/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அறங்காவலர் இன்றி அம்போவாகும் பக்தர்கள் பணம்!
/
அறங்காவலர் இன்றி அம்போவாகும் பக்தர்கள் பணம்!
PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM

“பொங்கல் பரிசு கிடைக்குமான்னு காத்துட்டு இருக்காங்க பா...” என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
“அதான் இல்லன்னு அரசாங்கத்துல சொல்லிண்டாளே ஓய்...” என்றார், குப்பண்ணா.
“முழுசா கேளுங்க... அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, 50 சதவீதமா இருந்த அகவிலைப்படியை, 53 சதவீதமா உயர்த்தி, 2024 ஜூலை முதல் நிலுவை தொகையுடன் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டிருந்தாரே... இதுக்கான அரசாணையும் போட்டாச்சு பா...
“ஆனா, ஆவின் ஊழியர்களுக்கு இந்த உயர்வு நடைமுறைக்கு வரல... 2023ல இருந்தே இப்படித்தான் பண்றாங்க பா... நிலுவைத் தொகையும் தரல...
“இதனால, 'அகவிலைப்படி உயர்வுடன், ரெண்டு வருஷ நிலுவைத் தொகையை பொங்கல் பரிசா தந்தா நல்லாயிருக்கும்'னு 3,500 ஆவின் ஊழியர்களும், முதல்வருக்கு மனு அனுப்பிட்டு காத்திருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“இன்னும் பதவி கிடைக்கலன்னு புலம்பிண்டு இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“பா.ஜ., - அ.தி.மு.க.,ன்னு மாறி மாறி பயணித்தவர், டாக்டர் மைத்ரேயன்... மூணு முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருந்திருக்கார் ஓய்...
“பன்னீர்செல்வம் அணியில இருந்தவர், கடைசியா பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வுக்கே வந்துண்டார்... இவரை மாதிரியே பா.ஜ.,வுல இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்த ஐ.டி., அணி மாநில நிர்வாகி நிர்மல்குமார், நடிகை கவுதமி, சிறுபான்மையினர் அணி மாநில நிர்வாகி பாத்திமா அலிக்கெல்லாம் பதவிகள் குடுத்திருக்கா ஓய்...
“ஆனா, மைத்ரேயனுக்கும், பன்னீர் அணியில இருந்து விலகி வந்த ஆலந்துார், 'மாஜி' எம்.எல்.ஏ., வெங்கட்ராமனுக்கு மட்டும் பழனிசாமி இன்னும் எந்த பதவியும் தரல... 'தை பிறந்தால் வழி பிறக்கும்'னு ரெண்டு பேரும் பதவிக்காக வெயிட் பண்ணிண்டு இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“அறங்காவலர் குழு அமைக்காம இழுத்தடிக்காவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த கோவில்லங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் இருக்குல்லா... தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றரை வருஷமாகியும் இன்னும் அறங்காவலர் தலைவர், உறுப்பினர்களை நியமிக்கல வே...
“இந்த கோவிலுக்கு திருப்பணி செய்ய பல தனியார் நிறுவனங்கள், பக்தர்கள் தயாரா இருக்காவ... ஆனா, இது சம்பந்தமா அறநிலைய துறையிடம் பேசி அனுமதி வாங்கி தர அறங்காவலர் குழு இல்ல வே...
“இந்த கோவில்ல சிறப்பு தரிசனத்துக்கு, 100 ரூபாய் வசூலிக்காவ... இந்த டிக்கெட்டை பக்தர்களிடம் வாங்கி கிழிச்சு தராம, மறுபடியும் அதே டிக்கெட்டை பக்தர்களுக்கு வித்து சிலர் காசு பார்த்துடுதாவ வே...
“இதனால, கோவிலுக்கு வர வேண்டிய வருவாய், தனி நபர்கள் பாக்கெட்டுக்கு போயிடுது... 'அறங்காவலர் குழுவை நியமிச்சா இந்த மாதிரி முறைகேடுகளை தடுக்க முடியும்'னு பக்தர்கள் புலம்புதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் இளைஞர்கள் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.