/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அமைச்சர்களிடம் உதவி கேட்ட அ.தி.மு.க., 'மாஜி!'
/
அமைச்சர்களிடம் உதவி கேட்ட அ.தி.மு.க., 'மாஜி!'
PUBLISHED ON : மார் 12, 2024 12:00 AM

''நாமளும் மாட்டிக்கப்டாதுன்னு யாகம் நடத்தியிருக்கா ஓய்...'' என்றபடியே வந்தார், குப்பண்ணா.
''யாரு, எங்க மாட்டிக்க போறாவ வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருநெல்வேலி மாவட்ட பத்திரப்பதிவு துறையில ஆள் மாறாட்ட பத்திரங்கள், வழிகாட்டி மதிப்பீட்டை விட, கம்மியா பத்திரப்பதிவு செய்தது, நீர்நிலைகளை பத்திரப்பதிவு செய்ததுன்னு பல புகார்கள்ல சிக்கி, இரண்டு சார் - பதிவாளர்கள் ஏற்கனவே, 'சஸ்பெண்ட்' ஆகியிருக்கா ஓய்...
''இன்னும் மூணு சார் - பதிவாளர்கள், விசாரணை வளையத்துல இருக்கா... இந்த சூழல்ல, இந்த சிக்கல்ல இருந்து விடுபடணும்னு சமீபத்துல மாவட்ட பதிவாளர் ஆபீஸ்ல சிலர் சிறப்பு யாகம் நடத்தியிருக்கா ஓய்...
''இதுக்கு ஏற்பட்ட செலவை, சிக்கல்ல மாட்டிண்டு இருக்கற ஒரு சார் - பதிவாளர் தான் ஏத்துண்டாராம்... 'என்ன தான் யாகம் நடத்தினாலும், இன்னும் மூணு சார் - பதிவாளர்கள் சஸ்பெண்ட் ஆறது உறுதி'ன்னு துறை வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சண்முகம், கொஞ்சம் தள்ளி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''பதவி பறிபோனாலும், பாதுகாப்பு போலீசார் பந்தாவோட தான், 'மாஜி' வலம் வர்றாருங்க...'' என்றார்.
''யாரு, பொன்முடியை சொல்றீரா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ஆமா... சொத்து குவிப்பு வழக்குல நீதிமன்றத்தில் தண்டனை பெற்றதால, அவரோட அமைச்சர் பதவி பறிபோயிடுச்சே... நேத்து தான், அவருக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வச்சிருக்குதுங்க...
''இப்போதைக்கு அவரிடம், கட்சியின் துணை பொதுச் செயலர் பதவி மட்டும் தான் இருக்குதுங்க...
''இதுல வேடிக்கை என்னன்னா, அமைச்சர் பதவி இருந்தப்ப, அவருக்கு இருந்த பி.எஸ்.ஓ.,க்கள் பாதுகாப்பு இன்னும் தொடருதுங்க... 'கட்சி பதவியில மட்டும் இருக்கிற அவருக்கு போலீசார் ஏன் பாதுகாப்பு தரணும்... அதனால, அவங்களை எல்லாம் வேற டூட்டிக்கு அனுப்பணும்'னு முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் மனு அனுப்பி யிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தி.மு.க., அமைச்சர்களை பார்த்து, அ.தி.மு.க., முக்கிய புள்ளி உதவி கேட்டிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சென்னையில இருக்கிற அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகன், மருமகளுக்கு இடையில பிரச்னை ஏற்பட்டு, விவகாரம் கோர்ட் வரைக்கும் போயிட்டு... இதுக்கு மத்தியில மருமகள் தரப்பு, 'மாஜி'யின் குடும்பத்தினர் மேல, போலீஸ்ல வரதட்சணை கொடுமை புகார் குடுத்திருக்கு வே...
''பதிலுக்கு, 'மாஜி'யின் மகனும் புகார் கொடுத்து, பிரச்னை ஒருபக்கமா ஓடிட்டு இருக்கு... அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., சென்னை மற்றும் பக்கத்து மாவட்டத்துல செல்வாக்கா இருக்கிற ரெண்டு அமைச்சர்களை ரகசியமா பார்த்து பேசியிருக்காரு வே...
''அப்ப, மருமகள் தரப்பிடம் பேசி, சீக்கிரம் இந்த பஞ்சாயத்தை முடிச்சு குடுங்கன்னு கேட்டிருக்காராம்... அவங்களும் சாதகமான பதில் தந்திருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''கந்தன் வரார்... சூடா சுக்கு காபி போடுங்க நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

