கம்பி எண்ணுவதை தவிர்க்க தி.மு.க., 'மாஜி' விடும் துாது!
கம்பி எண்ணுவதை தவிர்க்க தி.மு.க., 'மாஜி' விடும் துாது!
PUBLISHED ON : ஜூலை 06, 2026 12:09 AM

“பண பலன்கள் கிடைக்காம தவிக்கறா ஓய்...” என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் குப்பண்ணா.
“எந்த துறையில வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழக நெடுஞ்சாலை துறையில், கோட்ட பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள்ல நிறைய அதிகாரிகள் வேலை பார்க்கறா... இவாள்ல, போன வருஷம் ஓய்வு பெற்ற பலருக்கு, இன்னும் ஓய்வூதிய பண பலன் கிடைக்கல ஓய்...
“இது சம்பந்தமா, உயர் அதிகாரிகளை பார்த்து கேட்டாலும், எந்த காரணமும் சொல்லாம இழுத்தடிக்கறா... இதனால, தங்களுக்கு பண பலன்கள் சீக்கிரமா கிடைக்க நடவடிக்கை எடுக்கணும்னு, அவாள்லாம் முதல்வருக்கு மனு அனுப்பியிருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“அரசுக்கு கடும் நிதி நெருக்கடி நிலவுறதால நிறுத்தி வச்சிருப்பாங்களோ...” என்ற அந்தோணிசாமியே, “மன்னிப்பு கடிதம் வாங்கிட்டு அனுப்பிட்டாங்க...” என்றபடியே தொடர்ந்தார்...
“வேலுார் மாநகராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த சுஜாதா மேயராகவும், சுனில் என்பவர் துணை மேயராகவும் இருக்காங்க... சுஜாதாவுக்கும், சுனிலுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான்...
“மேயரை மரியாதை இல்லாம ஒருமையில் அநாகரிகமா பேசிட்டதா சுனில் மீது புகார்கள் வந்துச்சு... அதோட, 'மாநகராட்சி ஒப்பந்தங்களை, தன் பினாமிகளுக்கு துணை மேயர் வழங்குறார்'னு மேயரும், தி.மு.க., கவுன்சிலர்களும் சென்னை வந்து, கட்சி தலைவர் ஸ்டாலினிடமே புகார் குடுத்தாங்க...
“இது சம்பந்தமா விசாரிக்கும்படி, கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஸ்டாலின் உத்தரவு போட்டாரு... ஆர்.எஸ்.பாரதி நடத்திய விசாரணையில், சுனில் மீது தான் தப்புன்னு தெரியவந்துச்சு... இதனால அவரை கூப்பிட்டு எச்சரிக்கை பண்ணி, 'இனிமே இப்படி நடக்க மாட்டேன்'னு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிட்டு அனுப்பியிருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“அதுக்கு மேல ஏதாவது நடவடிக்கை எடுத்தா, த.வெ.க.,வுக்கு தாவிடுவாரோன்னு பயந்திருப்பாவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “எப்படியாவது தப்பிக்க உதவுங்கன்னு கேட்டிருக்காரு வே...” என்றார்.
“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தி.மு.க., ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் புதுப்பிக்கவும், 100 கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணி மோசடி பண்ணிட்டதா, அக்கட்சி பிரமுகர் அரசகுமாரை கைது பண்ணியிருக்காங்கல்லா... இதனால, போன ஆட்சியில பள்ளிக்கல்வி துறைக்கு பொறுப்பு வகித்த ஆளுங்கட்சி முக்கிய புள்ளி பதற்றத்துல இருக்காரு வே...
“அடுத்து, தன்னையும் கம்பி எண்ண வச்சிடுவாங்களோன்னு பயந்து போய், ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளி ஒருத்தருக்கு துாது விட்டிருக்காரு... இதுக்காக, தனக்கு நெருக்கமான இரும்பு கம்பி நிறுவன அதிபர்கள் இருவரிடம் பேசியிருக்காரு வே...
“அந்த ரெண்டு பேரும், ஆளுங்கட்சி முக்கிய புள்ளி ஒருத்தருக்கு உறவினர்களாம்... அவங்களும், 'அவரிடம் பேசி எப்படியாவது உங்களை காப்பாத்த முயற்சி பண்றோம்'னு வாக்கு குடுத்திருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“வாங்க மகேஷ்... கண்ணப்பனும், திருமலை ராஜாவும் இப்பதான் சம்பத்குமாரை பார்க்க கிளம்பினாங்க...” என நண்பரிடம் அந்தோணிசாமி கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.
