சிறை காவலர்கள் இடமாறுதலுக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை!
சிறை காவலர்கள் இடமாறுதலுக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை!
PUBLISHED ON : செப் 10, 2026 12:46 AM

“ஓய்வு பெற்றவங்க கட்டுப்பாட்டில் இருக்கு வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த அமைப்பை சொல்றீங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், கூட்டுறவு வீட்டுவசதி துறை இருக்கு... இதன் கீழ், சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் செயல்படுது வே...
“இதுக்கு பொறுப்பாளரா, கூட்டுறவு துறையில் இருந்து வரும் மாவட்ட பதிவாளர் இருப்பாரு... ஆனா, இந்த பதவியில் இருந்து, 10 வருஷங்களுக்கு முன்னாடி ஓய்வு பெற்ற ரெண்டு பேர், துறையில் இன்னும் ஆதிக்கம் செலுத்துதாவ வே...
“இந்த ரெண்டு பேரும், தங்களுக்கு அடுத்து அந்த பதவிக்கு வந்த எல்லாரையும் கட்டுப்படுத்திட்டு இருக்காவ... இவங்களிடம் ஒப்புதல் வாங்காம, எந்த வேலை யும் நடக்காது வே.. .
“இதனால, 'வெளி நபர்கள் தலையீட்டால, கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் பாதிக்கப் படுது... த.வெ.க., அர சாவது இதுக்கு முடிவு கட்டணும்'னு, அதன் ஊழியர்கள் புலம்புதாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“நித்தியானந்தம், ஜெயகுமார் உட்கார இடம் கொடுங்க...” என்ற அந்தோணிசாமியே, “பிரச்னைக்கு காரணமானவங்களை கண்டுக்கலைங்க...” என்றார்.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“பெரம்பலுார் மாவட்டத்துல இருக்கிற அரசு மேல்நிலைப் பள்ளியில, ஒரு ஆசிரியரும், ஆசிரியையும், திருமணத்தை தாண்டிய உறவுல இருக்காங்க... பள்ளி வளாகத்துலயே முத்தம் குடுக்கிறது, சாப்பாடு ஊட்டிக்கிறதுன்னு லுாட்டி அடிக்கிறாங்க...
“கடந்த ஆட்சியில, ரெண்டு பேருக்கும் நல்லாசிரியர் விருது குடுத்திருக்காங்க... இங்க படிக்கிற பிளஸ் 2 மாணவர் ஒருத்தர், பள்ளிக்கூட போர்டுல, நல்லாசிரியர்களின் லுாட்டியை படமா வரைஞ்சு போட்டுட்டாருங்க...
“இதனால, பள்ளியின் வணிகவியல் ஆசிரியர், அந்த மாணவனை முட்டிக்கால் போட வச்சுட்டாரு... இதனால, கடுப்பான மாணவரின் தந்தையான உள்ளூர் பஞ்., செயலர், பள்ளிக்கு வந்து, வணிகவியல் ஆசிரியரை முட்டிக்கால் போட வச்சு பழிவாங்கிட்டாரு... இது பெரிய சர்ச்சையானதும், பஞ்., செயலரை 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க...
“ஆனா, இந்த பிரச்னைக் கெல்லாம் மூலக் காரண மான, 'நல்லாசிரியர்கள்' மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்ல... இந்த பிரச்னையில அவங்களை காப்பாத்த, கல்வித் துறை அதிகாரிகள் துடிக்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“சரி, ராஜா... சித்ராவை கேட்டதா சொல்லும்...” என, மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த குப்பண்ணா, “இடமாறுதலுக்கு முட்டுக்கட்டை போடறா ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“தி.மு.க., ஆட்சியில், 500க்கும் மேற்பட்ட சிறை காவலர்களை, சம்பந்தமே இல்லாம வெகு துாரங்களுக்கு துாக்கியடிச்சுட்டா... குடும்பத்தினரை பிரிஞ்சு, அவா எல்லாம் கடும் மன உளைச்சல்ல இருந்தா ஓய்...
“இதை எல்லாம், தற்போதைய சிறைத் துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் சரி செஞ்சுண்டு இருக்கார்... இடமாற்றம் செய்யப்பட்டவாளை, அவா குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறைகளுக்கே மாத்தி உத்தரவு போடறார் ஓய்...
“அடுத்து, தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்களின் பணியிட மாற்ற பட்டியலும் தயாரா இருக்கு... ஆனா, இந்த பட்டி யலை டி.ஜி.பி., கவனத்துக்கு கொண்டு போகாம, சில அதிகாரிகள் முட்டுக்கட்டை போடறா ஓய்...
“அதாவது, 'பணியிட மாறுதலுக்கு முன்னாடி எல்லாம் லட்சக்கணக்கில் வசூல் நடக்கும்... இந்த முறை அப்படி இல்லாம, நியாயமா பட்டியல் தயார் பண்ணிட்ட கடுப்புல, அதுக்கு முட்டுக்கட்டை போடறா'ன்னு, சிறை காவலர்கள் எல்லாம் புலம்பறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
