/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார்
/
1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார்
1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார்
1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார்
PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM
சென்னை, 'சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் 1,519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளித்ததுடன், இவ்விழாவுக்கு 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், நெறிமுறைகளுடன் சென்னை முழுதும், 1,519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிலைகளின் அமைப்பாளர்கள் மற்றும் விழா குழுவினரின், நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அமைதியான முறையில் வழிபாடு செய்யவும், காவல் துறை அறிவித்துள்ள இடங்களில் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, 16,500 போலீசாரும், 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், போலீஸ் அதிகாரிகளின் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், அந்த இடங்களில், 24 மணி நேரமும், பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், 'சிசிடிவி' பொருத்தவும், பாதுகாப்பு பணிக்கு இரண்டு தன்னார்வலர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

