/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆளுங்கட்சி நிர்வாகி மீது வழக்கு; அதிகாரி துாக்கியடிப்பு!
/
ஆளுங்கட்சி நிர்வாகி மீது வழக்கு; அதிகாரி துாக்கியடிப்பு!
ஆளுங்கட்சி நிர்வாகி மீது வழக்கு; அதிகாரி துாக்கியடிப்பு!
ஆளுங்கட்சி நிர்வாகி மீது வழக்கு; அதிகாரி துாக்கியடிப்பு!
PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM

''இணையதளம் அடிக்கடி முடங்கிடுது வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்றது, மின் வாரிய செயல்பாட்டை கண்காணிப்பது, வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையிலான வழக்குகளை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் செய்யுது... நீதிமன்ற அதிகாரம் உடைய ஆணையத்தின் தலைமை அலுவலகம், சென்னை கிண்டியில் இருக்கு வே...
''மின்சார விதிகள் தொடர்பா, ஆணையம் அடிக்கடி பல உத்தரவு களை போடுது... அவற்றை அதன் இணையதளத்தில் மட்டுமே தெரிஞ்சுக்க முடியும்... இதனால, அந்த இணையதளத்தை பலரும் தொடர்ந்து பார்ப்பாவ வே...
''ஆனா, இந்த இணையதளம் சர்வர் பாதிப்பால, அடிக்கடி முடங்கி போயிடுது... இதனால, ஆணையத்தின் உத்தரவுகளை தெரிஞ்சுக்க முடியாம, பலரும் சிரமப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அ.தி.மு.க.,வுல லிஸ்ட் எடுத்து வச்சிருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''அ.தி.மு.க., சார்புல, 40 லோக்சபா தொகுதிகள்லயும் தேர்தல் வேலைகள் எப்படி நடந்துச்சுன்னு கள ஆய்வு நடத்தியிருக்காங்க... அதாவது, ஓய்வு பெற்ற 20 போலீஸ் அதிகாரிகள் குழுவை, பழனிசாமி நியமித்து, அவங்களும் தமிழகம் முழுக்க ரகசியமா ஆய்வு நடத்தி, அறிக்கை குடுத்திருக்காங்க...
''வர்ற ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியான பின், அந்த அறிக்கையில இருக்கிற தகவல்களையும், முடிவுகளையும் ஒப்பிட்டு பார்க்க பழனிசாமி முடிவு செஞ்சிருக்காருங்க... அ.தி.மு.க.,வில் 14 சார்பு அணிகள் இருக்குது... பல மாவட்டங்கள்ல, இந்த அணி நிர்வாகிகள் சரியாவே தேர்தல் வேலை பார்க்கலைன்னு அறிக்கையில சொல்லியிருக்காங்க...
''அதே நேரம், கட்சிக்கு விஸ்வாசமா மாங்கு மாங்குன்னு வேலை பார்த்தவங்க பற்றியும் அந்த அறிக்கையில குறிப்பிட்டிருக்காங்க... இவங்களுக்கு, கட்சியில பதவி உயர்வு வழங்கவும் பழனிசாமி முடிவு பண்ணியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஆளுங்கட்சி நிர்வாகி மீது வழக்கு போட்ட அதிகாரியை துாக்கி அடிச்சுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''-சென்னை, பரங்கிமலை ஒன்றிய ஆளுங்கட்சி இளைஞர் அணி நிர்வாகி ஒருத்தர், வக்கீலாகவும் இருக்கார்... சமீபத்துல இவர் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தோட இன்னோவா கார்ல, கொடைக்கானலுக்கு கிளம்பினார் ஓய்...
''பெரம்பலுார் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில, 'பாஸ்டேக்' கணக்குல பணம் இல்லாததால, ரொக்கமா கட்டும்படி ஊழியர்கள் கேட்டிருக்கா... நிர்வாகி தன் வக்கீல் ஐ.டி., கார்டை காட்ட, ஊழியர்கள் பணம் கட்டியே ஆகணும்னு கறார் காட்ட, நிர்வாகி தரப்பு டென்ஷன் ஆயிடுத்து ஓய்...
''கீழே இறங்கி ஊழியர்களை பின்னி எடுத்துட்டா... இந்த வீடியோ வெளியாகி, பரபரப்பானது... சுங்கச்சாவடி ஊழியர்கள் புகார்ல, மங்கலமேடு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமச்சந்திரன், தி.மு.க., நிர்வாகி மேல வழக்கு பதிவு செய்தார் ஓய்...
''ஆளுங்கட்சி நிர்வாகி மேல வழக்கு போடலாமோ... இப்ப, ராமச்சந்திரனை ஆயுதப்படைக்கு துாக்கி அடிச்சுட்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''சரவணன் வர்றாரு... சுக்கு காபி போடும் நாயரே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.