/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தி.மு.க., மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
/
தி.மு.க., மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
தி.மு.க., மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
தி.மு.க., மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM

பி ல்டர் காபியை பருகியபடியே, ''எம்.எல்.ஏ.,வை ஓரங்கட்டிட்டா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த விழாவுல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடியில், விரிவாக்கம் செய்யப்பட்ட ஏர்போர்ட்டை, பிரதமர் மோடி சமீபத்துல திறந்து வச்சாரோல்லியோ... இந்த விழா மேடையில், தமிழக அமைச்சர்கள், தி.மு.க., - எம்.பி., கனிமொழிக்கு இருக்கை ஒதுக்கியிருந்தா ஓய்...
''ஏர்போர்ட், ஓட்டப் பிடாரம் சட்டசபை தொகுதியில வரது... இந்த தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சண்முகையா பெயரை, அழைப்பிதழ்ல போட்டிருந்தா ஓய்...
''ஆனா, மேடையில அவருக்கு சீட் ஒதுக்கல.. . இது பத்தி, ஏர்போர்ட் அதிகாரிகளிடம் அவர் கேட்டதுக்கு, 'நாங்க கொடுத்த பட்டியல்ல உங்க பெயரும் இருந்துது... இடையில யார் எடுத்தான்னு தெரியாது'ன்னு கையை விரிச்சிட்டா... 'நம்ம கட்சியினர் தான், என்னை புறக்கணிச்சுட்டா'ன்னு, எம்.எல்.ஏ., புலம்பிண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மறைந்த பிரபல நடிகையின் கணவர் மீது புகார் குடுத்திருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை, புழுதிவாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்த இளம்பெண் சிவகாமி... இவங்க தாத்தா, சோழிங்கநல்லுார் கிராமத்துல வாங்கிய சொத்துக்களை, 1960லயே தன் வாரிசுகளுக்கு பிரிச்சு குடுத்துட்டாருங்க...
''தாத்தா இறந்ததும், அவருடைய பெண் வாரிசுக்கு சொந்தமான நிலத்தை, தமிழகத்துல இருந்து பாலிவுட் போய் கலக்கிய, 'மயிலு' நடிகையின் கணவருக்கு சிலர் முறைகேடா வித்துட்டாங்க... அந்த நிலத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாம, நில உரிமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அவர் பட்டாவும் வாங்கிட்டாருங்க...
''இப்ப, அந்த நிலத்தை விற்க நடிகையின் கணவர் முயற்சி பண்றாரு... 'நிலத்துக் கான ஒரிஜினல் ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறதால, இதுல நடவடிக்கை எடுக்கணும்'னு முதல்வர் அலுவலகத்துக்கு சிவகாமி புகார் அனுப்பியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மேயர் பதவி தப்புமான்னு தெரியல பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தஞ்சாவூர் மாநகராட்சி மேயரா, தி.மு.க.,வைச் சேர்ந்த ராமநாதன் இருக்காரு... இவர், சொந்த கட்சி கவுன்சிலர்களுக்கே மரியாதை தர்றது இல்லையாம் பா...
''இதனால, இவர் மேல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர்றது சம்பந்தமா, அதிருப்தி கவுன்சிலர்கள், 30 பேர் சமீபத்துல ரகசிய கூட்டம் நடத்தியிருக்காங்க... தகவல் கிடைச்சு, தி.மு.க., மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.,வுமான சந்திரசேகரன், ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு, கட்சி ஆபீஸ்ல பஞ்சாயத்து பேசினாரு பா...
''அப்ப, மேயர் மீது கவுன்சிலர்கள் புகார்களை அடுக்கியிருக்காங்க... மேயரோ, 'என்னை வரவழைச்சு அசிங்கப்படுத்துறீங்களா... நான் தலைமைகிட்ட பேசிக்கிறேன்'னு சொல்லியிருக்காரு பா...
''கடுப்பான சந்திர சேகரன், 'உங்க மேல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர்றேன்னு சொல்றாங்க... தேர்தல் நேரத்துல கட்சிக்கு கெட்ட பெயர் வரும்னு பார்த்தா, ரொம்ப பேசுறீங்களே...
''உங்களால முடிஞ்சதை பாருங்க... என்னால முடிஞ்சதை நானும் பார்க்கிறேன்'னு கிளம்பிட்டாரு... 'மேயர் பதவிக்கு சீக்கிரமே ஆப்பு வரும்'னு கவுன்சிலர்கள் சொல்றாங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.