/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
குவாரி உரிமையாளர்களிடம் மிரட்டல் வசூல்!
/
குவாரி உரிமையாளர்களிடம் மிரட்டல் வசூல்!
PUBLISHED ON : ஆக 19, 2024 12:00 AM

கருப்பட்டி காபியை பருகியபடியே, ''விதை இயந்திரங்கள் மாயமாயிட்டு வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாராவது திருடிட்டு போயிட்டாங்களா பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''இல்ல... தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்புல கோவை, மதுரை, திருநெல்வேலியில ஒன்பது விதை, 'வெண்டிங்' இயந்திரங்களை வச்சாவ... ஒவ்வொரு இயந்திரத்துக்கும், 30 லட்சம் ரூபாய் செலவாச்சு வே...
''இதுல, விவசாயி கள், 10 ரூபாயை போட்டா, ஒரு விதை பாக்கெட் வந்து விழும்... ஆனா, பல மாசமா இந்த, ஒன்பது இயந்திரங்களும் செயல்படாம, பூட்டியே வச்சிருக்காவ வே...''இதே மாதிரி, கோவை வேளாண் பல்கலை மாணவர்களுக்கு, போட்டி தேர்வு மையம் ஒண்ண துவங்க போறதா, ஆடம்பரமா துவக்க விழா எல்லாம் நடத்துனாவ... ஆனா, அதோட சரி... அப்புறம், பயிற்சி மையம் என்னாச்சுன்னே தெரியல... இப்படி, வீண் விளம்பரங்களை பண்ணி, மக்களின் வரிப்பணத்தை பாழடிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அமைச்சர் தொகுதி யிலயே அநியாயம் நடக்கறது ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கி படிக்கறதுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி இருக்கு... இதுல, பல வருஷமா, 10க்கும் கம்மியான மாணவர்கள் தான் தங்கியிருக்கா ஓய்...
''ஆனாலும், நிறைய மாணவர்கள் தங்கியிருக்கறதா கணக்கு காட்டி, ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கறது... இங்க இருக்கற சில மாணவர்களும், அடிக்கடி ராத்திரி வெளியில ஊர் சுத்த போயிடறா ஓய்...
''அதுவும் இல்லாம, இவாளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் ஈசியா கிடைக்கறது... ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, இந்த மாவட்டத்தை சேர்ந்தவங்க தான்... இவங்க ஒரு நாள் கூட, தன் மாவட்டத்துல இருக்கற இந்த விடுதியை பார்வையிட்டு, ஆய்வு நடத்தியதே இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப் பூண்டி பகுதிகள்ல இருக்கிற கல் குவாரிகள் சரி வர இயங்காம இருக்குது... இதனால, குவாரி தொடர்புடைய பல தொழில்களும் பாதிக்கப்பட்டிருக்குது பா...
''குறிப்பா, குவாரிகளுக்கு அனுப்பி வைக்கிற கனரக வாகனங்கள், வங்கிக் கடன் கட்ட முடியாம முடங்கி கிடக்குது... பல தொழிலாளர்கள் வேலையில்லாம சிரமப்படுறாங்க பா...''இந்த சூழல்ல, மணல் அள்ளும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை சொல்லி, நெல்லை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த இருவர், ரவுடிகளுடன் குவாரிகளுக்கு போய், உரிமையாளர்களை மிரட்டி, 35 முதல், 45 சதவீதம், 'ராயல்டி' தொகை தரணும்னு மிரட்டுறாங்க...
''இதுக்கு, 'தனிப்பட்ட யாரும் ராயல்டி தொகை வசூலிக்க அரசு அனுமதி அளிக்கலையே'ன்னு குவாரி உரிமையாளர்கள் கேட்டா, 'உங்களிடம் வாங்குற பணத்தை, துறையின் முக்கிய புள்ளி மற்றும் அதிகாரிகள் பலருக்கும் பிரிச்சு குடுக்கிறோம்'னு காரணம் சொல்றாங்க... இந்த மிரட்டல் வசூல் சம்பந்தமா, டி.ஜி.பி., மாவட்ட எஸ்.பி., மற்றும் கனிம வளத் துறை அதிகாரிகளுக்கு உரிமையாளர்கள் புகார் அனுப்பியிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பெரியவர்கள் அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.