/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'லே அவுட்' ஒப்புதலுக்கு வாரி சுருட்டிய அதிகாரிகள்!
/
'லே அவுட்' ஒப்புதலுக்கு வாரி சுருட்டிய அதிகாரிகள்!
'லே அவுட்' ஒப்புதலுக்கு வாரி சுருட்டிய அதிகாரிகள்!
'லே அவுட்' ஒப்புதலுக்கு வாரி சுருட்டிய அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜன 06, 2026 01:49 AM

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''அ.தி.மு.க., போட்டியிட்டா ஜெயிக்குமான்னு கேட்கிறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த தொகுதியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை திருவொற்றியூர் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., அமைப்பு ரீதியா கிழக்கு, மேற்குன்னு ரெண்டு பகுதிகளா இருந்துச்சு... இதுல, மாநகராட்சியின் 11 வார்டுகள் அடங்கிய மேற்கு பகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பனும், ஏழு வார்டுகள் அடங்கிய கிழக்கு பகுதிக்கு, பரமசிவம் என்பவரும் பகுதி செயலர்களா இருந்தாங்க பா...
''இந்த சூழல்ல, திருவொற்றியூர் அ.தி.மு.க.,வை நாலா பிரிச்சி, மற்ற ரெண்டு பகுதிகளுக்கு புதிய செயலர்களை தலைமை நியமிச்சிருக்கு... 'நாலு பகுதி நிர்வாகிகளும் தனித்தனி கோஷ்டியா செயல் படுறதால, வர்ற சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க., இங்க ஜெயிக்குமா'ன்னு, அந்த கட்சியினரே சந்தேகப் படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சீட் வாங்கி தரதா, லட்சக்கணக்குல வசூல் பண்ணிட்டார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - தனி சட்டசபை தொகுதி பொறுப்பாளரா, கோவையைச் சேர்ந்த நிர்வாகியை, தி.மு.க., தலைமை நியமிச்சிருக்கு... அங்க போன நிர்வாகியோ, 'எனக்கு, கட்சியின் சென்னை தலைமை அலுவலக நிர்வாகி ஒருத்தர் நல்ல பழக்கம்... அவர் மூலமா உங்களுக்கு சீட் வாங்கி தர்றேன்'னு சொல்லி, லட்சக்கணக்குல வசூல் பண்ணிட்டார் ஓய்...
''இதை நம்பாத சிலரிடம், தலைமை அலுவலக நிர்வாகி மாதிரியே, மொபைல் போன்ல குரலை மாத்தி பேசி, பணத்தை வசூல் பண்ணியிருக்கார்... ஆனா, இப்ப உண்மை தெரிஞ்சு, பணம் குடுத்தவா அதிர்ச்சியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, ''முருகனை தெரியும்னு, கணேஷ் எல்லாருக்கும் அல்வா குடுத்துட்டாருங்க...'' என கூறி வைத்தபடியே, ''லே அவுட் ஒப்புதல்ல வாரி சுருட்டிட்டாங்க...'' என்றார்.
''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''பெரம்பலுார் மாவட்டம், அகரம்சீகூர் பார்டர் கிராமத்துல, 8.63 ஏக்கர் நிலத்தை, 172 வீட்டு மனைகளா பிரிச்சி, அதுக்கு அனுமதி கேட்டு, ஊராட்சி அலுவலகத்தில் வெங்கடாசலம்னு ஒருத்தர் விண்ணப்பிச்சாரு... வீட்டு மனை பிரிவுக்கு தார் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க, 18.50 லட்சம் ரூபாயையும் ஊராட்சி கணக்குல கட்டிட் டாருங்க...
''அனுமதி அளிக்க வேண்டிய வேப்பூர் ஒன்றிய அதிகாரி, தனக்கு நாலு வீட்டு மனைகளும், 5 லட்சம் ரூபாயும் கேட்டு, முதல் கட்டமா 5 லட்சத்தை வாங்கிட்டாரு... அதுக்குள்ள அவருக்கு, 'டிரான்ஸ்பர்' வந்து போயிட்டாருங்க...
''அடுத்து வந்த பெண் அதிகாரி, தன் பங்குக்கு லட்சக்கணக்குல, 'கட்டிங்' வாங்கிட்டு, அனுமதி குடுத்துட்டாங்க... ஆனா இந்த, 'அப்ரூவல்' மூலமா அரசுக்கு, 66 லட்சம் ரூபாய் வருவாய் இழப்புன்னு கலெக்டருக்கு புகார் போயிடுச்சுங்க.. .
''இதனால, பயந்து போன பெண் அதிகாரி, தான் கொடுத்த அனுமதியை ரத்து பண்ணிட்டாங்க... ஆனா, அனுமதியை ரத்து பண்ற அதிகாரம் கலெக்டரிடம் தான் இருக்கு... இது, தெரியாமலே பெண் அதிகாரி ரத்து உத்தரவை போட்டிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
எதிரில் வந்தவரை நிறுத்திய அண்ணாச்சி, ''வாரும் அறிவழகன்... ஊருல சங்கீதா எல்லாம் சவுக்கியமா வே...'' என நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

