/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வெளிமாநில, 'சரக்கு' விற்கும் மதுக்கூடம்!
/
வெளிமாநில, 'சரக்கு' விற்கும் மதுக்கூடம்!
PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM

''கோர்ட் தீர்ப்பையே மதிக்காம இருக்காங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில, தனியார் நிறுவனம் ஒண்ணு செயல்படுதுங்க... அந்த நிறுவனம், காட்டாங்கொளத்துார், திருப்போரூர், பரங்கி மலை, குன்றத்துார் ஒன்றியங்கள்ல அடங்கிய ஊராட்சிகள்ல பல பணிகளை, 'டெண்டர்' எடுத்து செய்யுதுங்க...
''அதாவது, குடிநீர் குழாய்கள், போர்வெல் அமைக்கிறது, பழுது பார்க்கிறது மாதிரியான பணிகளை செய்யும்... இந்த நிறுவனம், 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகள்ல செய்த பணிகளுக்கு மேற்கண்ட, பி.டி.ஓ., ஆபீஸ்கள்ல இருந்து, 2.70 கோடி ரூபாய்க்கு மேல பில் தொகை பாக்கி இருக்குதுங்க...
''பல வருஷமா கேட்டும் வராததால, ஐகோர்ட்ல அந்த நிறுவனம் வழக்கு போட்டுச்சு... இதுல, நிலுவைத் தொகையை, 18 பர்சன்ட் வட்டியுடன் வழங்கும்படி போன வருஷம் ஜூலையில், ஐகோர்ட் உத்தரவு போட்டுச்சுங்க...
''ஆனா, ஒரு வருஷம் கடந்தும், இன்னும் நிறுவனத்துக்கு பணத்தை அதிகாரிகள் செட்டில் பண்ணலைங்க... நிறுவனத்தின் உரிமையாளரான, 70 வயது முதியவர், அரசு அலுவலக படிகள்ல ஏறி இறங்கிட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கோவில் நிர்வாகம் மேல பயங்கர கோபத்துல இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவில்ல, சமீபத்துல ஆடிக்கிருத்திகை விழா நடந்துச்சோல்லியோ... இதுக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திராவுல இருந்து, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து வந்திருந்தா ஓய்...
''இவா, மலைக்கோவில் காவடி மண்டபத்துல உற்சவருக்கு காவடியை செலுத்திட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைச்சு தரிசனம் செய்வா... ஆனா, இந்த வருஷம் காவடி மண்டபத்துல தேங்காய் உடைக்கவும், கற்பூரம் ஏத்தவும் கோவில் நிர்வாகம் தடை போட்டுடுத்து ஓய்...
''தேர் வீதியில போய் எல்லாத்தையும் பண்ணுங் கோன்னு போலீசாரை விட்டு, பக்தர்களை கழுத்தை புடிச்சு தள்ளாத குறையா அனுப்பிட்டா... 'நாங்க பல, நுாறு கி.மீ., காவடிகளை சுமந்து வந்து, காவடி மண்டபத்துல நேர்த்திக்கடன் செலுத்துறது தான் வழக்கம்... இந்த வருஷம் புது நடைமுறையை கொண்டு வந்ததுல, எங்களுக்கு திருப்தியில்லை... அடுத்த வருஷமாவது, பழைய முறையை அமல்படுத்தணும்'னு பக்தர்கள் குமுறிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வெளிமாநில சரக்கு களை விற்குறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், அண்ணாச்சி.
''சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை பகுதியில் உள்ள ஹோட்டல் வளாகத்துல, மதுக்கூடமும் இயங்குது... பக்கத்துலயே சாய்பாபா கோவில் இருக்கிறதால, பக்தர்களுக்கு தொல்லையா இருக்குன்னு, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு பல புகார்கள் போயும், நடவடிக்கை எடுக்கல பா...
''இந்த சூழல்ல, சமீபத்துல, நள்ளிரவுல ஒரு மர்ம கார், மதுக் கூடத்தின் பின்பக்கமா வந்து, மதுபானங்களை இறக்கிட்டு போயிருக்கு... எல்லாமே வெளிமாநில சரக்குகளாம் பா...
''இந்த காட்சிகள், கேமராவுலயும் பதிவாகியிருக்கு... இதை ஆதாரமா காட்டியே, 'மதுக்கூடத்தின் மீது நடவடிக்கை எடுங்க'ன்னு போலீஸ் அதிகாரிகளுக்கும், கலால் துறைக்கும், சாய்பாபா பக்தர்கள் புகார் அனுப்பியிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.