/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் மசூதி!
/
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் மசூதி!
PUBLISHED ON : ஜூலை 17, 2025 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''கவர்னருக்கு, 'மாஜி' எம்.எல்.ஏ., 'டின்னர்' குடுத்திருக்காருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மஹாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், சமீபத்துல திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு போற வழியில, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு போயிருக்காரு... அப்ப, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், இப்ப பா.ஜ., செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிற கோபால்சாமி அழைப்பை ஏற்று, அவரது ராஜபாளையம் வீட்டுக்கு போயிருக்காருங்க...
''அவருடன் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சில நிர்வாகிகளும் போயிருந்தாங்க... எல்லாருக்கும் கோபால்சாமி, இரவு தடபுடலான சைவ விருந்து குடுத்திருக்காருங்க...
''டின்னர் சாப்பிட்டபடியே, தென் மாவட்டங்கள்ல கணிசமா வசிக்கக்கூடிய முக்குலத்தோர், நாடார், தேவேந்திர குல வேளாளர் மற்றும் நாயுடு சமூகத்தினர், ஓட்டுகளை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வளைக்கிறது சம்பந்தமா, தீவிரமா ஆலோசனையும் நடத்தியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''குற்றச்சாட்டுல சிக்கியவரையே விசாரிக்க சொன்னா எப்படி வே...'' என கேட்ட பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், போன ஜூன் 29ம் தேதி ரெண்டு பேர், பெண் நோயாளிகள் வார்டுக்கு போய், துண்டு பிரசுரங்களை வழங்கி மத பிரசாரம் செஞ்சிருக்காவ... இந்த வீடியோ சமூக வலைதளங்கள்ல வெளியாச்சு வே...
''இது சம்பந்தமா, 'மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்'னு சமூக ஆர்வலர் ராஜேஷ்கண்ணா என்பவர் சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு புகார் அனுப்பினாரு... இணை இயக்குநர், மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்துல, 'இந்த புகார் சம்பந்தமா விசாரணை நடத்தி, அறிக்கை குடுங்க'ன்னு கேட்டிருக்காரு வே...
''குற்றம் சாட்டப்பட்ட கண்காணிப்பாளர் கிட்டயே அந்த புகாரைக் கொடுத்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாங்கன்னு இணை இயக்குநர் கேட்டிருக்காரு பாருங்க... அரசு நிர்வாகம் எப்படி இயங்குது பாரும் வே...'' என்றார், அண்ணாச்சி.
''அரசு நிலத்தை ஆக்கிரமிச்சு மசூதி கட்டுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''கோவை, உக்கடம் கழிவுநீர் பண்ணை வளாகத்துல, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியிருக்காங்க... இந்த வளாகத்துலயே மசூதி கட்டுறதுக்கு, 7.5 சென்ட் நிலத்தை வாய்மொழி உத்தரவா ஒதுக்கியிருக்காங்க பா...
''இதுல, முதல் கட்டமா, கூடாரம் அமைச்சு மசூதி செயல்படுது... அதுக்கு பின்னாடி, 20 சென்ட் நிலத்தை ஆக்கிரமிச்சு, மசூதி கட்டுமான பணிகளை செய்றாங்க... இது பத்தி புகார்கள் போயும், மாவட்ட நிர்வாகம் கண்டுக்கல பா...
''இதே வளாகத்துல, 17ம் நம்பர் பிளாக்குல மூணு வீடுகள்ல, 'மதரசா' பள்ளிகள் செயல்படுது... 'ஏழை மக்கள் குடியிருக்க கட்டிய வீடுகள்ல, மதரசா பள்ளி களுக்கு யார் அனுமதி குடுத்தாங்க'ன்னு சர்ச்சை எழுந்திருக்கு... நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அலட்சியமா செயல்படுறதாகவும் புகார்கள் எழுந்திருக்குது பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.