/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கல் குவாரி உரிமையாளர்களிடம் தி.மு.க.,வினர் வசூல்!
/
கல் குவாரி உரிமையாளர்களிடம் தி.மு.க.,வினர் வசூல்!
கல் குவாரி உரிமையாளர்களிடம் தி.மு.க.,வினர் வசூல்!
கல் குவாரி உரிமையாளர்களிடம் தி.மு.க.,வினர் வசூல்!
PUBLISHED ON : ஜன 04, 2026 02:52 AM

பி ல்டர் காபியை ருசித்தபடியே, ''பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்களை தெரிவிக்கறா ஓய்...'' என, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் இருக்கிற நடிகர் கமலின் பூர்வீக வீடு தான், இப்ப அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி ஆபீசா செயல்படறது... இந்த ஆபீஸ் மேல பெரிய, 'டிஜிட்டல் போர்டு' வச்சு, அந்த கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை ஒளிபரப்பிண்டு இருந்தா ஓய்...
''அதை யாரும் பெருசா கண்டுக்கல... இதனால, இப்ப அந்த போர்டுல, அமெரிக்க கரன்சியான டாலரின் மதிப்பு, பெட்ரோல் விலை, வெப்பநிலை, காற்றின் தரக்குறியீடு மாதிரி, பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்களை ஒளிபரப்ப... இதை, அந்த வழியா போறவா நின்னு பார்த்துட்டு போறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''படத்தை வெளியிட வேண்டாம்னு தடை போட்டுட் டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''நடிகர் எஸ்.வி.சேகர், சமீபத்துல தன், 75வது பிறந்த நாளை, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன், சென்னை தி.நகர்ல இருக்கிற ஒரு ஹோட்டல்ல கொண்டாடி இருக்காரு... முதல்வர் ஸ்டாலின் திடீர்னு அங்க வந்து, சேகருக்கு கேக் ஊட்டி வாழ்த்து சொல்லி இருக்காருங்க...
''சேகர், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் எல்லாம், முதல்வருடன் போட்டோ எடுத்துக்கிட்டாங்க... சிலர் தங்களது மொபைல் போன்கள்லயும் படம் எடுத்துக்கிட்டாங்க...
''முதல்வர் கிளம்பியதும், நண்பர்கள், குடும்பத்தினரிடம் பேசிய சேகர், 'நட்பு ரீதியா முதல்வர் என்னை வாழ்த்தியிருக்காரு... இந்த படங்களை யாரும் சமூக வலைதளங்கள்ல வெளியிட்டு, விளம்பரம் தேடிக்க வேண்டாம்'னு சொல்லிட்டாராம்...
''ஆனா, மறுநாள் வெளியான, தி.மு.க., பத்திரிகையான 'முரசொலி'யில், சேகருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிச்ச படத்தை போட்டு, சேகருக்கு இன்ப அதிர்ச்சி குடுத்துட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மிரட்டியே வசூல் பண்ணுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சட்டசபை தேர்தல் நெருங்குறதால, ஆளுங்கட்சியினர் தீவிர வசூல் வேட்டையில இறங்கிட்டாவ... துாத்துக்குடி மாவட்டத்தில், 70க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் விதிமீறல் நடந்திருக்கிறதா சொல்லி, அதிகாரிகள் துணையுடன் பேரம் பேசியிருக் காவ வே...
''அதாவது, 'குவாரிக்கு தலா, 5 லட்சம் ரூபாய் குடுத்துடுங்க... இல்லாட்டி, 'ட்ரோன்' மூலமா குவாரிகளை ஆய்வு செய்து, பல கோடி ரூபாய் அபராதம் தீட்டிருவோம்'னு மிரட்டியிருக்காவ வே...
''குவாரி உரிமையாளர்களோ, 'மாசா மாசம் தான் குறிப்பிட்ட தொகையை கட்டிங்கா தர்றோமுல்லா... தனியா, 5 லட்சம் ரூபாய் கேட்டா எப்படி'ன்னு கேட்டிருக்காவ... உடனே, சில குவாரிகள்ல மட்டும் ட்ரோன் மூலமா ஆய்வு செஞ்சி, அபராதம் போட்டிருக்காவ வே...
''இதனால, மிரண்டு போன உரிமையாளர்கள், தங்களுக்குள்ள பேசி முடிவெடுத்து, 'அஞ்செல்லாம் முடியாது... தலா, 1 லட்சம் ரூபாய் தர்றோம்'னு சொல்லியிருக்காவ... ஆளுங்கட்சியினரும் இதை வசூல் பண்ணிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

