வெள்ளிக்கிழமை, 'டிரான்ஸ்பர்' போட்டு, 'அள்ளும்' மூவரணி!
வெள்ளிக்கிழமை, 'டிரான்ஸ்பர்' போட்டு, 'அள்ளும்' மூவரணி!
PUBLISHED ON : ஜூலை 29, 2026 12:00 AM

மெது வடையை கடித்தபடியே, “பண பலன்கள் கிடைக்காம தவிக்கறா ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“யாரை சொல்றீங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“தமிழக அரசு போக்குவரத்து கழகத்துல, 13 மேலாண் இயக்குநர்கள் பதவிகள் இருக்கு... இன்னைய தேதிக்கு, டி.என்.எஸ்.டி.சி., தலைவர், சேலம், கோவை, திருநெல்வேலி கோட்டங்கள் உட்பட, எட்டு எம்.டி., பணியிடங்கள் காலியா இருக்கு ஓய்...
“கும்பகோணம் கோட்ட எம்.டி., அடுத்த மாசம், 'ரிட்டயர்' ஆகப் போறார்... இப்ப, பொது மேலாளர்களா இருக்கற, 'சீனியர்'களுக்கு எம்.டி., பதவி உயர்வு வழங்க, தி.மு.க., ஆட்சியில் பட்டியல் தயார் செய்தும், இதுவரை அதை வெளியிடலை ஓய்...
“இதனால, ஓய்வு பெற்றவங்களுக்கு ஓய்வூதியம், பண பலன்கள் வழங்கற பணிகள் எல்லாம், 'பெண்டிங்'குல கிடக்கறது... 'சீக்கிரமே காலியிடங்களை நிரப்பணும்'னு, தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்திண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“கூட்டணிக் கட்சிகளை உடைக்க தயாராகிட்டாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“த.வெ.க., அரசுக்கு அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், சில கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி தருது... இதனால, குடைச்சல் தரும் கூட்டணிக் கட்சிகளை உடைக்க, ஆளும் தரப்பு திட்டமிட்டிருக்குது பா...
“இதுக்காக, அமைச்சரவையில் இருக்கும் ரெண்டு கட்சிகளின் முக்கிய புள்ளிகளிடம் பேச்சு நடத்தியிருக்காங்க... அப்ப, 'கூட்டணியில இருந்து உங்க கட்சி வெளியில போனாலும், நீங்க எங்க கட்சியில சேர்ந்து அமைச்சரவையில் நீடிக்கலாம்'னு, துாண்டிலை வீச, அவங்களும் சம்மதம் தெரிவிச்சிட்டாங்க பா...
“ஏன்னா, அந்த கட்சிகளின் சார்பில், தலா ரெண்டு எம்.எல்.ஏ.,க்கள் தான் இருக்காங்க... அதுல, ஒருத்தர் கட்சி மாறினாலும், கட்சி தாவல் சட்டப்படி, அவங்க பதவி பறிபோகாதுங்கிறதால, ஆளும் தரப்பு இந்த அதிரடி முடிவை எடுத்திருக்குது பா...” என்றார் அன்வர்பாய்.
“வாங்க, ஷாஜகான்... வன்னி அரசு இப்பதான் கிளம்பினாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “வெள்ளிக்கிழமை விசேஷமா போயிட்டு வே...” என்றார்.
“இப்ப, ஆடி மாசம் வெள்ளிக்கிழமை விசேஷம் தான ஓய்...” என்றார் குப்பண்ணா.
“இது வேற மேட்டர்... தமிழக நீர்வளத் துறையில், வாரந் தோறும் வெள்ளிக்கிழமை இடமாறுதல் போடுதாவ... துறை அலுவலகம் இருக்கும் சேப்பாக்கத்தில், ரெண்டு அதிகாரிகள் மற்றும் தலைமை செயலகத்தில் இருக்கும் ஒரு தலைமை அதிகாரின்னு, மூணு பேர் இதன் பின்னணியில இருக்காவ வே...
“வெள்ளிக்கிழமை, 'டிரான்ஸ்பர்' போட்டதும், சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்கள்ல இருக்கிற அரசு விருந்தினர் மாளிகையில, 'செட்டில்மென்ட்' நடக்கு... ஒரு இடமாறுதலுக்கு குறைந்தபட்சம், 10 லட்சம் துவங்கி, அதிகபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை வாங்கிடுதாவ வே...
“பணம் குடுத்தவங்களுக்கு பணியிடம் ஒதுக்குறதுக்காக, நேர்மையான அதிகாரிகள் பலரை, மாவட்டம் விட்டு மாவட்டம்னு துாக்கி அடிச்சிடுதாவ... 'இதுக்கு முதல்வர் முடிவு கட்டணும்'னு, அவங்க எல்லாம் புலம்புதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“சத்யபிரதா சாஹு, கோபாலகிருஷ்ணன், மகேஷ் நாகராஜன் எல்லாம் வரா... பில்டர் காபி குடும் நாயரே...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
