/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பெண்களுக்கு மூலிகை கஞ்சி வழங்குகிறோம்!
/
பெண்களுக்கு மூலிகை கஞ்சி வழங்குகிறோம்!
PUBLISHED ON : ஆக 11, 2025 12:00 AM

கடந்த, 26 ஆண்டுகளாக, ஏழைகளுக்கு இலவசமாக மூலிகை கஞ்சி அளித்து வரும், திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த விஜயலட்சுமி: என் அப்பா தம்பையா, கடந்த, 40 ஆண்டு களுக்கு முன், வெறும் , 200 ரூபாயுடன் தஞ்சாவூர் வந்தார். நாங்கள் சித்த வைத்தியம் பார்க்கும் குடும்பம்.
திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் போன்றவற்றை கற்று , உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி, என் தந்தை பிரபலமானார். பல நாடுகளுக்கு சென்று சித்த வைத்தியம் பார்ப்பதும் அவரது வழக்கம்.
தஞ்சாவூர் மாதா கோட்டை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த என் தந்தை, அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை வாயிலாக, தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை நுழைவாயிலில், கர்ப்பிணியர், குழந்தை பெற்ற பெண்கள் உள்ளிட்ட, 500 பேருக்கு காலை சுடுகஞ்சியும், மதிய உணவும் தினமும் வழங்கி வந்தார்.
ஆரம்பத்தில் சில நாட்கள், இங்குள்ள கோவில் வளாகத்தில் சமைத்து காரில் எடுத்துச் சென்று, சோழன் சிலை அருகில் உள்ள திலகர் திடலில் , 200க்கும் மேற்பட்டவர் களுக்கு அன்னதானம் அளிப்பார்.
அதன் பின், ராசா மிராசுதார் மருத்துவமனையில் கொடுக்க ஆரம்பித்தார். ஏனெனில், அங்கு ஏழை கர்ப்பிணியர் சிகிச்சைக்கு வருவர்.
அவர்கள் உடல் நலத்துடன் இருக்க, 26 ஆண்டுகளுக்கு முன், மூலிகை சுடுகஞ்சி வழங்குவதை துவங்கினார். வயது முதிர்வு காரணமாக, கடந்தாண்டு தான், தன் 72வது வயதில் இறந்தார்.
சீரக சம்பா அரிசியில் சோறு வடித்து, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி, வதக்கி சோற்றில் சேர்த்து கிளறி, மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்து பொடி செய்து சோற்றில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் கொத்த மல்லி, புதினா இலைகளை பச்சையாக போட்டு கிளறி, மூலிகை சுடுகஞ்சி தயார் செய்வோம்.
இதை சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.
சிங்கப்பூரில் கணவர் வேலை செய்கிறார். நான், 'பிளானிங் இன்ஜினியர்' ஆக உள்ளேன். அப்பாவை குருவாக பின்தொடர்ந்த தால், அவர் செய்து வந்த சேவையை தொடர்கிறோம். அப்பா இறந்த அன்று கூட, சுடுகஞ்சியும், உணவும் தயார் செய்து அனுப்பினோம்; ஏழை களுக்கான அடுப்பு அணையவில்லை.
நானும் சித்த மருத்துவம் பார்ப்பேன் . அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் இந்த அறப்பணியை செய்து வருகிறேன்.
அன்னதானம் செய் வதற்காக நாங்கள் இதுவரை எவரிடமும் பணம் கேட்டது இல்லை. இந்த அடுப்பு இனியும் நிற்காமல் எரியும்!
தொடர்புக்கு
75388 81378