/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்த கிருஷ்ண சாய், முகுந்த் சாய்
/
ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்த கிருஷ்ண சாய், முகுந்த் சாய்
ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்த கிருஷ்ண சாய், முகுந்த் சாய்
ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்த கிருஷ்ண சாய், முகுந்த் சாய்
PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

மைசூரு வாசுதேவாச்சாரியார் இயற்றிய கவுளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ப்ரண மாம்யகம்' எனும் கீர்த்தனையை பாடி, நிகழ்ச்சியை அசத்தலாக துவக்கினர், வளரும் கலைஞர்களான கண்டதேவி சகோதரர்கள் எனும் கிருஷ்ண சாய், முகுந்த் சாய். துவக்கமே மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது.
பின், மோகன கல்யாணி ராகத்தில் மனம் கவரும் ஆலாபனையை வழங்கினர். இந்த ராகத்தில் 'சேவ்ய ஸ்ரீகாந்தம்' எனும் சுவாதி திருநாள் மகாராஜா இயற்றிய ஆதி தாளத்தில் அமைந்த கீர்த்தனையை பாடினர். கீர்த்தனையின் முதல் வரிகளுக்கே, ரசிக்கும்படியான கற்பனை ஸ்வரம் பாடினர்.
அடுத்தபடியாக, அடாணா ராகம், கண்டசாபு தாளத்தில் அமைந்த தியாகராஜர் இயற்றிய 'அநுபம குலாம்புரி' கீர்த்தனையை பாடினர்; கீரவாணி ராகத்தை, ஆலாபனை செய்யத் துவங்கினர். ஆலாபனையின் ஒவ்வொரு பிடிகளும் விசேஷமாக அமைந்தது. ராகத்தின் ஸ்வரங்களை, வயலினில் மீட்டி அகிலேஷ் அசத்தினார்.
இந்த ராகத்தில், 'சாமகான ப்ரியகரம்' எனும் குரு சுரஜானந்தா இயற்றிய மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த கீர்த்தனையை பாடினர். இதில் வரும் சிட்டை ஸ்வரங்களை பாடிய விதம் கவர்ந்தது.
இதே வரிகளுக்கு, கீழ்காலம் மற்றும்மேல்காலத்தில் கற்பனை ஸ்வரம் பாடி மகிழ்வித்தனர். குறிப்பாக, திஸ்ர நடையில் பாடிய இடங்கள் அருமை. பாடலுக்கு பொருத்தமான ஒரு கோர்வையோடு நிறைவு செய்தனர்.
மிருதங்கத்தில் சுநாதா கிருஷ்ண அமை, தனி ஆவர்த்தனம் செய்தார். குறைந்த நேரத்தில் நிறைந்த ஒரு வாசிப்பை வழங்கி ரசிக்க வைத்தார்; இசைத்த அபிப்ராயங்கள் அவ்வளவு அழகு.
பின், மனதை மயக்கும் மதுவந்தி ராகத்தில், சதாசிவ பிரம்மேந்தர் இயற்றிய ஆதி தாளத்தில் அமைந்த 'சர்வம் பிரம்ம மயம்' பாடலை பாடினர். புதுமையான இந்த பாடல், புத்துணர்ச்சி அளித்தது.
மயிலாப்பூர் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் நடந்த இந்த கச்சேரியில், கீர்த்தனைகளை இவர்கள் தேர்ந்தெடுத்த விதமும், பாடிய விதமும் ரசிக்கும்படி இருந்தது.
-- சத்திரமனை ந.சரண்குமார்

