/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மரம் நடும் திட்டத்தில் நடக்கும் நுாதன மோசடி!
/
மரம் நடும் திட்டத்தில் நடக்கும் நுாதன மோசடி!
PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

''கன்வீனருக்கு யாருமே ஒத்துழைக்க மாட்டேங்கிறாங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை பருகினார் அந்தோணிசாமி.
''எந்த பல்கலையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தரா இருந்த குமார், பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா பண்ணிட்டாரே... பல்கலையை வழிநடத்த, கல்லுாரி கல்வி இயக்குனர் கார்மேகம் தலைமையில் கன்வீனர் குழு இருக்குதுங்க...
''சம்பளம் போடவே வழியில்லாம, பல்கலை கடும் நிதி நெருக்கடியில தவிக்குது... இந்த சூழல்ல, கார்மேகம் சில முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கண்டாருங்க...
''ஆனாலும், பல்கலை இணைப்பு பெற்ற, 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளுக்கு ஏப்ரல் பருவத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடுறதுல ஏற்பட்ட தாமதம், பெரிய பிரச்னையாகிடுச்சு... இதுல, கார்மேகம் பிறப்பித்த உத்தரவுகளை யாரும் கண்டுக்காததால, பெரும்பாலான கல்லுாரிகளுக்கு முழு ரிசல்டும் வரலைங்க...
''பதிவாளர், டீன் பதவிகள் காலியா கிடக்குது... இதுல, பல வருஷமா பேராசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிச்சிட்டு இருக்காங்க... இவங்கள்ல சிலரை மாற்ற கார்மேகம் நடவடிக்கை எடுத்தாரு... அதுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுறதால, பல்கலை நிர்வாகமே தள்ளாடிட்டு இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''குப்பையை எரிச்சுட்டாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தஞ்சாவூர் மாநகராட்சியின் உயர் பதவியில முன்னாடி ஒரு அதிகாரி இருந்தப்ப, பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கு... குத்தகை ஏலம், சொத்து வரி, தொழில் வரி, காலிமனை வரி ரத்து உள்ளிட்ட வகையில மட்டும் 32 கோடி ரூபாய் நிதியிழப்பு நடந்திருக்கு வே...
''அதே மாதிரி, சீர்மிகு நகர திட்டப் பணிகளின் கீழ், 'பயோ மைனிங்' முறையில் குப்பையை தரம் பிரிக்கும் பணிகளையும் சரிவர செய்யல... இந்த திட்டத்துலயும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்குன்னு நிறைய புகார்கள் வரவே, விஜிலென்ஸ் விசாரணை துவங்கியிருக்கு வே...
''இப்ப, அந்த அதிகாரி வேற ஊருல பணியில் இருந்தாலும், விசாரணை வளையத்துல சிக்கிட கூடாதுன்னு, ஏற்கனவே தஞ்சையில் தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் உதவியுடன் குப்பையை தீயிட்டு அழிச்சுட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''மரம் நடற திட்டத்துல புது மோசடி பண்றா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழகத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்று களை உருவாக்கி, நட்டு வளர்க்க தலா 240 ரூபாய் வரை வழங்கறா... இதுக்கான பணிகளை செய்யற வனச்சரகர்கள் உரிய ரசீதுகளை காட்டி, இத்தொகையை வாங்கிக்கலாம் ஓய்...
''திருவண்ணாமலை மாவட்டம், திருப்பத்துார் உள்ளிட்ட பகுதிகள்ல, சில தன்னார்வ மற்றும் ஆன்மிக அமைப்புகள் பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு, மரக்கன்றுகளை தலா மூன்று ரூபாய் வீதம் தரா... வனத்துறை அதிகாரிகள், அந்த அமைப்புகளை அணுகி, தனி நபர்கள் பெயரில் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை காட்டி, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை வாங்கிடறா ஓய்...
''இந்த மரக்கன்றுகள்ல கவரை மட்டும் மாத்திட்டு, வனத்துறையின் மரக்கன்றா கணக்கு காட்டறா... இப்படி மூன்று ரூபாயில் மரக்கன்று வாங்கி நட்டு, 240 ரூபாயை வாங்கி, பாக்கெட்டுல போட்டுக்கறா... இது சம்பந்தமா, உயர் அதிகாரிகள் விசாரணை பண்ணா, பல முறைகேடு கள் அம்பலத்துக்கு வரும் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெஞ்ச் அமைதியானது.