/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கச்சேரி முடிந்ததும் கிடைக்கும் கைத்தட்டல்களே எங்களுக்கு விருது!
/
கச்சேரி முடிந்ததும் கிடைக்கும் கைத்தட்டல்களே எங்களுக்கு விருது!
கச்சேரி முடிந்ததும் கிடைக்கும் கைத்தட்டல்களே எங்களுக்கு விருது!
கச்சேரி முடிந்ததும் கிடைக்கும் கைத்தட்டல்களே எங்களுக்கு விருது!
PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி: அப்பா, கோல்கட்டாவைச் சேர்ந்தவர். அம்மா, உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்.
என் தாய்வழி தாத்தா, பாட்டி இருவரும் உ.பி.,யில் இருந்து இடம் பெயர்ந்து, மேட்டுப்பாளையத்தில் குடியேறியவர்கள் என்பதால், குழந்தை பருவத்தில் இருந்து நானும், என் இரு சகோதரிகளும் மேட்டுப்பாளையத்தில் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தோம்.
பள்ளியில், ஆசிரியர்கள் எனக்கு தமிழை சிறப்பாக கற்று தந்தனர். தமிழின் மீதான ஈடுபாடு ஒரு கட்டத்தில் தீராக்காதலாக மாறியது. பள்ளியில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் முதல் பரிசு எனக்கு தான்.
'குரல் வளம் நன்றாக இருப்பதால் இசையில் கவனம் செலுத்தினால் பெரிய பாடகி ஆகலாம்' என ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர். அதனால், பள்ளி காலத்திலேயே கர்நாடக இசை கற்க ஆரம்பித்தேன். தொடர்ந்து இசைப் போட்டிகளில் மாநில அளவிலும் பரிசுகளை குவித்தேன்.
கல்லுாரியில் இளங்கலை இசை படிக்க ஆசைப்பட்டேன். ஆயினும், குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அம்மாவும், ஆசிரியர்களும், ஊர் மக்களும் எனக்காக தாத்தா, அப்பாவிடம் பேச, ஒருவழியாக கல்லுாரியில் படிக்க அனுமதி கிடைத்தது.
இளங்கலை முடித்து, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., சேர்ந்தபோது, கணவர் புஷ்பவனம் குப்புசாமியை சந்தித்தேன். அப்போது அவர், எம்.பில்., முடித்துவிட்டு ஆராய்ச்சி படிப்பில் இருந்தார். அவரது அறிமுகம் தான், மக்களிசையை எனக்கு அறிமுகப்படுத்தியது.
என் குருவும் அவர் தான். எங்கள் நட்பு, காதலாக மாற திருமண பந்தத்தில் இணைந்தோம். கணவர், என் ஆகச்சிறந்த தமிழ் ஆசான். மக்களிசை குறித்தும், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும் அவரிடமே அறிந்து கொண்டேன்.
நானும், கணவருமாக சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட பாடல்களை சொந்தமாக எழுதி பாடுவதுடன், கிராமங்களில் மக்கள் காலங்காலமாக பாடி வந்த மண் மணக்கும் பாடல்களை ஆராய்ச்சியின் வாயிலாக தேடியெடுத்து, அவற்றை மீண்டும் மக்கள் மன்றங்களில் கொண்டு சேர்த்தோம்.
அதேபோல, தமிழ் இலக்கியங்களில் உள்ள ஆழ்ந்த கருத்துகளை எளிமைப்படுத்தி, அவற்றை மக்களிசை மொழியில் கொடுப்பது எங்கள் வழக்கம்.
எண்ணற்ற மேடைகளில் கச்சேரி முடிந்ததும், எங்களுக்கு கிடைக்கும் கைத்தட்டல்களும், எங்களை சூழ்ந்து சொல்லும் பாராட்டுகளும் தான் எங்களுக்கு பெரும் விருதுகள். ஊருக்காக பாடும் கலைஞர்களுக்கு இதைவிட பேறு வேறென்ன வேண்டும்?

