/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' புரமோஷன் ' போட்டு ஊதியம் தராத தனியார் கல்லுாரி!
/
' புரமோஷன் ' போட்டு ஊதியம் தராத தனியார் கல்லுாரி!
' புரமோஷன் ' போட்டு ஊதியம் தராத தனியார் கல்லுாரி!
' புரமோஷன் ' போட்டு ஊதியம் தராத தனியார் கல்லுாரி!
PUBLISHED ON : ஏப் 04, 2025 12:00 AM

''இடமாறுதல்ல ஏகப்பட்ட முறைகேடு நடக்கறது ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் ஸ்ரீதர், வர்ற மே 31ம் தேதி, 'ரிட்டயர்' ஆகப் போறார்... சமீபத்துல, உதவி மருந்து கட்டுப்பாடு இயக்குநர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்'ல ஆலோசனை நடத்தினார் ஓய்...
''அப்ப, 'அரசியல்வாதிகள், ஆட்சி அதிகாரத்துல இருக்கறவா சிபாரிசுகளோட மருந்து ஆய்வாளர்கள் யாராவது டிரான்ஸ்பர் கேட்டு வந்தா, அவா மேல கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'னு எச்சரிக்கை பண்ணியிருக்கார்... இயக்குநர் சீக்கிரமே ரிட்டயர் ஆகப் போறதால, டிரான்ஸ்பர் எதுவும் போடப்படாதுன்னு விதி இருக்காம் ஓய்...
''ஆனாலும், ரெண்டு மருந்து ஆய்வாளர்களுக்கு, ஏற்கனவே போட்ட டிரான்ஸ்பர்களை ரத்து பண்ணி, அவாளுக்கு பழைய இடங்களுக்கே டிரான்ஸ்பர் போடும்படி இயக்குநருக்கு நெருக்கடி குடுத்து, சிலர் காரியத்தை சாதிச்சுட்டா... 'ஏகப்பட்ட முறைகேடு நடக்கறதால, கவுன்சிலிங் மூலமா டிரான்ஸ்பர் போட்டா பிரச்னை வராது'ன்னு துறைக்குள்ள பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பல்கலை வட்டாரத்துல, எல்லாரும் பயத்துல இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''உயர் கல்வித் துறை உதவி செயலரான ராஜேந்திரன், சமீபத்துல கோவை பாரதியார் பல்கலைக்கு திடீர்னு வந்திருக்காரு... பதிவாளர் அறைக்கு போய், பல்வேறு ஆவணங்களை புரட்டி பார்த்திருக்காரு பா...
''பல்கலை ஊழியர்களிடம் நிறைய கேள்விகளை கேட்டு, அவங்க சொன்ன பதில்களை குறிப்பு எடுத்துக்கிட்டாரு... அப்படியே, நிதி துறைக்கும் போய் கணக்கு, வழக்குகள் குறித்து கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டிருக்காரு பா...
''அங்க இருந்தவங்க, 'திருதிரு'ன்னு முழிச்சிருக்காங்க... நாள் முழுக்க பல்கலையில் ஆய்வு நடத்திட்டு, சென்னைக்கு கிளம்பிட்டாரு... அவர் எடுத்துட்டு போயிருக்கிற குறிப்புகளை வச்சு, என்ன நடவடிக்கை வருமோன்னு பல்கலை ஊழியர்கள் பயத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''புரமோஷன் குடுத்தா, அதுக்கான சம்பளத்தை தரணுமா இல்லையா வே...'' என, திடீரென கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''தராம விட்டது யாருங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னையில், முன்னாள் முதல்வர் ஜெ., வீட்டு பக்கத்துல, பிரபல தனியார் பெண்கள் கல்லுாரி இருக்குல்லா... இங்க, உதவி பேராசிரியர்களுக்கு, இணை பேராசிரியரா பதவி உயர்வு தந்திருக்காவ வே...
''ஆனா, அந்த பொறுப்புக்கு ஏற்ப ஊதிய உயர்வை மட்டும் தரல... அலுவலக ஊழியர்களுக்கும் இதே நிலைதானாம்... ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வுல போன பலருக்கும் இன்னும், 'செட்டில்மென்ட்' தொகையை தரல வே...
''இதுக்கான பைல்களை கல்லுாரி நிர்வாகம் முறைப்படி தயார் பண்ணி, உயர் கல்வித் துறை இணை இயக்குநர் ஆபீஸ்ல சமர்ப்பிக்காம விட்டதால, இந்த நிலையாம்... இதனால, கல்லுாரியில வேலை பார்க்கிறவங்களும், வேலை பார்த்துட்டு வீட்டுக்கு போனவங்களும் புலம்பிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, ''சொல்லுங்க ஸ்டெல்லா... மேரி, வீட்டுல இருக்காங்க... வீட்டுக்கு பேசுங்க...'' என்றபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

