/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
50,000 தமிழ் பெயர்களை உருவாக்கி உள்ளோம்!
/
50,000 தமிழ் பெயர்களை உருவாக்கி உள்ளோம்!
PUBLISHED ON : நவ 18, 2024 12:00 AM

அமெரிக்காவில், தமிழுக்கு தொண்டாற்றியது குறித்து கூறுகிறார், பார்த்தசாரதி:
நான் சார்ந்தது, சாதாரண விவசாயக் குடும்பம். மயிலாடுதுறை, ஏ.வி.சி., கல்லுாரியில் தான் படித்தேன். முழுக்க தமிழக அரசோட உதவியால் படித்தவன் நான்.
அந்த உதவிகள் கிடைக்கவில்லை எனில், நான் பிறந்த, பரிவிளாகம் என்ற ஊருக்குள்ளேயே என் உலகம் சுருங்கி இருக்கும்.
பி.எஸ்சி., முடித்ததும் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது... நல்ல சம்பளம். அங்கு வேலை செய்தபடியே, எம்.சி.ஏ., - எம்.எஸ்., முடித்தேன். ஒரு பெரிய நிறுவனம், 'டெக்னிக்கல் லீடராக' என்னை, அமெரிக்கா அனுப்பியது.
எவ்வளவு பண வசதிகள் இருந்தாலும், அமெரிக்க வாழ்க்கையில் தனிமை பெரிய பிரச்னையாக இருந்தது. அதையடுத்து, என் மனைவியும், நானும், தீபாவளிக்கு, தெரிந்த தமிழர்களை வீட்டுக்கு அழைத்தோம்; 25 பேர் வந்தனர்.
அந்த சந்திப்பு, ஒரு நல்ல புரிதலை உருவாக்கியது. அதற்கு பின், எங்கள் வீடு ஒரு சந்திப்பு கூடமாக மாறியது. அந்த சந்திப்பு விரிவடைந்து, 'நாம் இங்கே வசதியாக இருக்கோம். நமக்கு வேராக இருந்த நம் ஊருக்கு ஏதாவது செய்யணும்' என யோசித்தோம். நிதி திரட்டி, அதை செய்ய ஆரம்பித்தோம்.
அந்த சூழலில், வாஷிங்டன் தமிழ் சங்கத் தலைவர் பொறுப்புக்கு என்னை தேர்வு செய்தனர். அப்போது வயது, 38. எந்தெந்த வகையில் எல்லாம் நம் பண்பாட்டையும், வாழ்வியலையும், அமெரிக்காவாழ் தமிழ் மக்களோட இணைக்க முடியுமோ அதை எல்லாம் அந்த தருணத்தில் செய்தேன்.
என் கல்லுாரி தோழன் சுரேஷ் வாயிலாக, வலைத்தமிழ் தளத்தை உருவாக்கினேன். தமிழ் சமூகத்துக்கான ஒரு ஆவணப் பெட்டகமாக அதை மாற்றியிருக்கிறோம்.
ஒரு குழு அமைத்து, தமிழ் பெயர்களை திரட்ட ஆரம்பித்தேன். 1.1 லட்சம் பெயர்களை தொகுத்து, கலப்பில்லாத தமிழ் பெயர் தானா என்பதை உறுதிசெய்து, வலைத்தமிழில் பதிவிட்டோம். 50,000 பெயர்களை நுாலாகவும் வெளியிட்டிருக்கிறோம்.
உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் அமைப்பை ஆரம்பித்து, திருக்குறளுக்கு என, கம்ப்யூட்டர் தேடுபொறியை உருவாக்கியிருக்கிறோம்.
'குறள் ஆடியோ' என ஒரு மொபைல் போன் செயலியை உருவாக்கியிருக்கிறோம். தமிழகத்திலும், மாவட்டத்துக்கு ஒரு திருக்குறள் நெறியாளரை ஆசிரியராக அமர்த்தி, திருக்குறள் பயிற்சி மையத்தை உருவாக்கியிருக்கிறோம்.
வலைத்தமிழ் கல்விக்கழகம் வாயிலாக தமிழிசை கற்று தருகிறோம்; 38 நாடுகளில், 24 மணி நேரமும் அது இயங்குகிறது. தமிழ் மொழி, சதிராட்டம், பண்ணிசை, சிலம்பம், கலைகள், திருவருட்பா வகுப்புகளும் நடக்கின்றன.
பிள்ளைகளை தமிழகத்திலேயே வளர்க்க ஆசைப்பட்டோம். அதனால் சில ஆண்டுகளுக்கு முன் கிளம்பி, தமிழகம் வந்து விட்டோம்!