/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நிலத்தடி நீர் சேமிப்பில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு!
/
நிலத்தடி நீர் சேமிப்பில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு!
நிலத்தடி நீர் சேமிப்பில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு!
நிலத்தடி நீர் சேமிப்பில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு!
PUBLISHED ON : ஜன 05, 2026 02:57 AM

''இ வங்களை கட்டுப்படுத்த முடியாதான்னு புலம்புறாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''புதுக்கோட்டை மாவட்டத்தில், 'யு டியூப் சேனல்' நடத்துறவங்க தொல்லை அதிகமாகிட்டே போகுது... கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களுக்கு மொபைல் போனுடன் வர்ற இவங்க, 'எங்க சேனலுக்கு இத்தனை ஆயிரம் பார்வையாளர்கள் இருக்காங்க... உங்க நிகழ்ச்சிகள், உடனே அவங்களுக்கு போய் சேர்ந்துடும்'னு சொல்லி, 'கட்டிங்' வசூலிக்கிறாங்க...
''தேர்தல் நெருங்குறதால, அரசியல்வாதிகள் சிலர், இந்த சேனல்காரங்களிடம், தங்களது புகழை பரப்பும்படியும், தங்களுக்கு வேண்டாதவங்களுக்கு எதிரா பழைய வீடியோ பதிவுகள் இருந்தா, அதை வெளியிடும்படியும் சொல்லி, கணிசமான தொகையும் குடுக்கிறாங்க...
''இந்த மாதிரி சேனல்களால, கட்சியில கோஷ்டி பூசல் அதிகரிக்குதுன்னு எல்லா கட்சியினருமே புலம்புறாங்க... 'இவங்களை கட்டுப்படுத்த, அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கணும்'னு பலரும் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வாக்கி டாக்கி மாயமாகிடுத்து ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளையம் போலீசார், தினமும் ரோந்து போறச்சே, 'வாக்கி டாக்கி'யை எடுத்துண்டு போறது வழக்கம்... சமீபத்துல, இங்க ஒரு வாக்கி டாக்கி காணாம போயிடுத் து ஓய்...
''ஸ்டேஷன்ல இருந்து காணாம போச்சா இல்ல ரோந்து போன போலீசார், தவற விட்டுட்டாளான்னு தெளிவா தெரியல... எப்படியாவது வேற ஒண்ணை வாங்கி, நிலைமையை சமாளிச்சிடலாம்னு ஸ்டேஷன் போலீ சார் நினைச்சா ஓய்...
''அதுக்குள்ள எஸ்.பி.,க்கு விஷயம் தெரிஞ்சு, அந்த ஸ்டேஷன்ல பணியில் இருந்த தனிப்பிரிவு போலீஸ்காரருக்கு, 'டோஸ்' விட்டதோட, அவரை ஆயுதப்படைக்கும் அதிரடியா மாத்திட்டார்...
''அடுத்து, 'வாக்கி டாக்கியை தொலைச்ச போலீசார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும்'னு எஸ்.பி., ஆபீஸ்ல பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''போலி ரசீதுகள் மூலமா முறைகேடு நடந்திருக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக அரசின் வேளாண் துறை கட்டுப்பாட்டில், நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை என்ற பிரிவு செயல்படுது... அதாவது, மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் பணிகள், இந்த முகமை சார்பில் நடக்கு வே...
''மழை பெஞ்சா மட்டும் சாகுபடி செய்யக்கூடிய, மானாவாரி நிலங்கள் அதிகம் இருக்கிற, துாத்துக்குடி மாவட்டத்துக்கு, இந்த திட்டத்தில், கடந்த அஞ்சு வருஷமா கூடுதல் நிதி ஒதுக்கியிருக்காவ...
''ஆனா, அந்த நிதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, பெருசா எதையும் செ ய்யாத அதிகாரிகள் சிலர், அதுக்கான பணிகள் நடந்தது மாதிரி போலி ரசீதுகளை தயார் பண்ணி, பணத்தை எடுத்துட்டதா விவசாயிகள் குற்றம் சாட்டுதாவ வே...
''அதனால, 'இதுவரை நடந்ததா சொல்ற பணிகளுக்கான ஆவணங்களை ஆய்வு செஞ்சி, எங்கெங்க நிலத்தடி நீர்மட்டத்தை சேகரிக்கும் பணிகள் நடந்திருக்கு... யார் யாருக்கு எவ்வளவு தொகை போயிருக்குன்னு விசாரிக்கணும்... அப்படி செஞ்சா, ஏகப்பட்ட முறைகேடுகள் அம்பலமாகும்'னு விவசாயிகள் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
விவாதம் முடியவே, பெரியவர்கள் கிளம்பினர்.

