/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் த.மா.கா.,
/
அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் த.மா.கா.,
PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM

''உதயநிதியை வெளியே போங்கன்னு சொல்லிட்டாருப்பா...'' என, பரபரப்பான தகவலுடன் பெஞ்சில் ஆஜரானார் அன்வர்பாய்.
''யாருங்க அந்த தைரியசாலி...'' என, ஆச்சரியப்பட்டார் அந்தோணிசாமி.
''இது, பக்கத்து ஸ்டேட்ல நடந்த சம்பவம்... 'சனாதனத்தை ஒழிக்கணும்'னு உதயநிதி பேசியது சம்பந்தமா, நாடு முழுக்க அவர் மேல பலரும் வழக்கு தொடர்ந்தாங்களே பா...
''இதுல, பெங்களூர்லயும் பரமேஷ்னு ஒருத்தர் வழக்கு போட்டாரு... இந்த வழக்குல, சமீபத்துல பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்துல உதயநிதி ஆஜராகி ஜாமின் வாங்குனாரு பா...
''முதல் நாளே பெங்களூரு வந்து, தன் அத்தை செல்வி வீட்டுல தங்கியவர், மறுநாள் காலையில கோர்ட்டுக்கு வந்தார்... அவர் வழக்கு விசாரணைக்கு வர்றதுக்கு முன்னாடி, அங்க இருந்த அரசு வழக்கறிஞர் அலுவலகத்துல அமர்ந்திருந்தாரு பா...
''இதை பார்த்து மனுதாரர் பரமேஷ், கோபமாகிட்டாரு... அங்க வந்து, 'சார் உங்க மேல குற்றச்சாட்டு இருக்கு... அதுக்காக ஆஜராக வந்த நீங்க, அரசு வக்கீல் ஆபீஸ்ல எல்லாம் உட்கார கூடாது... முதல்ல எழுந்து வெளியே போங்க'ன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு... உதயநிதியும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காம, சட்டுன்னு எழுந்து போயிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''வேன்கள் ரெடி பண்ணி ஏமாந்து போயிட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துல, தி.மு.க., அரசை கண்டிச்சும், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், தமிழகம் முழுக்க 100 இடங்கள்ல புதிய தமிழகம் கட்சி சார்புல சமீபத்துல ஆர்ப்பாட்டம் நடத்துனாங்கல்லா...
''சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி தரல... ஆனா, தடையை மீறி அக்கட்சியின் மாநில நிர்வாகி பிரகாஷ் பாண்டி யன் உட்பட எண்ணி 11 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்காவ வே...
''ஆர்ப்பாட்டத்துல நுாற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் வருவாங்கன்னு எதிர்பார்த்த போலீசார், அவங்களை கைது பண்ணி அழைச்சிட்டு போக, நாலஞ்சு வேன்களை தயாரா வச்சிருந்தாவ... ஆனா, 11 பேரை பார்த்து நொந்து போயிட்டாவ... அவங்களையும் கைது பண்ணாம, பெயர், முகவரிகளை மட்டும் எழுதி வாங்கிட்டு அனுப்பிட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''நானும் ஒரு ஆர்ப்பாட்ட தகவல் தரேன் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''லோக்சபா தேர்தல்ல பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., மூணு தொகுதியில போட்டியிட்டு, தோத்து போயிடுத்தோல்லியோ... இந்த சூழல்ல, கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், சமீபத்துல, வாசன் தலைமையில நடந்துது ஓய்...
''இதுல பேசிய பலரும்,'வர்ற சட்டசபை தேர்தல்ல மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கணும்'னு வலியுறுத்தியிருக்கா... அதுக்கு வாசன், 'கூட்டணி பத்தி இப்ப பேச வேண்டாம்... கட்சி கட்டமைப்பை பலப்படுத்துறது பத்தி மட்டும் பேசுங்க'ன்னு சொல்லிட்டாராம் ஓய்...
''அப்பறமா, 'போக்கு வரத்து கழகங்கள்ல காலி பணியிடங்களை நிரப்பணும்... ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனே வழங்கணும்' என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கம் சார்புல, சென்னை பல்லவன் சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினா ஓய்...
''இதுல, த.மா.கா., தொழிற்சங்க மாநில நிர்வாகி கே.ஜி.ஆர். மூர்த்தியும் கலந்துண்டார்... இதன் வாயிலா, 'அ.தி.மு.க., - த.மா.கா., கூட்டணிக்கு அச்சாரம் போட்டாச்சு'ன்னு ரெண்டு கட்சி தொண்டர்களும் சொல்லிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.