PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:19 AM

“கிடக்கற வேலை கிடக்கட்டும்; கிழவியை துாக்கி மனையில் வைன்னு இதைத்தான் சொல்லுவா போலிருக்கு ஓய்...” என, புதிர் போட்டபடியே பெஞ்சில் அமர்ந்தார்குப்பண்ணா.
“என்ன விஷயம் பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“சென்னை புழல் மற்றும் நாகர்கோவில் சிறைகள்ல, அடுத்தடுத்து கைதிகள் இறந்தது, பெரிய சர்ச்சையா வெடிச்சிருக்கோல்லியோ... இதுக்கு, இத்துறையின் அமைச்சர் நிர்மல்குமார் தான் விளக்கம் தந்துண்டு இருக்கார் ஓய்...
“ஆனா, சிறைத்துறை டி.ஜி.பி.,யான சந்தீப் ராய் ரத்தோர், இந்த விவகாரங்கள் எல்லாம் நடக்கறதுக்கு முன்னாடியே, ஒரு மாசம், 'லீவ்' எடுத்துண்டு, குடும்பத்துடன் லண்டன் பறந்துட்டார்... வழக்கமா, இந்த மாதிரி அதிகாரிகள் லீவ்ல போனா, அதே அந்தஸ்திலான அதிகாரியை தான் பொறுப்பா நியமிப்பா ஓய்...
“ஆனா, இப்ப சிறைத்துறை ஐ.ஜி., கனகராஜ் தான் பொறுப்பு அதிகாரியா இருக்கார்... 'இவர் மேல ஏற்கனவே சில குற்றச்சாட்டுகள் இருக்கற சூழல்ல, இந்த சர்ச்சைகளை எப்படி சமாளிப்பார்'னு, சிறைத்துறை போலீசார் புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“ஏதோ மர்மம் ஒளிஞ்சிருக்குதுங்க...” என்றார் அந்தோணிசாமி.
“என்னத்துல வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தென்காசி மாவட்டம், ஐந்தாங்கட்டளை கிராமத்தில் இருந்த நெல் சேமிப்பு கிடங்குல சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டு, நெல் மூட்டைகள் எரிஞ்சு போச்சே... ஆரம்பத்துல, தமிழ்நாடு வாணிப கழகம் இதை கண்டுக்கவே இல்லைங்க...
“ஆனா, 'தினமலர்'ல செய்தி வெளியானதும், உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் நேர்ல போய் பார்வையிட்டாரு... அப்பவே அவருக்கு, இது இயற்கையா நடந்த விபத்து இல்லைன்னு தெரிஞ்சிடுச்சுங்க...
“இதனால, வழக்கு பதிவு பண்ணி விசாரிக்கும்படி உத்தரவு போட்டாரு... இதுக்காக, துறை சார்பில் சிறப்பு குழுவையும் அமைச்சாங்க... இந்த விபத்துல, 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் எரிஞ்சு போயிட்டதா கணக்கு எடுத்திருக்காங்க... ஆனா, அதுக்கப்புறம் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை... 'இதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருக்கு'ன்னு விவசாயிகள் சந்தேகப்படுறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“மக்கள் வரிப்பணத்தை எப்படி எல்லாம் வீணடிக்கிறாங்க பாருங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“ராமநாதபுரம் மாவட்டத்துல, 429 ஊராட்சிகள் இருக்கு... இந்த ஊராட்சிகளுக்கு, தேவையை விட அதிகமான, 'பிளீச்சிங் பவுடரை' புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் டன் கணக்கில் கொள்முதல் செய்து அனுப்பியிருக்காங்க பா...
“அதாவது, ஒவ்வொரு ஊராட்சிக்கும் வருஷம் முழுக்கவே, 30 கிலோ பிளீச்சிங் பவுடர் தான் தேவைப்படும்... ஆனா, இப்ப 25 கிலோ பவுடர் அடங்கிய 30 மூட்டைகள் வீதம் அனுப்பியிருக்காங்க பா...
“இதுக்கான தொகையும் மார்க்கெட் விலையை விட அதிகம்... 'ஊராட்சியில் நடக்கிற வரி வசூலை விட, பிளீச்சிங் பவுடருக்கு அதிகமா செலவு செய்யணுமா'ன்னு ஊராட்சி செயலர்கள் புலம்புறாங்க பா...
“ஊரக வளர்ச்சித் துறை உயர் அதிகாரிகள், 'பிளீச்சிங் பவுடர் கம்பெனிக்கு ஏன் இன்னும் பணம் அனுப்பல'ன்னு ஊராட்சி செயலர்களை திட்டுறாங்க... மக்கள் வரிப்பணத்தை வீணடிச்சு, அதிகாரிகள் சம்பாதிக்கிறதா ஊராட்சி செயலர்கள் புலம்புறாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
“பத்மநாபன், இளங்கோ கிளம்பறோம் ஓய்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் எழுந்தனர்.
