/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தமிழ் முறை திருமணம் நடத்துகிறோம்!
/
தமிழ் முறை திருமணம் நடத்துகிறோம்!
PUBLISHED ON : செப் 30, 2024 12:00 AM

பந்தல் முதல் உணவு வரை, தமிழ் அழகியலோடு வடிவமைத்து தரும், 'விழா' என்ற நிறுவனத்தைச் சேர்ந்த, ஆகாஷ் முரளிதரன்: நான், சஞ்சனா மற்றும் தர்ஷினி மூன்று பேருமே ஆர்க்கிடெக்ட். படிப்பை முடிச்சு தனித்தனி பாதையில் போயிட்டோம். கொரோனா காலக்கட்டத்தில், தர்ஷினிக்கு நடந்த திருமண ஏற்பாடு தான் எங்களை திருப்பி சேர்த்துச்சு.
கொரோனா இரண்டாவது அலை பெருந்தொற்றின் காரணமாக, திருமணத்தை மண்பத்தில் நடத்த முடியாத சூழலில், தர்ஷினியின் தந்தை அவரது பண்ணை வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டார்.
மேலும், இயற்கை விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வமும், தமிழ் முறை திருமணமும் எங்களுக்கு வித்தியாசமாக செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
எங்கள் விழா நிகழ்ச்சி நடத்தும் கல்யாண துணியில், பாலியஸ்டர் அறவே கிடையாது. பருத்தி ஆடையாக வடிவமைத்தோம். விருந்தும், இயற்கை முறைப்படி பனை வெல்லம் வைத்து செய்தோம்.
அலங்காரமும் வாழை மரம், போகன்வில்லா பூக்கள், மாவிலை, கனகாம்பரம், எலுமிச்சை தோரணம், பனங்குருத்து தோரணம், தென்னங்கீற்று, கோழிக் கொண்டை, வாடா மல்லி, இளநீர், நுங்கு என எல்லாமே இயற்கையான பொருட்களை வைத்து செய்தோம்.
தண்ணீர் குடிக்க மண்பானை தொட்டி முதல், தாம்பூலப் பையாக பனை ஓலைப் பெட்டி வரை பிளாஸ்டிக் இல்லாமல் பார்த்துக் கொண்டோம்.
இந்த திருமண புகைப்படங்களை போட்டோகிராபர்கள் இணையத்தில் பதிவிட, அது வைரலாகி, 'தங்களுக்கும் இதுபோன்று திருமணத்தை வடிவமைத்து தர முடியுமா?' என்று பலரும் கேட்டனர்.
அதுவே, திருப்புமுனையாக அமைய, நாங்கள் மூன்று பேருமே எங்கள் வேலை களை துறந்து, 'விழா' நிறுவனத்தை துணிந்து துவங்கினோம்.
அடுத்து, 'சாப்பிடலாமா' என்று, சின்ன சின்ன விருந்து நிகழ்ச்சிகளை வித்தியாசமான பாணியில், இரவு விருந்துகளை ஏற்பாடு செய்தோம்.
அங்கு நடிகர் அசோக் செல்வனின் அக்கா நட்பு கிடைக்க, ஒரு விருந்தில் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தியும், அசோக்செல்வனும் பங்கேற்றனர். இதுவே பின்னாளில் அவர்களின் திருமண வடிவமைப்பை செய்ய காரணமானது.
எங்கள் வடிவமைப்பு பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், அதைச் செய்ய நேரம் தேவை. பொருளாதார சுதந்திரம் கொண்ட தம்பதியர் எங்களை அணுகுவதால், இப்போது வரை சுதந்திரமாக வேலை செய்ய முடிகிறது.
எங்களுடன் நிறைய கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், ஓவியர்கள் வேலை பார்க்கின்றனர். அதே போல, நலிந்த கலைஞர்களை அதிகமாக எங்கள் நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துகிறோம்.
ஏனெனில் திருமணம் என்பது ஆசீர்வாதமான தருணம். அது, இதுபோன்ற மனிதர்களுக்கு வாழ்வாதாரம் தந்தால், ரொம்ப அர்த்தமுள்ளதாக இருக்கும்!

