PUBLISHED ON : அக் 02, 2026 03:24 AM

“நி ல வகைப்பாடு மாத்துறதுல வசூல் வேட்டை நடக்கு வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“சென்னையில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க, பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., இருக்குல்லா... இதுல, கட்டட அனுமதிக்கு இணையா, நில வகைப்பாடு மா ற்றத்துக்கான மனுக்கள் அதிகமா வருது வே...
“இதுக்கு கடந்த தி.மு.க., ஆட்சியில, ஏக்கருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வசூல் பண்ணியிருக்காவ... ஆட்சி மாறியதும், இந்த வசூலுக்கு தடை போட்டுட்டாவ வே...
“ஆனா, கீழ்மட்ட அளவில் கோப்புகளை, 'ஓகே' பண்ணி அடுத்த கட்டத்துக்கு அனுப்பினாலும், 'சீனியர் பிளானர்' நிலையில் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க, வசூல் வேட்டை நடக்கு வே...
“ஒரு பெண் அதிகாரி சார்பில் அவரது கணவரும், மகனும் களத்தில் இறங்கி வசூல் வேட்டையாடுதாவ... 'மழை விட்டாலும் துாறல் நிற்காத குறையா இருக்கே'ன்னு, 'பில்டர்'கள் எல்லாம் புலம்புதாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“ஷர்மிளா மேடம்... சாயந்தரமா பேசறேன்...” என, மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த குப்பண்ணா, “நடிகர் எஸ்.வி.சேகர் அதிருப்தியில இருக்கார் ஓய்...” என்றார்.
“அவருக்கு என்னங்க பிரச்னை...” என கேட்டார் அந்தோணிசாமி.
“நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் சமீபத்துல நடந்துது... இதை, மூத்த நடிகர் எஸ்.வி.சேகர் புறக்கணிச்சிட்டார்... ஏன்னா, இவர் 1973ல் துவங்கி, இன்னைக்கு வரை உலகம் முழுக்க 5,600 முறை மேடை நாடகங்கள் நடத்தியிருக்கார் ஓய்...
“தன் நாடகங்களின் கதை, வசனங்கள், நகைச்சுவைகள் மற்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கான பதில்களை தொகுத்து, 32 புத்தகங்களா வெளியிட்டு, 'லிம்கா' சாதனை புத்தகத்துலயும் இடம் பிடிச்சிருக்கார்... 'கலைமாமணி, கலைவாணர் விருது, அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்' எல்லாம் வாங்கியிருக்கார் ஓய்...
“ஆனா, நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு இன்னும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கல... இந்த விரக்தியில தான், பொதுக்குழுவை அவர் புறக்கணிச்சிட்டார் ஓய்...” என்றார் குப்பண்ணா.
“நங்கூரம் போட்ட மாதிரி இருக்காருங்க...” என, கடைசி தகவலுக்கு வந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“திருவள்ளூர் எஸ்.பி., ஆபீஸ்ல, சிறப்பு பிரிவு எஸ்.ஐ.,யா ஒருத்தர் இருக்காரு... மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள்ல பணிபுரியும் சிறப்பு பிரிவு போலீசார் எல்லாம், இவரிடம் தான் தகவல் தெரிவிப்பாங்க பா...
“இவர், 2021ல் இருந்து அஞ்சு வருஷமா இதே இடத்துல இருக்காரு... எஸ்.பி.,க்கள் கூட மூணு வருஷத்தில் இடம் மாறி போயிடுறாங்க... ஆனா, இவர் மட்டும் நங்கூரம் போட்ட மாதிரி ஒரே இடத்துல இருக்காருங்க...
“இதனால, தனக்கு பிடிக்காத போலீசார் பற்றி உயர் அதிகாரிகளிடம், 'போட்டு' குடுத்து பழிவாங்கிடுறாரு... வயசுல மூத்தவங்க, இன்ஸ்பெக்டர்களுக்கு கூட இவர் மரியாதை தர்றது இல்ல... உயர் அதிகாரிகள் தயவு இருக்கிறதால, இவரை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லைங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.
“செந்தில், இப்படி உட்காருங்க பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
