/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
விரும்பி செய்யும் எந்த தொழிலும் கஷ்டமில்லை!
/
விரும்பி செய்யும் எந்த தொழிலும் கஷ்டமில்லை!
PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

சென்னை, பெரம்பூர் பேருந்து நிலையம் எதிரில், இளநீர் வியாபாரம் செய்து வரும் அன்பழகி: என் சொந்த ஊர் மரக்காணம் பக்கத்தில் உள்ள புதுப்பாக்கம். கணவர் பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். திருமணம் முடிந்ததும் சென்னைக்கு வந்து விட்டேன். இதே ஏரியாவில் தான் குடியிருக்கிறோம்.
திருமணமான புதிதில் இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். ஒரு மகன், இரண்டு பெண் குழந்தைகள். வியாபாரத்தில் போதிய வருமானமில்லை; சாப்பாட்டுக்கே சிரமம் வந்தது.
என் தம்பி, இந்த ஏரியாவில் இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். அவனிடம், 'நானும் வியாபாரத்திற்கு வருகிறேன்' என்று கூறினேன்.
அவனும் அழைத்து சென்று, இளநீரை வெட்டுவது, தண்ணீர் இருக்கிறதா என்று எவ்வாறு பார்த்து வாங்குவது என, அனைத்து நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்து, 100 இளநீரும், வண்டியும் வாங்கிக் கொடுத்தான்; அது தான் ஆரம்பம்.
நான் முதன் முதலில் சம்பாதித்த காசில், என் பிள்ளைகளுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொடுத்த அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியவில்லை. 40 ஆண்டுகளாக இங்கு தான் கடை போட்டுள்ளேன். கணவரும், என்னுடன் சேர்ந்து இளநீர் வியாபாரம் செய்ய வந்துட்டார்.
தினமும் காலை 7:00 மணிக்கு சமையல் முடிந்து, இங்கு வந்து விடுவேன். ராத்திரி 8:00 மணி வரை கடையில் தான் இருப்பேன். பிள்ளைகள் பள்ளி விட்டு வந்து, இங்கு உட்கார்ந்து படித்து, சாப்பிட்டு, துாங்கவும் செய்வர்.
பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என அனைத்தும் இந்த வருமானத்தில் தான் நடந்தது.
பொள்ளாச்சியில் இருந்து வாரத்திற்கு குறைந்தது, 500 காய்கள் வரை இறக்குவோம். ஒரு இளநீர் 50 - 60 ரூபாய் வரை விற்கிறோம். ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் வரை லாபம் இருக்கும். வெயில் காலம், மழைக்காலம் பொறுத்து லாபம் கூடும், குறையும்.
மகன் பெரிய ஆள் ஆனதும் எல்லாம் மாறும் என்று நினைத்தேன்; ஆனால், திடீர் என்று நெஞ்சு வலியில் தவறி விட்டான். அவன் மரணம் அடையும்போது, அவன் மகளுக்கு, 2 வயது. மருமகள் வேறு திருமணம் செய்து கொண்டார்.
அதனால், எங்கள் பேத்தியை நாங்களும், என் மகள்களும் தான் பார்த்துக் கொள்கிறோம்.
தற்போது, எனக்கும், என் கணவருக்கும், 60 வயதுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், பேத்தியை வளர்த்து விடுவது வரை, கை, கால் சுகத்துடன் இருக்கணும் என்று தான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். வயதிற்கும், உழைப்புக்கும் சம்பந்த மில்லை. விரும்பி செய்யும் எதுவும் கஷ்டமில்லை.
தொடர்புக்கு
78711 60356