/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பஞ்., தலைவர்கள் வாங்கிய கடனை கட்டுவது யார்?
/
பஞ்., தலைவர்கள் வாங்கிய கடனை கட்டுவது யார்?
PUBLISHED ON : ஏப் 06, 2025 12:00 AM

''சொந்த செலவுல புனரமைக்க அனுமதி கேட்டிருக்காரு பா...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யாரு, எதை புனரமைக்க போறது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதுார்ல இருக்கிற முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவிடத்தை, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தான் பராமரிக்குது... ராஜிவ் நினைவிட பொறுப்பாளரும், காங்., 'மாஜி' எம்.எல்.ஏ.,வுமான முருகானந்தம் ஏற்பாட்டுல, விலை உயர்ந்த கிரானைட் கற்களால நடைபாதை மற்றும் கல் பெஞ்சுகளை அமைச்சிருந்தாங்க பா...
''இப்ப, இவை எல்லாம் சிதிலமடைஞ்சு கிடக்கு... இதை புனரமைக்கும்படி, மத்திய அமைச்சகத்துக்கு முருகானந்தம் மனு மேல மனு அனுப்பியும்
நடவடிக்கை இல்ல பா...
''இந்த சூழல்ல, காங்., முன்னாள் தலைவர் சோனியாவை, டில்லியில் சமீபத்துல முருகானந்தம் பார்த்து பேசியிருக்காரு... அப்ப, 'நானே என் சொந்த செலவுல நினைவிடத்துல கிரானைட் கற்கள் பதிக்கட்டுமா'ன்னு
கேட்டிருக்காரு பா...
''அதுக்கு சோனியா, 'உங்களுக்கு எதுக்கு வீண்செலவு... மத்திய அரசிடம் பேசி நானே ஏற்பாடு பண்றேன்'னு சொல்லி அனுப்பியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மகன் பிறந்த நாளை தடபுடலா கொண்டாடியிருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தன் பிறந்த நாளை பெருசா கொண்டாட மாட்டார்... ஆனா, சமீபத்துல அவரது மகன் துரை வைகோ பிறந்த நாளை, கட்சியினர் தடபுடலா கொண்டாடியிருக்கா ஓய்...
''முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள்ல உணவு வழங்குறது, தண்ணீர் பந்தல் அமைக்கறது உள்ளிட்ட நலத்திட்டங்களை செஞ்சிருக்கா... அந்த கட்சியின் ஐ.டி., அணி நிர்வாகிகள், 'ஹேப்பி பர்த்டே துரை வைகோ'ன்னு, சமூக வலைதளத்துல ஏத்தி, தேசிய அளவுல பரப்பிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கடனை எப்படி வசூலிக்கிறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருவே அது...'' என கேட்டார், அண்ணாச்சி.
''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 கிராம பஞ்சாயத்துகள் இருக்கு... இங்க, தலைவர்கள் பதவியில இருந்தப்ப, குடிநீர் குழாய்கள் மற்றும் தெருவிளக்கு பராமரிப்புக்கு தனியார் கடைகள்ல உதிரி
பாகங்களை கடனுக்கு வாங்கியிருந்தாங்க...
''பஞ்சாயத்து கூட்டத்துல பில்களை வச்சு, பணம் தர்றதா வாக்குறுதி குடுத்திருந்தாங்க... ஜன., 5ம் தேதியுடன் பஞ்., தலைவர்கள் பதவிக்காலம் முடிஞ்சு, தனி அலுவலர் கட்டுப்பாட்டுக்கு நிர்வாகம் போயிடுச்சுங்க...
''பல பஞ்சாயத்து தலைவர்கள், பில் தொகையை வழங்காம, துண்டை உதறித் தோள்ல போட்டுட்டு வீட்டுக்கு போயிட்டாங்க... பல பஞ்சாயத்துகள்லயும், தனியார் கடைகளுக்கு பல லட்சம் ரூபாய் பாக்கி இருக்காம்...
''கடை உரிமையாளர்கள், பணம் கேட்டு பஞ்சாயத்து செயலர்களுக்கு நெருக்கடி தந்தாங்க... 'இதை நாங்க எப்படி அடைக்கிறது'ன்னு அவங்க திருப்பிக் கேட்கிறாங்க... இதனால, கடை உரிமையாளர்கள், பணம் கிடைக்குமா, கிடைக்காதான்னு
பரிதவிப்புல இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.