/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சனி, ஞாயிறில் கிராமப்புற பஸ்களை நிறுத்தும் அதிகாரி!
/
சனி, ஞாயிறில் கிராமப்புற பஸ்களை நிறுத்தும் அதிகாரி!
சனி, ஞாயிறில் கிராமப்புற பஸ்களை நிறுத்தும் அதிகாரி!
சனி, ஞாயிறில் கிராமப்புற பஸ்களை நிறுத்தும் அதிகாரி!
PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

இ ஞ்சி டீயை உறிஞ் சிய படியே, ''விருதுநகர் மாவட்டத்துல, மூணு தொகுதிகளுக்கு குறி வச்சிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த கட்சியை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சாத்துார்ல சமீபத்தில், பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்துச்சு... இதுல பேசிய, கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'இந்த மாவட்டத்தில் ராஜபாளை யம், சாத்துார், விருதுநகர் ஆகிய மூன்று சட்டசபை தொகுதியிலும், நமக்கு வெற்றி வாய்ப்பு நல்லா இருக்கு... இந்த மூணு தொகுதிகளும் நமக்கு தேவை... ஆனா, இப்பவே அது பத்தி பேசினா, கூட்டணிக்குள்ள குழப்பம் வந்துடும்... ஆனாலும், இந்த மூணு தொகுதியிலும் இப்பவே களப்பணிகளை துவங்குங்க'ன்னு சொல்லிட்டு போயிருக்காருங்க...
''இதை கேள்விப்பட்டு, இந்த மூணு தொகுதியிலும் போட்டி யிடும் திட்டத்துல இருந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''டாக்டர், அரசியல்வாதி வரிசையில், நடிகர் அவதாரம் எடுத்திருக்காரு வே...'' என்ற பெரிய சாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரான டாக்டர் சரவணன், நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க., பொறுப்பாளராகவும் இருக்காரு... சமீபத்தில், அந்த பகுதியில் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி சுற்றுப்பயணம் போனப்ப, 200 ட்ரோன்களை, 400 அடி உயரத்தில் பறக்க விட்டு, வித்தியாசமா வரவேற்பு குடுத்திருக்காரு வே...
''இதுல, பழனிசாமி ரொம்பவே உற்சாகமாகி, சரவணனை பாராட்டியிருக்காரு... இப்ப, சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு படத்துலயும் நடிக்காரு வே...
''அந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கல... சமீபத்துல, இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தென் மாவட்டங்கள்ல நடந்து முடிஞ்சிருக்கு வே... படத்துல, பழனிசாமி புகழ் பாடும் அளவுக்கு, 'பஞ்ச் டயலாக்' பேசி நடிச்சிருக்காராம்... படத்தை சட்டசபை தேர்தல் நேரத்துல வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ரஜினிக்கு போட்டியா களமிறங்கிட்டார்னு சொல்லும்...'' என சிரித்த குப்பண்ணா, ''பஸ்களை ரத்து பண்ணிடறார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் மாவட்டம், இடைப்பாடி அரசு போக்குவரத்து கழக அதிகாரியா இருக்கறவர், இஷ்டத்துக்கு அதிரடி முடிவுகளை எடுக்கறார்... புறநகர் பஸ்களை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள்ல, சிறப்பு பேருந்து என்ற பெயரில், வெளி மாவட்டங்களுக்கு அனுப்பிடறார் ஓய்...
''புறநகர் பஸ்களுக்கான வழித்தடங்கள்ல, கிராமப்புறங்களுக்கு போகும் டவுன் பஸ்களை திருப்பி விட்டுடறார்... இதனால, இடைப்பாடி தாலுகாவில் இருக்கற கிராமப்புற மக்கள் ரொம்பவே பாதிக்கப்படறா ஓய்...
''இது சம்பந்தமா, சேலம் கோட்ட உயரதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் புகார் அனுப்பியிருக்கா... ஆனா, 'மகளிர் இலவச பஸ்களை தான் பெரும்பாலும் இடைப்பாடி அதிகாரி நிறுத்தியிருக்கார்... அதனால, வருமான இழப்பு எதுவும் இல்ல'ன்னு அதிகாரிகள், அந்த புகார்களை கண்டுக்காம இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''தமிழரசன் வர்றாரு... வடை குடுங்க நாயரே...'' என்றபடியே அந்தோணி சாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

