தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வட்டி கட்ட முடியாமல் தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்!

 வட்டி கட்ட முடியாமல் தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்!

 வட்டி கட்ட முடியாமல் தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்!


PUBLISHED ON : செப் 11, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2026 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “மிரட்டல் வசூல் நடக்கு வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இருக்கிற வீடுகள், வணிக நிறுவனங்களின் கட்டடங்களை மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தாங்க... கட்டட அளவுகள்ல ஏதாவது குளறுபடி இருந்தா, அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு போறாவ வே...

“அதிகாரிகளும், அதுக்கு ஏற்ப கூடுதலா சொத்து வரி வசூலிக்காவ... மாநகராட்சி அதிகாரி ஒருத்தர், இதையே சாதகமா பயன்படுத்தி, 'கட்டிங்' வசூல்ல இறங்கிட்டாரு வே...

“அதாவது, 'உங்க கட்டடத்துல நிறைய விதிமீறல்கள் இருக்கு... அதனால, கூடுதலா சொத்து வரி விதிக்க போறோம்... எனக்கு கமிஷன் வெட்டினா, வரியை குறைக்க ஏற்பாடு பண்ணுதேன்'னு நாசுக்கா மிரட்டி, லட்சங்கள்ல வசூல் வேட்டை நடத்துதாரு வே...

“மாநகராட்சியில் இப்ப மேயர் இல்லாம, துணை மேயர் தலைமையில் தான் நிர்வாகம் நடக்கு... அதனால, 'துணை மேயருக்கு எதுவும் தெரியாது... நான் வச்சது தான் இங்க சட்டம்'னு சொல்லி அதிகாரி ஆட்டம் போடுதாரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“அமல்ராஜ், தள்ளி உட்காரும்...” என்ற குப்பண்ணாவே, “விபச்சார வழக்குல சிக்கியவா ஆட்டத்தையும் கேளுங்கோ ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...

“திருச்சி மேற்கு மாவட்ட த.வெ.க., நிர்வாகியா ஒரு பெண்மணி இருக்காங்க... ஆனா, கட்சி நிர்வாகத்தை இவரது மகன் தான் கவனிக்கறார் ஓய்...

“இவர் மீது விபச்சார வழக்கு இருக்கு... சட்டசபை தேர்தலப்ப, திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் நேருவை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க., வேட்பாளர் ராமமூர்த்தியிடம், தேர்தல் செலவுக்கு இவர் கோடிக்கணக்கில் பணம் கேட்டு, அவர் தர மறுத்துட்டார் ஓய்...

“இதனால, அவருக்கு தேர்தல் வேலைகள் செய்யாம அவரை தோற்கடிச்சிட்டதா, இவர் மேல ஏற்கனவே புகார் இருக்கு... இப்ப, 'காலியா இருக்கற திருச்சி கிழக்கு தொகுதிக்கு நான் தான் வேட்பாளர்'னு சொல்லிண்டு திரியறார் ஓய்...

“உள்ளாட்சி தேர்தல்ல, 'சீட்' வாங்கி தர்றதா மகளிர் அணி நிர்வாகிகளிடம், 'அளந்து' விடறார்... இவரை மாதிரியே, 'ஸ்பா' பெயர்ல விபச்சாரம் நடத்திய வழக்குல சிக்கிய இன்னொரு த.வெ.க., பிரமுகரும், கட்சியின் மேலிட தலைவர்கள் பெயர்ல போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டிட்டு இருக்கார் ஓய்...” என்றார் குப்பண்ணா.

“செந்தில்குமார், சவுகத் அலி இருங்க... சேர்ந்து போலாம்...” என்ற அந்தோணிசாமியே, “வட்டி கட்ட முடியாம தவிக்கிறாங்க...” என்றார்.

“யாருப்பா அவங்க...” என கேட்டார் அன்வர்பாய்.

''சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலரும் கடன் வாங்கி செலவழிச்சாங்க... கட்சி தலைமைக்கு நெருங்கிய உறவினர் ஒருத்தர் எல்லாருக்கும் கோடி, கோடியா கடன் குடுத்தாருங்க...

“ஆனா, சொத்து பத்திரங்களை வாங்கி வச்சுக்கிட்டாரு... அவரது ஈரோடு தோட்டத்துல தான் இந்த, 'டீலிங்' எல்லாம் நடந்துச்சு... தேர்தல்ல பலர் தோத்து போக, சிலர் மட்டும் ஜெயிச்சிருக்காங்க...

“இப்ப, வட்டி கட்ட முடியாம தவிக்கிற அவங்க, அசலை மட்டும் குடுத்து பத்திரங்களை மீட்கலாம்னு பார்த்தா, கடன் தந்தவர் ஏத்துக்க மாட்டேங்கிறாரு... இதை, தலைமையின் கவனத்துக்கு எடுத்துட்டு போனப்ப, 'அவர் சொல்ற மாதிரி வட்டியை கட்டுங்க'ன்னு தலைமையும் சொல்லிடுச்சு... இதனால, அ.தி.மு.க., நிர்வாகிகள் நொந்து போயிருக்காங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.

“ராமலிங்கம், இங்கன உட்காரும்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us