/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரிகளை மறைமுகமாக மிரட்டும் அரசு ஊழியர்கள்!
/
அதிகாரிகளை மறைமுகமாக மிரட்டும் அரசு ஊழியர்கள்!
PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

ஏலக்காய் டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''உணவு பாதுகாப்புல கோட்டை விடுறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''காஞ்சிபுரத்துல இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிஞ்சு, அஞ்சு வருஷம் ஆகிடுச்சு... ஆனா, இன்னும் உணவு பாதுகாப்பு துறையை பிரிக்காம இருக்காங்க பா...
''எல்லா அதிகாரிகளும், ஊழியர்களும் காஞ்சிபுரத்துல இருந்து தான் வேலை செய்றாங்க... இதனால, செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு விஷயத்துல கோட்டை விடுறாங்க பா...
''சமீபத்துல, 'செங்கல்பட்டு தசரா விழாவுல விற்பனை செய்த உணவுகள் சரியில்ல'ன்னு, உணவு பாதுகாப்பு துறைக்கு, 'வாட்ஸாப்'ல சிலர் புகார் அனுப்பியிருக்காங்க... ஆனா, தசரா விழாவே முடிஞ்ச பிறகு தான், நடவடிக்கை எடுக்கப் போறதா சாவகாசமா பதில் வந்திருக்கு பா...
''சொல்லப் போனா, காஞ்சிபுரத்தை விட, செங்கல்பட்டு பெரிய மாவட்டம்... ஆனா, இந்த மாவட்டத்துக்கு தனியா உணவு பாதுகாப்பு அதிகாரியே இல்ல... 'இந்த மாவட்டத்துக்குன்னு தனியா அதிகாரியை நியமிக்கணும்'னு பொதுமக்கள் கேட்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கரடி தொல்லை தாங்க முடியல வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்துல நிறைய கிராமங்கள் இருக்கு... வயல் வேலைக்கு போற விவசாயிகளை, காட்டுல இருந்து வர்ற கரடிகள் கடிச்சு குதறிடுது வே...
''அடிக்கடி கரடியிடம் கடி வாங்குற மக்கள் வெறுத்து போயிருக்காவ... இதனால, 'கரடிகிட்ட இருந்து எங்களை காப்பாத்துங்க'ன்னு தென்காசி மாவட்ட தி.மு.க., 'மாஜி' செயலர் சிவபத்மநாபனிடம் போய் புலம்பியிருக்காவ வே...
''அவரும், கரடிகிட்ட கடி வாங்கி மருத்துவமனையில சேர்றவங்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும், காயம் பட்டவங்களுக்கு வனத்துறை சார்புல, 50,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கவும், அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆளாளுக்கு, 'டிபி' வச்சு அலப்பறை பண்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வாட்ஸாப் டிபியை தானே சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஆமா... தலைமை செயலகத்துல, அமைச்சர்கள் பலரையும் அரசு ஊழியர்கள் சந்திக்கறா... அப்ப, அமைச்சர்களுக்கு சால்வை, பூங்கொத்து குடுத்து, அவாளோட நின்னு போட்டோ எடுத்துக்கறா ஓய்...
''இதை, தங்களது, 'வாட்ஸாப் டிபி'யா வச்சுக்கறா... இதன் வாயிலா, பணியில அவா ஏதாவது தப்பு செய்தா, உயர் அதிகாரிகள் தங்களை தட்டி கேட்கப்படாதுன்னு மறைமுகமா மிரட்டறாளாம் ஓய்...
''அதுக்கு ஏற்ற மாதிரி, கோட்டையில நிறைய அதிகாரிகள் ஓய்வு பெறும் வயசுல இருக்கா... வீட்டுக்கு போற நேரத்துல, ஊழியர்கள் மேல நடவடிக்கை எடுத்து, பகைச்சுக்கவும் விரும்பல ஓய்...
''இதனால, 'அமைச்சர் களுக்கு நெருக்கம் போல காட்டிண்டு, வேலையில பலரும் அசால்டா செயல்படறா... இவாளுக்கு கடிவாளம் போட்டா நன்னாயிருக்கும்'னு, கோட்டை வட்டாரத்துல பலரும் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.