/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அடையாறு ஆற்றை மீட்டெடுத்து சீரமைக்க... ரூ.1,500 கோடி!
/
அடையாறு ஆற்றை மீட்டெடுத்து சீரமைக்க... ரூ.1,500 கோடி!
அடையாறு ஆற்றை மீட்டெடுத்து சீரமைக்க... ரூ.1,500 கோடி!
அடையாறு ஆற்றை மீட்டெடுத்து சீரமைக்க... ரூ.1,500 கோடி!
PUBLISHED ON : பிப் 20, 2024 12:00 AM

சென்னை 'செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்துார், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாக பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கும் அடையாறு ஆற்றை மீட்டெடுத்து, அழகுற சீரமைக்கும் திட்டம், தனியார் பங்களிப்புடன், 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்' என, 2024 - 25 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின், 2024 - 25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அடையாறு ஆறு சீரமைப்பு, தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம், கடற்கரைகளை அழகுப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில், சென்னை நகருக்கான அறிவிப்பு குறித்த விபரம்:
சென்னை மாநகராட்சியில், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை மேம்படுத்த, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்திற்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகள், 59 அடியாக அகலப்படுத்தப்பட உள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை, 100 அடி சாலையாக அகலப்படுத்தும் திட்டம், 300 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்
சென்னை கடற்கரையோர பகுதிகளான கோவளம், எண்ணுார், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகள், 100 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு, புதிய வசதிகளுடன் அழகுபடுத்தப்படும்
சென்னையின் முக்கிய நீர் வழிகளான அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு ஆகியவற்றை சீரமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்துார், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாக பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கும் அடையாறு ஆற்றை மீட்டெடுத்து அழகுற சீரமைக்கும் திட்டம், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்
அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும், 70 கி.மீ., துாரத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்து, கழிவுநீர் வெளியேறுவதற்கு ஏற்ற மாற்று வழிகளை அமைத்து, தினமும் 11 கோடி லிட்டர் கொள்ளளவு உடைய 14 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
ஆற்றின் கரையோரங்களில் நான்கு பூங்காக்கள் அமைத்தல், பசுமை பரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகள் துவக்கப்பட்டு, 30 மாதங்களில் முடிக்கப்படும். சைதாப்பேட்டை முதல் திரு.வி.க., பாலம் வரையிலான பணிகள், 15 மாதங்களில் முடிக்கப்படும்
சென்னை மாநகராட்சியில், பசுமை தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, 'நகர்ப்புற பசுமை திட்டம்' என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
மாநகராட்சியில் பொது கழிப்பறைகளை நவீன முறையில் சீரமைத்து வடிவமைத்தல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகளை கட்டுதல் பணிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில், 430 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது சில மண்டலங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

