/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பழனிசாமி தலைமைக்கு காத்திருக்கும் 'கண்டம்!'
/
பழனிசாமி தலைமைக்கு காத்திருக்கும் 'கண்டம்!'
PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM

''ஆபீஸ் பர்னிச்சர்களை ஆத்துக்கு எடுத்துண்டு போயிட்டார் ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை யூனியன் ஆபீஸ்ல இருக்கற அதிகாரியை தான் சொல்றேன்... இவர், அடுத்த வருஷம், 'ரிட்டயர்' ஆக போறார் ஓய்...
''இதனால, முடிஞ்ச அளவுக்கு வாரி சுருட்டறார்... யூனியன் ஆபீஸ்ல இருந்த 30 சுப்ரீம் சேர், டேபிள், ஸ்டூல், சோபா செட் உள்ளிட்ட பர்னிச்சர்களை, தன் அரசு குடியிருப்புக்கு ஒவ்வொன்றா எடுத்துண்டு போயிட்டார் ஓய்...
''இந்த பொருட்களை போன வாரம், தன் சொந்த ஊரான, திருச்சி மாவட்டம், துறையூர் பக்கத்துல இருக்கற கிராமத்து ஆத்துக்கு கொண்டு போயிட்டார்... இதுக்கான லாரி வாடகையை, ஊராட்சி தலைவர் ஒருத்தர் தலையில கட்டிட்டார் ஓய்...
''எப்பவும் வாங்கற லஞ்ச பணத்தை கையில வச்சுக்க மாட்டார்... பக்கத்துல அரசு குடியிருப்புல இருக்கற தன் ஆத்துக்காரம்மாவை அழைச்சு, குடுத்து அனுப்பிடுவார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''செல்வமணி இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அந்தோணிசாமியே, ''பதவி போயிட்டாலும் இன்னும் ஆதிக்கம் செலுத்துறாங்க...'' என்றார்.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கூட்டுறவு துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு சங்கங்களும், கூட்டுறவு பண்டக சாலைகளும் செயல்படுதுங்க.. இவை, ரேஷன் கடை, பல்பொருள் அங்காடி, மருந்தகம், பெட்ரோல் பங்க் போன்ற வற்றை நடத்துதுங்க...
''கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யப்படுவாங்க... இதுல, பெரும்பாலும் ஆளுங்கட்சியினர் தான் இருப்பாங்க...
''இந்த கூட்டுறவு சங்க தலைவர்களின் பதவி காலம் கடந்த ஆண்டு முடிஞ்சிடுச்சுங்க... இருந்தாலும், சென்னை உட்பட பல மாவட்டங்கள்ல, சங்க அதிகாரிகளை இவங்க தொடர்பு கொண்டு, தாங்கள் சொல்லும் ஊழியருக்கு இடமாறுதல் தரணும், சொல்ற நிறுவனங்களிடம் மளிகை வாங்கணும்னு ஆதிக்கம் செலுத்துறாங்க...
''அதை கேட்காத அதிகாரிகளிடம், 'சங்கத்துல நீங்க கோல்மால் பண்றதா மேலிடத்துல புகார் அளிப்பேன்'னு மிரட்டுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தேர்தல் முடிவுகள் வந்ததும், பெரிய பிரளயமே வெடிக்கும்னு பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எந்த கட்சியில பா...'' என கேட்டார் அன்வர்பாய்.
''லோக்சபா தேர்தல்ல அ.தி.மு.க., ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது என்பதோட, 10க்கும் மேற்பட்ட தொகுதிகள்ல, மூணாவது இடம் தான் கிடைக்கும்... ஓட்டு சதவீதமும் 25 பர்சன்டுக்கு கீழே போயிடும்னு தகவல்கள் வருதாம்...
''அப்படி வந்தா, பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காம போனது தான் காரணம்னு சொல்லி, கட்சி தலைமையை மாத்த இப்பவே ரகசியமா வேலைகள் நடக்கு வே...
''பா.ஜ., மேலிடத்தின் ஆசியுடன், தலைமை பதவிக்கு கொங்கு மண்டலத்துல இருக்கிற சீனியரை கொண்டு வந்து, சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் சேர்த்து கட்சியை பலப்படுத்த போறாவளாம்...
''பழனிசாமிக்கு லெப்டும், ரைட்டுமா இருந்த கொங்கு மண்டல புள்ளிகள் ரெண்டு பேர் தான், இந்த வேலைகள்ல தீவிரமா இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிவுக்கு வர பெஞ்ச் அமைதியானது.

