தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மாநகராட்சி பணிகளுக்கு போலீஸ் அதிகாரி இடையூறு!

 மாநகராட்சி பணிகளுக்கு போலீஸ் அதிகாரி இடையூறு!

 மாநகராட்சி பணிகளுக்கு போலீஸ் அதிகாரி இடையூறு!

2


PUBLISHED ON : அக் 01, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பில்டர் காபியை டபராவில் ஆற்றிய படியே, “உணவு வழங்கும் திட்டமே வேண்டாம்கறா ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.

“எந்த துறையிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.

“சென்னை மாநகராட்சியில், துாய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை, தி.மு.க., ஆட்சியில ஆரம்பிச்சால்லியோ... இதுல நிறைய குளறுபடிகள் நடந்ததால, சமீபத்துல இந்த திட்டத்தை ரத்து பண்ணிட்டு, 'தினசரி 50 ரூபாய் உணவுப்படியா வழங்கப்படும்'னு அறிவிச்சிட்டா ஓய்...

“இதேபோல, தமிழகம் முழுக்க நகராட்சி, பேரூராட்சிகளின் துாய்மை பணியாளர்கள், தங்களுக்கும் உணவுப் படி தரும்படி கேக்கறா... ஏன்னா நகராட்சி, பேரூ ராட்சி அதிகாரிகள் பலரும், உணவு வாங்கற ஹோட்டல்கள்ல, 'கமிஷன்' வாங்கிடறா ஓய்...

“சில பணியாளர்கள், தங்களது வீட்டு சாப்பாட்டையே எடுத்துட்டு வந்துடறா... ஆனா, அவாளுக்கும் உணவு வாங்கி குடுத்ததா அதிகாரிகள் கணக்கு எழுதிடறா... இதனால, 'தமிழகம் முழுக்கவே உணவு வழங்கும் திட்டத்தை ரத்து பண்ணிட்டு, பணமா குடுத்துடுங்கோ'ன்னு, துாய்மை பணியாளர்கள் கேக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“மொபைல் போன் வழியா லஞ்சம் வாங்குறாங்க பா...” என்றார் அன்வர்பாய்.

“எந்த ஊர்ல ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“த.வெ.க., ஆட்சிக்கு வந்ததுல இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், அரசு அலுவலகங்கள்ல அடிக்கடி சோதனை நடத்தி, லஞ்ச பேர்வ ழிகளை பிடிக்கிறாங்கல்ல... இதனால, யாரும் கையில பணமா வாங்க பயப்படுறாங்க பா...

“அதுக்கு பதிலா, மொபைல் போன் பண பரிவர்த்தனை செயலிகளான, 'ஜி பே, போன் பே' மூலமா லஞ்சத்தை வாங்கிடுறாங்க... உஷாரான சில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அதையும் தங்களது மொபைல் போன்ல வாங்காம, தங்களுக்கு வேண்டிய தற்காலிக ஊழியர்கள் மொபைல் போன் எண்ணுக்கு பணத்தை அனுப்ப சொல்லி, அப்புறமா அவங்களிடம் இருந்து வாங்கிடுறாங்க பா...

“சில அரசு அலுவலகங்கள்ல, அதிகாரிகளை பார்க்க பொதுமக்கள், கான்ட்ராக்டர்கள்னு யார் வந்தாலும், பாதுகாவலர்கள் அவங்களை வாசல்லயே மடக்கி, மொபைல் போன்களை வாங்கிட்டு தான் உள்ளே அனுப்புறாங்க... ஏன்னா, அதிகாரிகள் தங்களை பார்க்க வர்றவங்ககிட்டே, 'டீலிங்' பேசுறப்ப, அதை அவங்க ரகசியமா பதிவு பண்ணிடக் கூடாதுன்னு உஷாரா இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.

“போ லீஸ் அதிகாரியின் அடாவடியை கேளுங்க வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“சென்னை கொரட்டூர் மற்றும் பாடி பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நடக்கு... கொரட்டூர் சந்திப்பு, சி.டி.எச்., சாலையில், போன வாரம் இந்த பணிகள் நடந்துச்சு வே...

“அப்ப, அங்க வந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருத்தர், 'இந்த பணிகளால போக்குவரத்து நெரிசல் ஏற்படுது'ன்னு சொல்லி, பணிகளை தடுத்து நிறுத்தியிருக்காரு... அங்கிருந்த மாநகராட்சியின் 87வது வார்டு உதவி பொறியாளர் ஜோஷ்வா என்பவரை, கொச்சையான வார்த்தைகள்ல திட்டியதும் இல்லாம, அவரது மொபைல் போனையும் பறிச்சு துாக்கி வீசிட்டாரு வே...

“இதனால மன உளைச்சலுக்கு ஆளான ஜோஷ்வா, வேலையை விட்டே போறதா அதிகாரிகளிடம் சொல்லியிருக்காரு... 'போலீஸ் அதிகாரி அடாவடியால எந்த வேலைகளையும் செய்ய முடியல'ன்னு, மாநகராட்சி அதிகாரிகள் புலம்புதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“வாரும் சங்கு... வீட்டுல எல்லாரும் சவுக்கியமா ஓய்...” என கேட்டபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us