்கோல் விற்பனை வாயிலாக, 4,000 ரூபாய் கிடைக்கும். ஆக, 1 ஏக்கர் நெல் சாகுபடி வாயிலாக மொத்தம், 75,125 ரூபாய் வருமானம் கிடைக்குது. செலவுகள் போக, 52,000 ரூபாய் லாபம்.
கோடை பட்டத்தில் எள் சாகுபடி செய்வது வழக்கம்; 1 ஏக்கருக்கு 200 கிலோ எள் மகசூல் கிடைக்கும். இதை செக்கில் ஆட்டினால், 115 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். 1 லிட்டர் நல்லெண்ணெய், 300 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். 115 லிட்டர் நல்லெண்ணெய் வாயிலாக, 34,500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
எல்லா செலவுகளும் போக, 25,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 1 ஏக்கரில் பாரம்பரிய நெல் மற்றும் எள் சாகுபடி வாயிலாக, ஆண்டுக்கு 77,000 ரூபாய் லாபம் என்பது, என்னை பொறுத்தவரை நிறைவான லாபம் தான்.தொடர்புக்கு: 94873 29849.
*********************
தமிழகம் முழுதும் 'ஹைபர் மார்க்கெட்' திறக்க வேண்டும்!
விழுப்புரம் உட்பட நான்கு நகரங்களில், 'கிரீன்ஸ்' என்ற பெயரில், 'ஹைபர் மார்க்கெட்' நடத்தி வரும் தருண்:
கடந்த, 1919ல் விழுப்புரத்தில் ஸ்ரீ கிருஷ்ண சுதேசி ஹால் என்ற பெயரில் என் தாத்தாவின் தாத்தா, அரசின் அங்கீகாரம் பெற்ற ஜவுளிக்கடை ஒன்றை துவங்கினார்.
பிற்பாடு அவரின் மகன், அவரின் பேரன் என ஜவுளிக்கடை இப்போதும் சிறப்பாக நடந்து வருகிறது.
அதன்பின், ஒரே தொழிலை குடும்பத்தினர் அனைவரும் செய்வதை விட, பிற தொழில்களையும் செய்ய வேண்டும் என நினைத்தனர்.
அதனால் பலசரக்குகளை விற்கும் கடையை திறந்தனர். அடுத்ததாக நகைக் கடை, ஆட்டோ மொபைல் ஷோரூம் திறந்து, கார், பைக்குகளை விற்பனை செய்தனர்.
தற்போது, மஹாலட்சுமி பிளாசா என்ற மால், பள்ளி, மருத்துவமனையும் நடத்தி வருகிறோம். ஜவுளிக் கடையாக ஆரம்பித்த நிறுவனம், இன்று ஸ்ரீமஹாலட்சுமி குரூப்ஸ் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
எங்கள் தொழில் குடும்ப தொழில். குடும்பத்தின் சகோதரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை நடத்தி வருகிறோம்.
தொழில் தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடனும், எங்கள் வயதில் இருக்கும் சகோதரர்களுடனும் தினமும் கலந்து பேசி, முடிவுகளை எடுப்போம்.
பல்வேறு தொழில்களை விரிவாக்கம் செய்த நாங்கள், இப்போது அந்த தொழில்களில் இன்னும் ஆழமாக வேரூன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
என் அப்பா, 1998ல் விழுப்புரத்தில் நியூ ஸ்ரீ எம்.எல்.எஸ்., மளிகை என்ற பெயரில் பலசரக்கு கடை ஒன்றை ஆரம்பித்தார்.
அப்பாவிற்கு நான் மூன்றாவது மகன். 2009ல் படிப்பு முடித்தவுடன், நேராக அப்பாவின் பிசினசில் சேர்ந்து விட்டேன்.
அப்போது அப்பா, 'முதலாளியின் மகன் என்ற நினைப்பில் நிறுவனத்துக்குள் வராதே.
ஓர் ஊழியராக இருந்து, பிசினசில் நடக்கும் அத்தனை நெளிவு சுளிவுகளையும் முதலில் தெரிந்து கொள்' என்றார்.
அதனால், ஊழியர்கள் செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்து, தொழில் சூட்சுமங்களை தெரிந்து கொண்ட பின், 'ஹைபர் மார்க்கெட்' ஒன்றை துவங்கினேன்.
விழுப்புரத்தில் நல்ல வெற்றியைக் கண்ட பின், அடுத்தடுத்த நகரங்களிலும் மார்க்கெட்டை திறக்க முடிவெடுத்து, நாமக்கல், வேலுார், திருக்கோவிலுார் என திறந்தேன்.
முன்பெல்லாம், நன்றாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று தான் நினைப்பேன். ஆனால், தற்போது சமூகத்திற்கு நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிரீன்ஸ் ஹைபர் மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.