தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/பதவி உயர்வு, இடமாறுதல் தராமல் அடம் பிடிக்கும் அதிகாரி!

பதவி உயர்வு, இடமாறுதல் தராமல் அடம் பிடிக்கும் அதிகாரி!

பதவி உயர்வு, இடமாறுதல் தராமல் அடம் பிடிக்கும் அதிகாரி!


PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ ஞ்சில் அமர்ந்ததுமே, “வழக்கே பதிவு பண்ணாம, ‘கட்டிங்’ வாங்குறாங்க பா...” என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

“எந்த போலீஸ் ஸ்டேஷன்ல ஓய்...” என, பட்டென கேட்டார் குப்பண்ணா.

“திருவள்ளூர் மாவட்டத்துல ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கு... இங்க யார் புகார் குடுத்தாலும், வழக்கு பதிவு செய்றது இல்ல... புகார் குடுத்தவர், எதிர் தரப்புன்னு ரெண்டு பேரையும், ஸ்டேஷன் அதிகாரி ஒருத்தர் கூப்பிட்டு கட்டப்பஞ்சாயத்து பேசி, ‘கட்டிங்’ வாங்கிட்டு அனுப்பிடுறாரு பா...

“இந்த ஸ்டேஷன் எல்லையில நிறைய தொழிற்சாலைகள் இருக்கிறதால, மாமூல் மழை கொட்டும்... இதனாலயே, இந்த அதிகாரிக்கு ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி இடமாறுதல் போட்டும், அங்க போகாம இருக்காரு... இவரது வசூல் வேட்டைக்கு, தனிப்பிரிவு போலீஸ்காரரும் உடந்தையா இருக்காரு பா...” என்றார் அன்வர்பாய்.

“சுரேஷ்குமார், இப்படி உட்காரும்... இப்ப தான் ஆனந்த் கிளம்பினார்...” என்ற குப்பண்ணாவே, “ஜாதி பார்த்து பாரபட்சம் காட்டறாங்க ஓய்...” என்றார்.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“பெரம்பலுார் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரா இருக்கற பெண் அதிகாரியை தான் சொல்றேன்... கர்ப்பிணியர், குழந்தைகள், வளர் இளம்பெண்களுக்கு சத்துணவு, ஊட்டச்சத்து அளவை உறுதி செய்றது, அங்கன்வாடிகளை மேற்பார்வையிடறது உள்ளிட்ட பணிகளை இவங்க தான் செய்யணும் ஓய்...

“ஆனா இவங்களோ, இதுல எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும்னு தான் ஆர்வமா இருக்காங்க... தனக்கு கீழ் வேலை பார்க்கற அதிகாரிகள், ஊழியர்களை ஒருமையில தான் பேசறாங்க ஓய்...

“தன் சமுதாயத்தைச் சேர்ந்த ஊழியர்களுடன் கூட்டணி போட்டுண்டு, பட்டியல் சமூக ஊழியர்களை, ‘டார்ச்சர்’ பண்றாங்க... ‘இவங்க ஏற்கனவே வேலை பார்த்த இடத்திலும் இது போன்ற குற்றச்சாட்டில் சிக்கி தான் இங்க வந்தாங்க... இங்க வந்தும் திருந்தலையே’ன்னு, அவரால பாதிக்கப்பட்டவா எல்லாம் புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, “அனுராபூ மேடம் அப்புறமா பேசுதேன்...” என கூறி வைத்தபடியே, “தலைமை செயலக ஊழியர்கள் கடும் அதிருப்தியில இருக்காவ வே...” என்றபடியே தொடர்ந்தார்...

“சென்னை தலைமை செயலகத்தில், பல துறைகளின் தலைமை அலுவலகங்களும் இருக்குல்லா... இங்க, 6,000க்கும் மேற்பட்டவங்க வேலை பார்க்காவ வே...

“இவங்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல்களை எல்லாம் மனிதவள மேலாண்மை துறை தான் செய்யும்... த.வெ.க., ஆட்சிக்கு வந்த பிறகு பதவி உயர்வு, இடமாறுதல் பணிகளை எல்லாம் நிறுத்தி வச்சிருக்காவ வே...

“அவசரகால மருத்துவ காரணங்களுக்கான இடமாறுதல்களை கூட தர மாட்டேங்காவ... இது சம்பந்தமா, பல துறைகள்ல இருந்து வந்த மனுக்களும், துறை செயலர்களிடம் இருந்து வந்த பரிந்துரை கடிதங்களும் மலை போல குவிஞ்சு கிடக்கு வே...

“இந்த துறையின் உயர் அதிகாரியா இருக்கிறவர், வேளாண் துறைக்கு போக முயற்சி பண்ணியும் கிடைக்கல... ‘தனக்கு கிடைக்காத பதவி உயர்வும், பணியிட மாற்றமும் யாருக்கும் கிடைக்கக் கூடாதுன்னு, மனுக்களை கிடப்பில் போட்டு வச்சிருக்கார்’னு, ஊழியர்கள் புலம்புதாவ... இதை, முதல்வர் கவனத்துக்கு கொண்டு போகும் வகையில் போராட்டம் நடத்தவும் தயாராகிட்டு இருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“சமயமூர்த்தி, இப்படி உட்காருங்க...” என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us