/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஒன்றியத்துக்கு ரூ.30,000 வசூலித்த பெண் அதிகாரி!
/
ஒன்றியத்துக்கு ரூ.30,000 வசூலித்த பெண் அதிகாரி!
PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM

''டி வி ஊழியர் அட்ட காசம் தாங்க முடியல ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாக்கள்ல, அவர் பேச வேண்டிய விஷயங்களை, 'மைக்' முன்னாடி இருக்கற, 'பிராம்ப்டர்' என்ற கருவியில் ஓடும்... இந்த பிராம்ப்டரை மேடையில், 'செட்' பண்ற வேலையை ஆளுங்கட்சி, 'டிவி' ஊழியர் ஒருத்தர் தான் பண்றார் ஓய்...
''அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னை சாந்தோம்ல நடந்துது... விழா மேடையின் பின்புறம் அமைக்க வேண்டிய நிகழ்ச்சி குறித்த விளம்பர டிசைனை, சமூக நலத்துறை செயலரும், தலைமைச்செயலரும் பார்த்து ஒப்புதல் குடுத்துட்டா ஓய்...
''ஆனா, விழாவுக்கு முதல் நாள் இரவு, பிராம்ப்டர் பொருத்த வந்த, டிவி ஊழியர், 'இந்த விளம்பரம் சரியில்ல... இதை உடனே மாத்துங்கோ... இல்லேன்னா முதல்வரின் உதவியாளரிடம் புகார் பண்ணிடுவேன்'னு மிரட்டல் விடுத்திருக்கார்...
''வேற வழியில்லாம அதை மாற்றும்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் உத்தரவிட, ராத்திரி நேரத்துல ஊழியர்கள் அலைஞ்சு திரிஞ்சு, மாற்று விளம்பரத்தை தயார் செய்து பொருத்தியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பிரகாஷ், தள்ளி உட்காருங்க...'' என்ற அன்வர்பாயே, ''அழுது புலம்பி வீடியோ வெளியிட்டிருக்காரு பா...'' என்றார்.
''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ஜான் தங்கத்தை மாத்திட்டு, ஜெயசுதர்சன் என்பவரை புதிய செயலரா தலைமை அறிவிச்சிருக்கு... ஜான் தங்கத்தின் ஆதரவாளரான, பத்மநாபபுரம் நகர செயலரா இருந்த மணிகண்டனை துாக்கிட்டு, டேனியல் என்பவருக்கு அந்த பதவியை ஜெயசுதர்சன் வழங்கிட்டாரு பா...
''இதனால அதிர்ச்சியான மணிகண்டன், சென்னையில் ஜெ., நினைவிடத்துல இருந்தபடி வெளியிட்ட வீடியோவுல, 'என் சக்தியை மீறி செலவு பண்ணி, கட்சி நிகழ்ச்சிகளை நடத்தினேன்... ஆனா, 'மாஜி' முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இருந்து வந்தவருக்கு பதவி குடுத்திருக்காங்க... எனக்கு பழனிசாமி நியாயம் வழங்கணும்'னு கண்ணீர் மல்க கேட்டிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''தலா, 30,000 ரூபாய் வசூல் பண்ணிட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் என்ற, 'திஷா' மீட்டிங்கை மூணு மாசத்துக்கு ஒரு முறை நடத்துவாங்க... இந்த குழுவுக்கு எம்.பி., தான் தலைவரா இருப்பாருங்க...
''திருப்பூர்ல நடக்கிற இந்த கூட்டங்கள்ல, மாவட்ட அமைச்சர்களான சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பெரும்பாலும் கலந்துக்கிறாங்க...
''சமீபத்துல நடந்த திஷா மீட்டிங் செலவுக்குன்னு சொல்லி, மாவட்டத்துல இருக்கிற, 13 ஒன்றியங்களின் பி.டி.ஓ.,க்களிடம் தலா, 30,000 ரூபாயை, புதுசா வந்திருக்கிற பெண் அதிகாரி வசூல் பண்ணிட்டாங்க... 'முழு தொகை, 3.90 லட்சத்தையும் ஆலோசனை கூட்டத்துக்கு தான் செலவு செஞ்சாங்களா'ன்னு பி.டி.ஓ.,க்கள் எல்லாம் புலம்புறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சங்கமித்ரா மேடம் சொல்லுங்கோ...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் எழுந்தனர்.