/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.250 கோடி ஒதுக்கியும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா? அபாயம் துார் வாரப்படாத 13 ஏரிகள்; சில இடங்களில் அரைகுறை
/
ரூ.250 கோடி ஒதுக்கியும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா? அபாயம் துார் வாரப்படாத 13 ஏரிகள்; சில இடங்களில் அரைகுறை
ரூ.250 கோடி ஒதுக்கியும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா? அபாயம் துார் வாரப்படாத 13 ஏரிகள்; சில இடங்களில் அரைகுறை
ரூ.250 கோடி ஒதுக்கியும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா? அபாயம் துார் வாரப்படாத 13 ஏரிகள்; சில இடங்களில் அரைகுறை
PUBLISHED ON : மார் 01, 2025 12:00 AM

சென்னை மற்றும் புறநகரில் உள்ள, 13 ஏரிகளை சீரமைக்க அரசு, 250 கோடி ரூபாய் ஒதுக்கியும், பணிகள் சரியாக நடக்கவில்லை. பல ஏரிகளில் பணிகள் துவக்கப்படவில்லை.
துவக்கப்பட்ட பல இடங்களிலும் அரைகுறையுடன் பணிகள் விடப்பட்டுள்ளன. கோடை காலத்தை பயன்படுத்தி, பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை புறநகரில் உள்ள வேளச்சேரி, ஆதம்பாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம், முடிச்சூர், ரெட்டேரி, அயனம்பாக்கம், புழல், கொளத்துார் ஆகிய, 10 ஏரிகள் சீரமைக்கப்படும் என, சட்டசபையில், 2022ல் அரசு அறிவித்தது.
இந்த ஏரிகளை சீரமைக்க அரசு, 100 கோடி ரூபாயை ஒதுக்கியது. ஏரிகளை புதுப்பிக்க, சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முயற்சி மேற்கொண்டது.
கரைகளை வலுப்படுத்துதல், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான பாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், ஏரி எல்லை மேம்பாடு, பறவைகள் திட்டுகள் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
இந்த ஏரிகளில், நீர் தேங்குதல் மற்றும் மாசுபாடு போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை, கலந்தாலோசகர்கள் வாயிலாக தயார் செய்யப்பட்டது.
மேலும், எந்தெந்த ஏரியில் மண் எடுக்கக்கூடாது, கழிவுநீர் கலக்கக் கூடாது, கரைகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளக் கூடாது என்பன உட்பட பல நிபந்தனைகள் பட்டியலிடப்பட்டது. இதன் காரணமாக, ஏரியை துார்வாரும் திட்டம் முடங்கியது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் பேச்சு நடத்திய நிலையில், சில மாதங்களுக்கு முன், ஐந்து ஏரிகளை சீரமைக்க பூமிபூஜை போடப்பட்டது. மேலும், 10 ஏரிகளுக்கு பதிலாக, 13 ஏரிகளை, 250 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அறிவித்தது. முதற்கட்டமாக ஒன்பது ஏரிகளில் சீரமைப்பு பணி துவங்கி, வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஆதம்பாக்கம் ஏரியில் எந்த பணியும் துவக்கப்படவில்லை. முடிச்சூர் ஏரி, சில மாதங்களுக்கு முன் துாய்மை பணி செய்ததோடு நிறுத்தப்பட்டு விட்டது.
பெரும்பாக்கம் ஏரியில், சமீபத்தில் கரை பகுதி மட்டுமே சுத்தப்படுத்தப்பட்டது. ரெட்டேரியில் பணி பாதியில் நிற்கிறது. வேளச்சேரி ஏரியில் சீரமைப்பு பணி சமீபத்தில்தான் துவக்கப்பட்டுள்ளது. மாடம்பாக்கம், செம்பாக்கம் ஏரிகளில், பணிகள் துரிதமாக துவக்கப்படவில்லை.
வரும் கோடைக்கு முன், மேற்கண்ட ஏரிகளை முழுதாக சீரமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆக்கிரமிப்பால் சுருங்கிய ஏரிகள்
சென்னை புறநகரில், 13 ஏரிகள் சீரமைப்பதாக அரசு அறிவித்தாலும், ஒரு சில ஏரிகளில்தான் பணிகள் நடக்கின்றன. ஆதம்பாக்கம் ஏரியில், 20 ஆண்டுகளாக எந்த சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆக்கிரமிப்பால் ஏரி சுருங்கிவிட்டது. ஆக்கிரமிப்பை அகற்றி, சீரமைப்பு பணிகளை விரைந்து துவக்க வேண்டும். வேளச்சேரி, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மூவரசம்பட்டு, பள்ளிக்கரணை உள்ளிட்ட ஏரிகளை சீரமைத்து, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றவேண்டும்.
- ராமாராவ், சமூக ஆர்வலர், நங்கநல்லுார்.
ஒத்துழைக்க தயார்
சென்னை புறநகரில் உள்ள ஏரிகளில் பல, 100 ஏக்கர் பரப்பளவு கொண்டவைதான். அவற்றில், 30 ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. தற்போது, இருப்பதை காப்பாற்றி துார்வாரி வருகிறோம். சி.எம்.டி.ஏ., சார்பில், 13 ஏரிகள் மேம்படுத்தப்படுகிறது. சில ஏரிகளில், ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன; சில ஏரிகளில் பணிகள் துவக்கப்படவில்லை. வரும் கோடையில் ஏரிகள் சீரமைப்பை, சி.எம்.டி.ஏ., துவக்கினால், முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம்.
--- நீர்வளத்துறை அதிகாரிகள்.
-- நமது நிருபர்- -