தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/4,000 லிட்டர் பாலை கீழே கொட்டிய ஆவின் நிர்வாகம்!

4,000 லிட்டர் பாலை கீழே கொட்டிய ஆவின் நிர்வாகம்!

4,000 லிட்டர் பாலை கீழே கொட்டிய ஆவின் நிர்வாகம்!


PUBLISHED ON : நவ 20, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “மறுபடியும் ஆசிரியர் வேலைக்கு அனுப்பிட்டாங்க...” என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியரா இருந்தவரை பத்தி ஏற்கனவே பேசியிருக்கோம்... தி.மு.க., ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷுடன் ஏற்பட்ட நெருக்கத்தால, ‘ஆசிரியர் மனசு’ திட்ட ஒருங்கிணைப்பாளரா இந்த ஆசிரியரை நியமிச்சாங்க...

“கிட்டத்தட்ட நிழல் அமைச்சர் போலவே தமிழகம் முழுக்க வலம் வந்தவர், இடமாறுதல், நல்லாசிரியர் விருது, பள்ளிகள்ல ஆய்வக உதவியாளர்கள் நியமனம்னு வசூல்ல புகுந்து விளையாடினாரு... தி.மு.க., ஆட்சி முடிஞ்சதும், துறையில் இருக்கிற தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் சிலரது சிபாரிசுல, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரா நியமிக்கப்பட்டாருங்க...

“இவரை பத்தி போன 3ம் தேதி நாம பேசியிருந்தோம்... இது சம்பந்தமா துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரை மறுபடியும் மேற்பனைக்காடு பள்ளி ஆசிரியர் பணிக்கே மாத்திட்டாங்க...” என்றார் அந்தோணிசாமி.

“சதீஷ், தள்ளி உட்காரும்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “பட்டாசு வித்து கையை சுட்டுக்கிட்டாவ வே...” என்றார்.

“யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய்.

“தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு பண்டகசாலைகள் சார்பில், தீபாவளிக்கு வருஷா வருஷம் பட்டாசு கடைகள் திறப்பாவ... இந்த தீபாவளிக்கும், 16 கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கி கடை போட்டாவ வே...

“ஆனா, தாமதமா கடைகளை திறந்தது, திடீர் மழை, பண்டகசாலை ஊழியர்களை வேற பணியில ஈடுபடுத்தியது மாதிரியான காரணங்களால, இந்த வருஷம் பட்டாசு விற்பனையில பயங்கர நஷ்டம் வந்துட்டு... ‘இது சம்பந்தமா விசாரணை நடத்தி, நஷ்டத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்’னு, முதல்வர் விஜய்க்கு பண்டகசாலை ஊழியர்கள் கோரிக்கை வச்சிருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“மக்கள் வரிப்பணம் எப்படி எல்லாம் பாழா போறது பாருங்கோ...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“கோவை, சூலுார்ல இருக்கற ஆவின் பால் குளிர்விப்பான் மையத்துல, சமீபத்துல பால் குளிரூட்டும் இயந்திரம் பழுதாயிடுத்து... இது சம்பந்தமா, தலைமை அலுவலகத்துக்கு தகவல் குடுத்திருக்கா ஓய்...

“ஆனாலும், குளிர்விப்பானை உடனே சரி செய்யல... இதனால, ரெண்டு நாளா வாங்கிய 4,000 லிட்டர் பாலை குளிரூட்ட முடியாம, அது கெட்டு போனதும் கீழே கொட்டியிருக்கா ஓய்...

“அதுவும் இல்லாம தயிர், பிஸ்கட் பாக்கெட்களை எல்லாம் காலாவதி தேதிக்கு ஒரு நாள் முன்னாடி தான் ஏஜன்ட்களுக்கு வினியோகம் பண்றா... ‘ஒரு நாள்ல எப்படி விக்க முடியும்’னு அவா கேட்டா, எல்லா பாக்கெட்டுகளையும் திரும்ப வாங்கி, புது தேதி, ‘ஸ்டிக்கரை’ ஒட்டி குடுத்துடறா ஓய்...

“கோவை ஆவின் பொது மேலாளர் பதவியை, இன்னொரு அதிகாரியிடம் கூடுதல் பொறுப்பா குடுத்திருக்கா... ‘அவருக்கு ஏற்கனவே வேலைப்பளு ஜாஸ்தியா இருக்கறதால, இந்த விவகாரங்களை எல்லாம் கவனிக்க முடியாம சொதப்பிடறார்’னு, ஆவின் ஊழியர்கள் புலம்பறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.

“அருண்குமார், இப்படி உட்காரும்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழுந்தார்.

-உடனே, ‘‘சென்னை மாநகராட்சியில் முதுநிலை சட்ட அதிகாரியாக இருக்கற ஜேக்கப் ராஜன் பத்தி சமீபத்துல பேசியிருந்தோமோல்லியோ... ஆனா, அவர் மீது எந்த புகாரும் இல்லன்னு சொல்றா ஓய்...’’ என குப்பண்ணா கூற, நண்பர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us