/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
எம்.எல்.ஏ., அடாவடியால் போலீசார் பீதி!
/
எம்.எல்.ஏ., அடாவடியால் போலீசார் பீதி!
PUBLISHED ON : ஏப் 06, 2024 12:00 AM

நண்பர்கள் நடுவில் அமர்ந்தபடியே, ''மத்திய அமைச்சர் பதவி உறுதின்னு சொல்லி ஓட்டு கேட்கிறாங்க பா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பா.ஜ., கூட்டணி யில, தர்மபுரியில பா.ம.க., வேட்பாளரா சவுமியா போட்டியிடு றாங்களே... ஓட்டு கேட்டு போறப்ப, தொகுதி மக்களிடம், 'இவங்க ஜெயிச்சா, மத்திய அமைச்சர் பதவி நிச்சயம்... பசுமை தாயகம் மூலமா பல சுற்றுச்சூழல் நலப்பணிகளை செய்துட்டு வர்றதால, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவியை இவங்களுக்கு தான் தருவாங்க'ன்னு பா.ம.க.,வினர் பிரசாரம் பண்றாங்க பா...
''அது மட்டுமில்லாம, 'பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் தொழிற்கல்வி மாணவ - மாணவியருக்கு இலவசமா தொழிற்பயிற்சி கூடம் அமைத்து தர்றோம்... இந்த மாவட்டத்துக்காரங்க யாரும் வேலை தேடி, பக்கத்துல இருக்கிற கர்நாடகாவுக்கு போய் கஷ்டப்பட வேண்டாம்'னும் வாக்குறுதி தந்து, ஓட்டு வேட்டையாடிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரிகளை டம்மியாக்கிடுறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்கள்ல, சமீப காலமா உதவியாளர்களையே அந்த பதவிகளுக்கு நியமிக்கிறாங்க... தற்காலிகமா நியமிக்கப்படும் இந்த உதவியாளர்கள், உயர் அதிகாரிகளை சரிக்கட்டி, அங்கேயே நிரந்தரமா செட்டில் ஆகிடுறாங்க...
''உதாரணமா, சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில வி.வி.ஐ.பி.,க்கள் அதிகம் வசிக்கிற ஒரு ஏரியாவுக்கு சில மாதங்களுக்கு முன்னாடி நிரந்தர சார் - பதிவாளர் நியமிக்கப்பட்டாரு... ஆனா, இவரை டம்மியாக்கிட்டு அங்க இருக்கிற உதவியாளர் தான் ஆதிக்கம் செலுத்துறாருங்க...
''ஏன்னா, 10 வருஷமா உதவியாளர் தான் அங்க நங்கூரம் போட்ட மாதிரி உட்காந்திருக்காரு... இதனால, அவர் ஓகே சொல்ற பத்திரங்களை தான் சார் - பதிவாளர் பதிவு செய்றாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எம்.எல்.ஏ., அடாவடியால, போலீசார் பீதியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அப்படின்னா, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வா தான் இருப்பாரு... மேல சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர், போன வாரம் வேட்புமனு தாக்கல் பண்ணினாரோல்லியோ... அவருடன் நாலு பேர் போன நிலையில, கூட்டணி கட்சியான திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் லேட்டா அங்க வந்தார் ஓய்...
''அப்ப, வெளியில நின்னுண்டு இருந்த இன்ஸ்பெக்டர், 'சார், விதிப்படி நாலு பேர் உள்ள போயிட்டா... உங்களை அனுமதிக்க முடியாது'ன்னு தடுத்திருக்கார் ஓய்...
''உடனே கோபமான ராஜேந்திரன், 'இந்த தொகுதி எம்.எல்.ஏ., நான்... என்னையே தடுக்கறயா'ன்னு கேட்டு, இன்ஸ்பெக்டரின் கையை தட்டி விட்டுட்டு உள்ள போயிட்டார் ஓய்...
''இப்ப, கூடுதல் நபர்களை அனுமதிச்சதுக்காக, இன்ஸ்பெக்டரிடம் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் கேட்டிருக்கா... இதனால, அங்க டூட்டியில இருந்த மற்ற போலீசாரும், நம்ம மேலயும் நடவடிக்கை எடுப்பாளோன்னு பயப்படறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

