'இன்று தினமும் ரூ.3,500க்கு மேல் சம்பாதிக்கிறேன்!'
'இன்று தினமும் ரூ.3,500க்கு மேல் சம்பாதிக்கிறேன்!'
PUBLISHED ON : அக் 03, 2026 12:00 AM

ஆடைகளில் கம்ப்யூட்டர் மூலம், 'எம்ப்ராய்டரி' செய்து தரும் தொழிலில், மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும், 45 வயதாகும் சசிகலா கண்ணன்:
நான், பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படித்து முடித்ததும் திருமணம் செய்து வைத்து விட்டனர். கணவர் இரும்பு பட்டறை வைத்துள்ளார். எனக்கு சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு முறை சமூக வலைதளங்களில், கம்ப்யூட்டர் மூலமாக துணிகளில் பூ வேலை செய்வது குறித்த காணொளியை பார்த்தேன். அது மிகவும் சுவாரசியமாக இருக்கவே, அது குறித்து தேட ஆரம்பித்தேன்.
கையால் ஊசி, நுால் வைத்து, 'எம்ப்ராய்டரி' செய்வதற்கு பதில், கம்ப்யூட்டரில் டிசைன்களை உருவாக்கி, அதை, 'கம்ப்யூட்டரைஸ்டு எம்ப்ராய்டரி' இயந்திரம் வாயிலாக தைப்பது தான் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி. எம்ப்ராய்டரி போடக்கூடிய இயந்திரத்தை, 1 லட்சம் ரூபாயில் கணவர் வாங்கி தந்தார்.
ஆரம்பத்தில், அருகில் உள்ள துணிக் கடைகளுக்கு சென்று துணிகளை கேட்டு வாங்கி, எம்ப்ராய்டரி செய்து கொடுத்தேன். இருந்தாலும், வாடிக்கையாளர்கள் கிடைப்பது பெரிய சவாலாகவே இருந்தது.
நான் உருவாக்கும் வடிவங்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தேன்; அதன் வாயிலாக, 'ஆர்டர்'கள் வர ஆரம்பித்தன. கணவர் வாங்கி கொடுத்த இயந்திரத்திற்கான பணத்தை ஒரே ஆண்டில் சம்பாதித்து அவரிடம் கொடுத்தேன்.
அடுத்து, வங்கியில் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி பெரிய இயந்திரம் வாங்கினேன். 'யூ டியூப் சேனல்' துவங்கி, காணொளிகள் பதிவிட ஆரம்பித்தேன். இப்போது ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இருப்போர் புடவைகள் ஆர்டர் செய்து, எனக்கு அனுப்பி விடுவர். நான் அவற்றில் எம்ப்ராய்டரி செய்து, அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரியில் பல நிறங்கள் சேர்த்து செய்து கொடுக்க முடியும். பல வண்ணங்களின் கலவையில், எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஷூ, கைக்குட்டை, தலையணை, புடவை, சுடிதார், குழந்தைகளுக்கான ஆடைகள் என அனைத்திலும் செய்து தருகிறோம்.
இப்போது என் நிறுவனத்தில் ஏழு பெண்கள் வேலை பார்க்கின்றனர். தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் சாப்பிடக்கூட நேரம் இல்லாத அளவு வேலை அதிகம் இருக்கும். நான் இந்த தொழிலை ஆரம்பித்தபோது, ஒரு நாளைக்கு 300 ரூபாய் கிடைத்தால் போதும் என்று நினைத்தேன். இப்போது தினசரி, 3,500 ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது; மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறேன்.
