/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உடம்பில் தெம்பு இருக்கிற வரை உழைக்கணும்!
/
உடம்பில் தெம்பு இருக்கிற வரை உழைக்கணும்!
PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

மூத்த நட்சத்திர தம்பதியான திலகம் - ராஜசேகர்:
திலகம்: நடிகர் அசோகன் சார், 'ட்ரூப்'ல இருவரும் சேர்ந்து, ஒன்பது ஆண்டுகள் மேடை நாடகங்களில் நடித்தோம். இவர் அதிகம் பேச மாட்டார்; ஒழுக்கமான கேரக்டர்.
எனக்கேற்ற ஆளாக இருப்பார் எனக் கருதி, 'என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என்று கேட்டேன். இருவரும் பேசிக் கொள்வதற்காகவே, எங்கள் வீட்டுக்கு லேண்ட்லைன் போன் வாங்கிக் கொடுத்தார்.
இவர் முழுநேர ஆபீஸ் வேலைக்கு போயிட்டிருந்தார்; நடிப்பு ஆர்வத்தால், 'பார்ட் டைமா ஆக்டிங்'கும் பண்ணார். ஆனால், எனக்கு சினிமா தான் புரொபஷன்; 16 வயதில் டான்சரா அறிமுகமாகி, நடிகையானேன்.
மூன்று படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளேன். சொந்த வீடு கட்டுற வைராக்கியத்தில் இருந்தேன். அதற்கும், இவர் பண உதவி செய்தார். காதலித்த போதே சுக, துக்கம் எல்லாவற்றிலும் பங்கெடுத்தோம்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், சோ, சிவகுமார் ஆகியோருக்கு அம்மாவாக பல படங்களில் நடித்துள்ளேன். இவர்கள் அனைவருமே என்னைவிட வயதில் பெரியவர்கள்.
அவ்வளவு ஏன்... பல மேடை நாடகங்களில் அசோகன் சாரும், நானும் கணவன் - மனைவியாக நடித்தோம்; எங்களுக்கு பிள்ளையாக, ராஜசேகர் தான் நடிப்பார். ஒரு படத்தில் கூட நாங்கள் சேர்ந்து நடிக்கவில்லை.
ராஜசேகர்: எங்கள் இருவருக்குமே, 'பேமிலி கமிட்மென்ட்ஸ்' இருந்தது. இதில், அதிகமாக சிரமப்பட்டது திலகம்தான். அவர், தன் கடமைகளை முடிக்கிற வரை காத்திருந்தேன்.
அதனால் என், 45வது வயதில்தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் திட்டமிட்டபடியே, திருமணத்துக்குப் பின் இப்போது வரை, பொருளாதார சிரமங்கள் இன்றி, நிம்மதியாக வாழ்கிறோம்.
குழந்தையில்லாமல் போனது உட்பட சில சந்தோஷங்களை இழந்திருக்கிறோம்; அதற்காக வருத்தப்படவில்லை. திலகத்திற்கு நானும், எனக்கு அவளும் குழந்தை.
எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கைக்கு பழகி விட்டால், வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. எங்களுக்கும் சில மனஸ்தாபங்கள் வரும்; ஆனால், பிடிவாதம் பிடிக்காமல் யாராவது விட்டுக் கொடுத்து போயிடுவோம்.
உடம்பில் தெம்பு இருக்கிற வரை உழைக்கணும். அதனால்தான் இப்போதும் சினிமா, சீரியல்களில் தொடர்ந்து நடிக்கிறோம். எங்களுக்கு வயதாகி விட்டது என்று மனதளவில் நாங்கள் நினைப்பதே இல்லை.
எல்லா விதத்திலும் நமக்குள் சரியான புரிந்துணர்வு இருக்கணும் என்ற குறிக்கோளுடன் இருந்தால், காதலும், கல்யாண பந்தமும் கடைசி வரை தொடரும்.

