/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தி.மு.க., சீனியரின் ஓட்டமும், வாட்டமும் சரியானது எப்படி?
/
தி.மு.க., சீனியரின் ஓட்டமும், வாட்டமும் சரியானது எப்படி?
தி.மு.க., சீனியரின் ஓட்டமும், வாட்டமும் சரியானது எப்படி?
தி.மு.க., சீனியரின் ஓட்டமும், வாட்டமும் சரியானது எப்படி?
PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

மெது வடையை மென்றபடியே,''தம்பிக்கு எதிரா, 'பாலிட்டிக்ஸ்' பண்றதோட, 'பப்ளிசிட்டி'யும் தேடிக்கறாங்க ஓய்...'' என, மேட்டரை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கும், அவரது தம்பியான துாத்துக்குடி மேயர் ஜெகனுக்கும், உள்ளூர்ல ரெண்டு வருஷமாவே நீயா, நானா மோதல் நடக்கறதோல்லியோ... மாநகராட்சி நிர்வாகத்துல அமைச்சர் தலையிட்டு, ஜெகன் மேலிடத்துல புகார் சொல்லிட்டதால, அமைச்சர் வேற வகையில எதிர்ப்பை காட்ட துவங்கிட்டாங்க ஓய்...
''அதாவது, மாநகராட்சிபகுதியில் நடக்கற பணிகளை ஆய்வு செய்து, அதுல குறைகள்இருந்தா, அதிகாரிகளை கூப்பிட்டு கண்டிக்கறாங்க... அதோட, 'பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வர்றது'ன்னு சொல்லி, கழிவுநீர் கால்வாய்கள்ல உள்ள அடைப்புகளை, தன் சொந்த நிதியில செய்றதாகவும் சொல்லிக்கறாங்க ஓய்...
''அதே நேரம், விபரமான உள்ளூர் மக்கள், 'சொந்த நிதின்னு அமைச்சர் சொல்றாங்களே... அது எங்க இருந்து வந்துதுன்னு தெரியலையே'ன்னு தங்களுக்குள்ள முணுமுணுக்கறா ஓய்...'' என்றார்,குப்பண்ணா.
''நர்ஸ்களை வச்சு ஓ.பி., சீட்டு பதிவு பண்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், புற நோயாளிகளுக்கு ஓ.பி., சீட்டு வழங்க, ஒப்பந்த ஊழியர்கள் இருந்தாங்க... இவங்க கம்மியான எண்ணிக்கையில் இருந்ததால, வேற பணிகளுக்கு அவங்களை திருப்பி விட்டுட்டாங்க பா...
''ஓ.பி., சீட்டு பதியும் இடத்தில் ஆள் இல்லாம நோயாளிகள் திணறினாங்க... இதனால, மருத்துவமனை நிர்வாகம், மூணு நர்ஸ்களை சுழற்சி முறையில், ஓ.பி., சீட்டு பதிவு பண்ண சொல்லிடுச்சு பா...
''இதனால, வார்டுகள்ல நர்ஸ்கள் இல்லாம, உள்நோயாளிகள் அவதிப்படுறாங்க... 'சாதாரண இந்த பணிக்கு ஒப்பந்த ஊழியர்களையே நியமிக்கணும்'னு நர்ஸ்கள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஓட்டம் பிடிக்க இருந்தவரை, தடுத்து நிறுத்திட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஏதாவது விளையாட்டு சமாச்சாரமாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''இல்ல... டெல்டாவுல இருக்கிற தி.மு.க., சீனியர் புள்ளிக்கு, இந்த முறை லோக்சபா தேர்தல்ல சீட் தரல... பழனிக்கு காவடி எடுக்காத குறையா முட்டி மோதியும் சீட் கிடைக்காம, விரக்தியில கட்சி பணிகள்ல ஆர்வம் காட்டாம ஒதுங்கிட்டாரு வே...
''தி.மு.க.,வுல இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட வக்கீல்ஒருத்தர், சீனியர் புள்ளியிடம், விஜய் கட்சியில சேரும்படி துாது பேசிட்டு இருந்திருக்காரு... இது, உளவுத்துறை வாயிலா ஆட்சி மேலிடத்துக்கு போயிட்டு வே...
''அதிர்ச்சியான மேலிடம், கட்சி சார்புல இந்த வருஷம் புதுசா உருவாக்கியிருக்கிற ஒரு விருதை சீனியருக்கு அறிவிச்சு, அவரது ஓட்டத்தையும், வாட்டத்தையும் தடுத்து நிறுத்தியிருக்கு...
''சீனியரும், லோக்சபா தேர்தல்ல விட்டதுக்கு பதிலா, சட்டசபை தேர்தல்ல சீட் வாங்கி, அமைச்சராகிடலாம்கிற கனவோட, கட்சி பணிகள்ல களம் இறங்கிட்டாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.