/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பன்னீர்செல்வத்துக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவு!
/
பன்னீர்செல்வத்துக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவு!
PUBLISHED ON : ஏப் 19, 2024 12:00 AM

காலையில், முதல் வேலையாக ஓட்டுச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கையுடன், பெரியவர்கள் பெஞ்சில் ஆஜராகினர்.
சூடாக வந்த ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''தேர்தலை பயன்படுத்தி, பழைய இடத்துக்கே வந்துட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்ட, 'டாஸ்மாக்' கடைகள்ல, முறைகேடுகள்ல ஈடுபட்டு சிக்கிய ஊழியர்களை, டாஸ்மாக் கிடங்குக்கு இடமாற்றம் பண்ணியிருந்தாங்க... கிடங்கு பணியில, 'எக்ஸ்ட்ரா' பணம் எதுவும் கிடைக்காது பா...
''இப்படி கிடங்குல இருந்த ஊழியர்கள் பலரும், சமீபத்துல மறுபடியும் டாஸ்மாக் கடைகளுக்கு, அதுவும் தாங்கள் ஏற்கனவே இருந்த கடைகளுக்கே திரும்பிட்டாங்க...
''தேர்தல் நேரத்துல, அரசியல் கட்சியினரை சமாளிக்கவும், 'பார்ட்டி பண்ட்' எனப்படும் ஆளுங்கட்சிக்கு மாதாந்திர கப்பத்தை வசூல் பண்ணி தரவும், 'அனுபவம்' வாய்ந்த இவங்க இருந்தால் தான் சரிப்படுமாம்... இதுக்காக, ஆளுங்கட்சி நிர்வாகிகள் தந்த அழுத்தத்தால, அவங்களை திரும்பவும் கடைகளுக்கே அதிகாரிகள் திருப்பி அனுப்பிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சினிமாவுல கால்ஷீட் தர்ற மாதிரி தான், பிரசாரத்துக்கும் ஊதியம் வாங்கியிருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தி.மு.க., கூட்டணியில சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ஒரு சீட் கூட ஒதுக்காம, ராஜ்யசபா சீட் தர்றதா ஒப்பந்தம் போட்டாங்களே... இதுக்கு கைமாறா தி.மு.க., கூட்டணியை ஆதரிச்சு ஊர், ஊரா போய் கமல் பிரசாரம் செஞ்சாருங்க...
''அவரது பிரசாரத்துக்கு உண்டான செலவுகளை, தி.மு.க., தரப்பே ஏத்துக்கிட்டாங்க... அதே நேரம், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்ல பிரசாரம் செய்றதுக்கு சில நகரங்களை கமல் கேட்டு வாங்கிட்டாராம்... அவருக்கு மட்டுமில்லாம, அவர் கூட வந்த அடிப்பொடிகளுக்கும் செலவு பண்ணியே, கூட்டணி கட்சியினர் நொந்து போயிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சமுதாய பாசத்துல, கட்சி விசுவாசம் காணாம போயிட்டுல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ராமநாதபுரம் தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளரான, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவா, கடைசி நேரத்துல, அவரது சமுதாயத்தை சேர்ந்தவங்க களம் இறங்கியிருக்காவ... சமீபத்துல, ஆளுங்கட்சியை சேர்ந்த சிலரே, பன்னீர்செல்வத்தை நேர்ல பார்த்து, தங்களது ஆதரவை வெளிப்படையா தெரிவிச்சிருக்காவ வே...
''உதாரணமா, திருச்சுழி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 13 ஊராட்சி மன்ற தலைவர்கள், பன்னீர்செல்வத்தை பார்த்து ஆதரவு தெரிவிச்சு, அவருடன் போட்டோவும் எடுத்துக்கிட்டாவ... கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைங்கிற கதையா, 'பன்னீர்செல்வத்தை பார்த்தவங்களால, எங்களது கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இல்ல'ன்னு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் பூசி மெழுகுதாவ...
''ஆனாலும், கள நிலவரம் என்னவோ பன்னீருக்கு சாதகமா மாறிட்டுன்னு, ஆளுங்கட்சி மேலிடத்துக்கு தகவல் போயிருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
எதிரில் வந்த நண்பரிடம், ''முதல்ல போய் ஓட்டு போட்டுட்டு வந்து டீ சாப்பிடும் ஓய்...'' என செல்லமாக கடிந்து கொண்டபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

