/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோவில் நில குத்தகையில் நடந்த ' கோல்மால்! '
/
கோவில் நில குத்தகையில் நடந்த ' கோல்மால்! '
PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM

“வேலையை வாடகைக்கு விடறா ஓய்...” என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.
“புதுசா இருக்கே... யாருங்க அது...” என, வியப்பாக கேட்டார் அந்தோணிசாமி.
“தமிழகத்துல இருக்கற,'டாஸ்மாக்' கடைகள்ல, விற்பனையாளர், உதவியாளர், மேற்பார்வையாளர்னு பலர் வேலை பார்க்கறா... இதுல சிலர் வேலைக்கே வராம, தங்களுக்கு பதிலா உறவினர், நண்பர்களைகடையில வேலைக்கு அமர்த்தியிருக்கா ஓய்...
“இவாளுக்கு தினமும்,சராசரியா 500 ரூபாய் சம்பளமும் தரா... இந்தசம்பளத்தை, பாட்டிலுக்கு கூடுதலா வசூலிக்கற பணத்துல இருந்து குடுத்துடறா...
''அதேநேரம், டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது சொந்த வேலை அல்லது பிசினஸ்னு எதையாவது பண்ணி, தனியா ஒரு பக்கம் சம்பாதிக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“கான்ட்ராக்டர்கள் குறித்து கணக்கெடுக்கிறாங்க பா...” என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
“எந்த துறையில வே...”என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழகத்துல, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகள், ஒன்றியங்கள்ல ஏராளமானவளர்ச்சி பணிகள் நடக்குது... இதை எல்லாம், 'டெண்டர்' விட்டு, கான்ட்ராக்டர்கள் வாயிலாதான் செய்றாங்க பா...
“இதுல பல மாவட்டங்கள்ல, அ.தி.மு.க.,வினர்நிறைய பேர் கான்ட்ராக்டர்களா இருக்கிறதாகவும், அவங்களுக்கே நிறைய டெண்டர்கள் வழங்கப்படுதுன்னும் சொல்றாங்க... இதனால, தி.மு.க.,வினருக்கு சரியா டெண்டர்கள் கிடைக்கிறதில்லன்னும், ஆளுங்கட்சி மேலிடத்துக்கு புகார்கள் போயிருக்குது பா...
“இதுபத்தி, சேலம் மாவட்டத்துல இருக்கிற,11 சட்டசபை தொகுதிகள்லயும் உளவுத்துறை போலீசார் தீவிரமா விசாரணை நடத்தியிருக்காங்க...
''அ.தி.மு.க., மற்றும்தி.மு.க., கான்ட்ராக்டர்கள்செய்ற பணிகள் பத்தி, டீடெய்லா அறிக்கை ரெடி பண்ணி, அரசுக்கு அனுப்பியிருக்காங்க... இந்த மாதிரி, தமிழகம் முழுக்க விசாரணை நடக்குது பா...'' என்றார்,அன்வர்பாய்.
''கோவில் நில குத்தகையில முறைகேடு நடந்திருக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான, 6.51 ஏக்கர் புஞ்சை நிலம்,மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து, கோமஸ்புரம் பகுதியில் இருக்கு... ஆளுங்கட்சி முக்கிய புள்ளியின் ஆசியோட, அந்த இடத்தை குறைஞ்ச விலைக்கு குத்தகைக்கு எடுத்த தி.மு.க., பிரமுகர், மாட்டு தீவனம் பயிரிட போறதா சொன்னாரு வே...
''ஆனா, எந்த அனுமதியும் பெறாம திடீர்னு 21 கடைகளை கட்டி, 'இ.சி.ஆர்., மார்க்கெட்- சூர்யா அங்காடி'ன்னு பெயரும்வச்சுட்டாரு... இது சம்பந்தமா, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் போகவே, ராவோட ராவா கடைகளை காலி பண்ணிட்டாவ வே...
“புஞ்சை நிலத்தில் வணிக நோக்கத்தில் கடைகள் கட்டியதும், அதுக்கு விதிகளை மீறிமின் இணைப்பு வழங்கியதும் இல்லாம, பஞ்சாயத்து சார்புல தெரு விளக்குகளும் போட்டு குடுத்திருக்காவ...
''இப்படி, ஏகப்பட்ட விதிமீறல்கள் நடந்திருக்கிறதால, குத்தகையை ரத்து பண்ணி, நிலத்தைஅறநிலையத் துறையே எடுத்துக்கும்னு சொல்லுதாவ...
''இதனால, 'பல கோடி ரூபாய் செலவழிச்சும் பயன் இல்லாமபோயிடுமோ'ன்னுஆளுங்கட்சி புள்ளிகள் அரண்டு போயிருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.