/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தொகுதி பறிபோகும் பீதியில் பெண் அமைச்சர்!
/
தொகுதி பறிபோகும் பீதியில் பெண் அமைச்சர்!
PUBLISHED ON : மார் 24, 2026 03:03 AM

பி ல்டர் காபியை ருசித்தபடியே, ''உடந்தையா இருந்தவர் தப்பிச்சிட்டார் ஓய்...'' என்றபடி, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''விருதுநகரில், ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகி, 80 லட்சம் ரூபாய் மோசடி செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய, போலீஸ் ஏட்டு சுந்தர்ராஜ்னு ஒருத்தரை கைது பண்ணியிருக்கா... ஏட்டு மீது, மகளிர் போலீஸ்ல அந்த பெண் புகார் அளிக்க வந்தப்ப, இன்னொரு தனிப்பிரிவு ஏட்டு தடுத்திருக்கார் ஓய்...
''தனிப்பிரிவு ஏட்டுக்கு, மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் நல்ல தொடர்பு இருந்ததால, தன் செல்வாக்கை பயன்படுத்தி, சுந்தர்ராஜ் ஏட்டை காப்பாத்திண்டு இருந்தார்... கடைசியா, கோர்ட் தலையிட்ட பிறகு தான், சுந்தர்ராஜை கைது பண்ணா ஓய்...
''அதே நேரம், அவருக்கு பக்கபலமா இருந்த தனிப்பிரிவு ஏட்டு, இப்பவும் எந்த செல்வாக்கும் குறையாம வலம் வரார்... இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் போயும், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கண்டுக்க மாட்டேங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''செந்தில்நாதன், தள்ளி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''கூட்டணியில் ஒட்டு போட்டாலும், அடிமட்டத்தில் விரிசல் நீடிக்குதுங்க...'' என்றார்.
''தி.மு.க., - காங்., தகவலா வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''ஆமா... காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்காக, மத்திய அரசை கண்டிச்சு, மதுரையில், தி.மு.க., கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தை, காங்கிரசார் புறக்கணிச்சிட்டாங்க... தி.மு.க., தரப்புல, 'மதுரை மாநகர மாவட்ட காங்., தலைவர் நல்லமணியை, தி.மு.க., அலுவலகத்தில் இருந்து பலமுறை போன்ல கூப்பிட்டும், அவர் போனை எடுக்கல'ன்னு சொல்றாங்க... நல்லமணியோ, 'எனக்கு எந்த போன் காலும் வரல'ன்னு சொல்றாருங்க...
''போராட்டத்தை ஏற்பாடு செஞ்சது, மாநகர தி.மு.க., செயலர் தளபதி... நல்லமணியோ, விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூரின் ஆதரவாளராம்... மாணிக்கம் தாகூர் ஏற்கனவே தளபதியை கடுமையை விமர்சனம் பண்ணிட்டு இருந்ததால, அவரது ஆதரவாளரை அழைக்காமலே, ஆர்ப்பாட்டத்தை நடத்திட்டாங்க... 'இவங்க பனிப்போர் தேர்தல்லயும் நீடிக்குமோ'ன்னு ரெண்டு கட்சியினரும் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தொகுதி பறிப்பு பீதியில இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சட்டசபை தேர் தல்ல போட்டியிட விருப்ப மனு குடுத்த தி.மு.க.,வினரிடம், முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி முடிச்சிருக்காரே... தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சர் தொடர்ந்து போட்டியிடும் தொகுதிக்கான நேர்காணல்ல, பெண் அமைச்சரோடு சேர்த்து மொத்தமே நாலு பேர் தான் கலந்துக்கிட்டாங்க பா...
''நேர்காணல்ல, 'வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு'ன்னு முதல்வர் கேட்டதுக்கு, 'கண்டிப்பா ஜெயிச்சிடுவேன்'னு அமைச்சர் சொல்லியிருக்காங்க... உடனே முதல்வர், 'உங்க தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்'னு அதிரடியா ஒரு கேள்வியை போட்டிருக்காரு பா...
''இதனால, அதிர்ச்சியான அமைச்சர், 'நீங்க என்ன முடிவு எடுத்தாலும் ஏத்துக்குவேன்'னு சமாளிச்சிட்டு வந்திருக்காங்க... ஆனாலும், தொகுதி பறிபோயிடுமோன்னு, பெண் அமைச்சர் பீதியில இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, ''கீதா ஜீவன் மேடம், சொல்லுங்க...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

