/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அலுவலகம் திறப்பதை மறந்துபோன எம்.பி.,
/
அலுவலகம் திறப்பதை மறந்துபோன எம்.பி.,
PUBLISHED ON : செப் 22, 2024 12:00 AM

பில்டர் காபியை பருகியபடியே, ''செஞ்ச தப்பை மூடி மறைக்கப் பாக்கறா ஓய்...'' என, மேட்டரை
ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருப்பூர் மாவட்டம்,அவிநாசியில் ஆளுங்கட்சி ஒன்றிய புள்ளி ஒருத்தர், போலீஸ் அதிகாரிகள் பெயரை சொல்லி, 'டாஸ்மாக்' கடைகள், பார்கள்ல, 'கட்டிங்' வசூல் பண்ணதா நாலு நாளைக்கு முன்னாடி பேசினோமோல்லியோ...இது சம்பந்தமா, உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்திஇருக்கா ஓய்...
''அதுல, சம்பவம் உண்மைதான்னு தெரிஞ்சிடுத்து... இந்த கட்டிங் விவகாரத்துல,
ஆளுங்கட்சியின் மாவட்ட நிர்வாகிக்கும் தொடர்பு இருக்கறதால, அவரது உத்தரவுப்படி பிரச்னையை மூடி மறைக்க முயற்சி எடுத்தா ஓய்...
''இதன்படி, டாஸ்மாக் மாவட்ட உயர் அதிகாரி, அவிநாசி பகுதியில இருக்கற மதுபானக் கடைகளின் சூப்பர்வைசர்கள், பார் உரிமையாளர்களை கூப்பிட்டு, 'யாரும்
எங்களிடம் வந்து பணம் வசூல் பண்ணல'ன்னு கைப்பட எழுதி வாங்கிண்டார்... அதிகாரி கேக்கறச்சே, அவாளால மறுக்க முடியுமோ... எழுதிக் குடுத்துட்டு
வந்துட்டா ஓய்...''என்றார், குப்பண்ணா.
''கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தணும் பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கோவை மாவட்டம்,பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் நிறைய கல்குவாரிகள் இருக்கு... ஒரு டிப்பர் லாரி, குவாரியில் இருந்து வெளியே வரணும்னா, 400 ரூபாய் கப்பம் வசூலிக்கிறாங்க பா...''இந்த வசூல் பணியில,துறையின் முக்கியப் புள்ளி பெயர்லஇயங்கும் புதுக்கோட்டை குழுவுக்கும், கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு குழுவுக்கும்இடையே கடும் போட்டி நிலவுது...
''சமீபத்துல, புதுக்கோட்டை குழுவை விமர்சித்து, மற்றொரு குழு பொள்ளாச்சி நகரம் முழுக்க போஸ்டர்ஒட்டுச்சு... அந்த போஸ்டர்ல,அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., கட்சியினர் மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான சிலரது படங்களையும் ஒட்டி, 'கனிமவளக் கொள்ளைக்கு துணை போறதா குறிப்பிட்டிருந்தாங்க பா...
''இதை பார்த்து அதிர்ச்சியான போலீசார், போஸ்டர்களை கிழிச்சு எறிஞ்சாங்க... 'இவங்க மோதலை கட்டுப்படுத்தி, கனிமவளக் கொள்ளையை தடுக்கணும்'னு இந்த பகுதி மக்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அலுவலகம் திறக்கிறதை மறந்துட்டாருங்க...''என்றார், அந்தோணிசாமி.
''யாரை சொல்லுதீரு...'' என கேட்டார், அண்ணாச்சி.
''தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில்,தி.மு.க., - எம்.பி.,யாஜெயிச்சவர் முரசொலி...'இதுக்கு முன்னாடி, தஞ்சை எம்.பி.,யா இருந்தவங்க தனி அலுவலகம் திறக்காமலே இருந்தாங்க... நான் எம்.பி.,யாகிட்டா, அடுத்த, 40 நாள்ல தொகுதியில, அலுவலகம் திறந்துடுவேன்'னு வாக்குறுதி தந்திருந்தாருங்க...
''ஆனா, இன்னிக்கு வரைக்கும் அதுக்கான அறிகுறியே தெரியலைங்க... இதனால, எம்.பி.,யிடம் மனுக்கள் வழங்க முடியாமலும், தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமலும், தஞ்சை மக்கள் தவியா தவிச்சிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
நாயர், கல்லாவை நோக்கி நகர, பெரியவர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர்.