/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் இலவச திட்ட வீடுகள்!
/
அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் இலவச திட்ட வீடுகள்!
PUBLISHED ON : ஆக 20, 2025 12:00 AM

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''தனியார் நிதியை, 'ஆட்டை' போட்டுட்டாரு பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தின் நிர்வாக பிரிவில் இருக்கிற அதிகாரியை தான் சொல்றேன்... சமீபத்துல ஒரு தனியார் நிறுவனம் சார்பில், சமூக பாதுகாப்பு நிதியா, சில லட்சம் ரூபாயை எஸ்.பி., அலுவலகத்துக்கு குடுத்திருக்காங்க பா...
''அந்த நிதியில், சாலை தடுப்புகள் அமைக்கிறது, பேரிகார்டுகள் வாங்குறது, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துறது போன்ற பணிகளை செய்யணும்...
''ஆனா, இந்த அதிகாரி அந்த பணிகளை எல்லாம் அரசு நிதியில பண்ணிட்டு, சமூக பாதுகாப்பு நிதியை சத்தமில்லாம அமுக்கிட்டாரு பா...
''இது சம்பந்தமா பைல்கள் தயார் பண்ணி, தனக்கு கீழ வேலை பார்க்கிற அதிகாரிகளிடம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி கையெழுத்தும் வாங்கிட்டாரு...
''இதனால, 'நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா, நாங்க தானே பதில் சொல்லணும்'னு அந்த அதிகாரிகள் எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஜெகன், தள்ளி உட்காரும்...'' என்ற படியே வந்த குப்பண்ணா, ''எங்க ஏரியாவுக்கும் கொஞ்சம் தள்ளி விடுங்கன்னு பரிதாபமா கேக்கறா ஓய்...'' என்றார்.
''என்னத்த வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''மதுரை மாவட்டத்தில், அரசு சார்பில் எந்த திட்டங்களை துவங்கினாலும், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தன்னோட கிழக்கு தொகுதியில் தான் நடத்தணும்னு, அதிகாரி களுக்கு அன்பு கட்டளை போட்டிருக்கார்...
''இப்ப, மேற்கு தொகுதிக்கும் அவரை பொறுப்பாளரா கட்சி தலைமை போட்டிருக்கறதால, அங்கயும் அரசு திட்ட விழாக்களை நடத்த சொல்றார் ஓய்...
''உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்னு எல்லா திட்டங்களும் இந்த ரெண்டு தொகுதியில் தான் நடந்துது...
''இதனால, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், மதுரை நகர தி.மு.க., செயலர் தளபதி, தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் எல்லாம், 'எங்க ஏரியாவிலும் இந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாதா'ன்னு அதிகாரிகளிடம் அலுத்துக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கனவு இல்லத்துல முறைகேடு நடக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழக அரசின் சார்பில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள்ல வசிக்கும் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர்றாங்கல்லா... நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே மேலுார், துாதுார் மட்டம் பகுதிகள்ல இந்த வீடுகளை ஏழைகளுக்கு வழங்காம, உள்ளாட்சி அமைப்புகள்ல பணிபுரியும், 'ஓவர்சீயர்' எனும் மேற்பார்வை அதிகாரிகளுக்கு முறைகேடா ஒதுக்கியிருக்காவ வே...
''அதுவும் இல்லாம, இந்த திட்டத்துல வீடுகள் கட்டி தர்ற ஒப்பந்ததாரர், வீட்டுக்கு விண்ணப்பிச்ச பொதுமக்கள் பெயர்ல வீடுகளை கட்டி, அவரே வச்சுக்கிடுதாரு...
''இது சம்பந்தமா, சமீபத்துல இந்த பகுதியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்ல பலரும் புகார் குடுத்திருக்காவ... இது சம்பந்தமா இப்ப விசாரணை நடக்கு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''பால்பாண்டி, இந்த பேப்பரை அங்க வைங்க...'' என, நண்பரிடம் கூறியபடியே அந் தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.