PUBLISHED ON : செப் 29, 2011 12:00 AM

மந்திரிகள் எண்ணிக்கை உயர்ந்ததன் பின்னணி...!''நகராட்சித் தலைவரை அ.தி.மு.க., மாத்துனதுக்கு பின்னணியில ஒரு ருசியான மேட்டர் இருக்கு பா...!'' என விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய்.
''சொல்லும் ஓய்...'' என, ஆர்வமானார் குப்பண்ணா.
''கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., நகர செயலர் குமரனை வேட்பாளரா அறிவிச்சாங்க பா...
அடுத்த சில நாள்ல, அவரை மாத்திட்டு, தினகரனுக்கு நெருக்கமான, சுப்பிரமணியனை அறிவிச்சிட்டாங்க...
''அன்னிய செலாவணி மோசடி வழக்குல சிக்கி, தினகரன் சிறையில இருந்தப்ப, சுப்பிரமணியன் தினமும் அறுசுவை உணவு தயாரித்து கொடுத்திருக்காரு... இந்த நட்பு காரணமாக,
அவரது மகன் திருமணத்தையும் தினகரன் நடத்தி வச்சிருக்காரு...
''தலைவர் வேட்பாளரா நகர செயலரை அறிவிச்சதும், மனம் தளராத சுப்பிரமணியன், தினகரன் உதவியை நாடினாரு பா... அவரும் நன்றிக் கடனாக, பேச வேண்டிய இடத்துல பேசி, சுப்பிரமணியனுக்கு சீட்டை மாத்த வச்சிட்டாரு...'' என்றார் அன்வர்பாய்.
''உள்ளாட்சித் தேர்தலால ஒரு வழியா தப்பிச்சுட்டோம்ன்னு ரயில்வே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடறா ஓய்...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''உள்ளாட்சித் தேர்தலுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் என்ன சம்பந்தம் வே...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''மன்னார்குடியிலிருந்து, சென்னைக்கு சமீபத்துல ரயில் விட்டா ஓய்... ரயில்வே நிலைக்குழு தலைவரா இருக்கற, மாஜி மத்திரி டி.ஆர்.பாலு தான் இதுக்கு முயற்சி செஞ்சார்னு சொல்லி, இந்த விழாவோடு, அவருக்கு பாராட்டு விழா நடத்த தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் திட்டம் போட்டிருந்தா...
''துவக்க விழா அழைப்பிதல்ல தி.மு.க.,வினர் பேரை நிறைய போட வேண்டிய நிலை வந்தது...
அப்படி போட்டா ஆளுங்கட்சி டென்ஷன் ஆயிடுமேன்னு ரயில்வே அதிகாரிகள் தவிச்சிட்டிருந்தா... நல்ல வேளையா, மாநில தேர்தல் கமிஷன், உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிச்சதால, விழா நடத்தாம அதிகாரிகளே கொடியை காட்டி ரயிலை ஓட விட்டுட்டா... 'தேர்தலால சிக்கல்ல இருந்து தப்பிட்டோம்'னு நிம்மதி பெருமூச்சு விட்டுண்டிருக்கா...'' என்றார்
குப்பண்ணா.
''மந்திரிகள் எண்ணிக்கை அதிகமாயிருச்சுங்க...'' என, வேறு விவகாரத்தில் நுழைந்தார் அந்தோணிசாமி.
'' மந்திரிசபையில மாற்றம் நடக்கலையே வே...'' என்றார் அண்ணாச்சி.
''திருச்சி இடைத்தேர்தல் பணிக்காக ஆறு மந்திரிகள் அடங்கிய குழுவை ஆளுங்கட்சி நியமிச்சு இருந்துச்சுங்க... அவங்களும் தொகுதியில் தீவிரமா தேர்தல் பணி பார்க்கத் துவங்கிட்டாங்க... இதுக்கு இடையில, தி.மு.க., வேட்பாளரா நேருவை அறிவிச்சதும், உளவுத்துறை அவசரமா ஒரு சர்வே எடுத்ததுங்க... 'தேர்தல் போட்டி கடுமையா இருக்கும்'னு சொல்லிருக்காங்க... உடனே, தேர்தல் பணி பார்க்கும் அமைச்சர்களின் எண்ணிக்கையை பதினாறு பேரா உயர்த்திட்டாங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி; பெஞ்ச் அமைதியானது.