/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலி தீர்மானம் போட்டு ' லே - அவுட் ' டுக்கு ஒப்புதல்!
/
போலி தீர்மானம் போட்டு ' லே - அவுட் ' டுக்கு ஒப்புதல்!
போலி தீர்மானம் போட்டு ' லே - அவுட் ' டுக்கு ஒப்புதல்!
போலி தீர்மானம் போட்டு ' லே - அவுட் ' டுக்கு ஒப்புதல்!
PUBLISHED ON : ஏப் 13, 2025 12:00 AM

டபராவில் பில்டர் காபியை ஆற்றியபடியே, “கோவில் நிலங்களை தாரை வார்த்தவரை மாத்திட்டா ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“சென்னைக்கு பக்கத்துல, கோவில்கள் நிறைஞ்ச மாவட்டத்துல, பிரசித்தி பெற்ற சிவன் கோவில் இருக்கு... இங்க, பல வருஷமா ஒரு அதிகாரி பணியில் இருந்தார் ஓய்...
“உயர் அதிகாரிகளை கைக்குள்ள வச்சுண்டு, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, அரசியல் செல்வாக்குள்ள நபர்களுக்கு தாரை வார்த்துட்டு இருந்தார்... அதுவும் இல்லாம, கோவில் நிலங்களை ஆக்கிரமிச்சு வச்சிருக்கறவாளை, வாடகைதாரர்களா மாத்தவும் ஏற்பாடு பண்ணிட்டு இருந்தார் ஓய்...
“இவரை பத்தி, அறநிலைய துறையின் சென்னை கமிஷனருக்கு நிறைய புகார்கள் பறந்துது... இதனால, இவரை சென்னைக்கு இடமாறுதல் பண்ணி, கமிஷனர் நடவடிக்கை எடுத்திருக்கார் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“என்ன சுரேஷ், இவ்வளவு லேட்...” என, நண்பரை வரவேற்ற அந்தோணிசாமி, “புது பதவிக்கு தயாராகுறாருங்க...” என்றார்.
“யாரு வே அது...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“குளுகுளு மலை மாவட்ட வனத்துறையில் மூணு வருஷத்துக்கு மேலா இருக்கும் அதிகாரிக்கு, அங்க இருந்து போகவே மனசு இல்ல... அந்த அளவுக்கு, 'பசை'யான இடமா இருக்கிறதால, பல இடமாறுதல் முயற்சி களை, உயர் அதிகாரி கள் தயவுல தடுத்து நிறுத்திட்டாருங்க...
“இந்த சூழல்ல, அரசு தேயிலை நிறுவனமான, 'டான்டீ'யில் இருந்த உயர் அதிகாரி, சமீபத்துல இடமாறுதல்ல போயிட்டார்... அந்த இடத்துக்கு வேற அதிகாரியை நியமிக்காம, வனத்துறை அதிகாரிக்கே கூடுதல் பொறுப்பு குடுத்திருக்காங்க...
“அதாவது, 'மலை மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்ற அதிகாரி விரும்புறதால, சீக்கிரமே பதவி உயர்வுடன், டான்டீ உயர் அதிகாரியா வரப் போறார்... அதுக்கு முன்னோட்டமா தான், பொறுப்பு அதிகாரியா நியமிக்கப்பட்டிருக்கார்'னு துறைக்குள்ள பேசிக்கிறாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“வாரும் அருண்குமார்... உம்ம சங்கதியை நாளைக்கு பேசி முடிச்சிடுதேன்...” என, நண்பரிடம் கூறிய அண்ணாச்சியே, “போலி தீர்மானம் போட்டு பல லட்சம் வசூல் பண்ணிட்டாவ வே...” என்றபடியே தொடர்ந்தார்...
“திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி கூட்டத்துல முறைப்படி தீர்மானம் நிறைவேற்றாம, 'லே - அவுட்'டுக்கு முறைகேடா அங்கீகாரம் வழங்கியிருக்காவ... அதாவது, நகராட்சியின் உயர் அதிகாரியும், தலைமை பொறுப்புல இருக்கிறவரும் சேர்ந்து, தீர்மானம் நிறைவேற்றிய மாதிரி போலியான ஆவணங்களை தயார் பண்ணியிருக்காவ வே...
“இதுக்காக, அவங்களுக்கு பல லட்சம் ரூபாய் கைமாறியிருக்கு... நகராட்சி தலைமை பொறுப்புல இருக்கிறவர், கட்சி தலைமை அறிவிச்ச வேட்பாளருக்கு எதிரா நின்னு ஜெயிச்சவருங்கிறதால, அவர் மேல ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அதிருப்தியில தான் இருக்காவ...
“இப்ப, அரசு ஆவணங்களை திருத்துறது, மோசடி உள்ளிட்ட பிரிவுகள்ல அவர் மேல வழக்கு தொடரவும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் பிளான் பண்ணிட்டு இருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
“நேத்து, மத்தீன் வீட்டுக்கு போயிருந்தேன் சரவணகுமார்... அதான், பேச முடியல பா...” என, நண்பரிடம் அன்வர்பாய் காரணம் கூற, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.