/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தனியார் எரிசாராய ஆலைக்கு கரிசனம் காட்டும் அதிகாரி!
/
தனியார் எரிசாராய ஆலைக்கு கரிசனம் காட்டும் அதிகாரி!
தனியார் எரிசாராய ஆலைக்கு கரிசனம் காட்டும் அதிகாரி!
தனியார் எரிசாராய ஆலைக்கு கரிசனம் காட்டும் அதிகாரி!
PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM

இ ஞ்சி டீயை பருகியபடியே, “கல்வி அதிகாரியை கண்டுக்காம விட்டுட்டாங்க...” என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“மதுரையில், சமீபத்துல பள்ளிக்கல்வி துறை சம்பந்தமான பல நிகழ்ச்சிகள்ல, அமைச்சர் மகேஷ் கலந்துக்கிட்டார்... இதுல கலந்துக்க, துவக்கக்கல்வி துறை இயக்குநர் நரேஷ், சென்னையில் இருந்து ரயில்ல மதுரைக்கு வந்தாருங்க...
“தன்னை மாவட்ட கல்வி அதிகாரிகள் வரவேற்று, கூட்டிட்டு போவாங்கன்னு ஸ்டேஷன்ல இறங்கியவருக்கு ஏமாற்றம்... அவருக்கு கார் கூட ஏற்பாடு பண்ணல...
“அதே நேரம், அதே ரயில்ல வந்த இணை இயக்குநருக்கு மட்டும் கார் ரெடி பண்ணியிருந்தாங்க... இதனால, அவரது கார்லயே இயக்குநர் ஏறி போயிருக்காரு... அதிகாரிகளுக்கான, 'புரோட்டாகாலை' முறையா பின்பற்றாத மதுரை கல்வி அதிகாரிகளுக்கு கடுமையா, 'டோஸ்' விட்டுட்டு போயிருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“அதிகாரி மீது கடுப்புல இருக்காவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“விழுப்புரம் மாவட்டத்தை, 'ஆட்சி' செய்யும் அதிகாரி கட்டுப்பாட்டில் ஏழு சட்டசபை தொகுதிகள் வருது... ஆனா, 'மாஜி' அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலுார் தொகுதியில நடக்கிற, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள்ல மட்டும் தான் அதிகாரி கலந்துக்கிடுதாரு வே...
“அந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத, பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியும், அரசு நிகழ்ச்சிகள்ல பங்கேற்று தலையை காட்டுதாரு... அவங்களை மட்டும் அதிகாரி விழுந்து விழுந்து கவனிக்காரு வே...
“அதே நேரம், மற்ற தொகுதிகள்ல நடக்கிற அரசு நிகழ்ச்சிகள்ல அதிகாரி கலந்துக்க மாட்டேங்காரு... இதனால, 'பொன்முடி தொகுதிக்கு தர்ற முக்கியத்துவத்தை மற்ற ஆறு தொகுதிகளுக்கும் தரணும்'னு, அங்க இருக்கிற ஆளும் கட்சியினரும், பொதுமக்களும் புலம்புதாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“என்கிட்டயும் ஒரு அதிகாரி தகவல் இருக்கு ஓய்...” என்றார், குப்பண்ணா.
“சீக்கிரமா சொல்லுங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“தமிழகத்தில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், 18 இருக்கு... இதுல, நாலு ஆலைகள் முடியே இருக்கு... மூடியிருக்கற திருப்பூர் மாவட்டம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, நாமக்கல் மாவட்டம், மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் துணை நிறுவனமா எரிசாராய ஆலைகள் இருக்கு ஓய்...
“எரிசாராயம் தயாரிக்க தேவையான மூலப்பொருளான, 'மொலாசஸ்' எனப்படும் சர்க்கரை கழிவுப்பாகு கிடைக்காம, இந்த ஆலைகள் மூடியே இருக்கு...
“இந்த சூழல்ல, ஆறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்ல இருந்து, 10,500 டன் மொலாசஸை மூணு மாசத்துக்குள்ள, தஞ்சை மாவட்டம், பாபநாசம் பக்கத்துல இருக்கற தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்க, சர்க்கரை துறை அதிகாரி உத்தரவு போட்டிருக்கார்... மொலாசஸ் இல்லாம அரசு எரிசாராய ஆலைகள் மூடிக்கிடக்கற சூழல்ல, தனியார் ஆலைக்கு சார்பா அதிகாரி நடந்துக்கறது பல சந்தேகங்களை எழுப்பியிருக்கு ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
“அன்பழகன் வர்றாரு... சுக்கு காபி குடுங்க பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.