மதுபான நிறுவனங்களிடம் ‘கட்டிங்’ கேட்கும் அதிகாரிகள்!
மதுபான நிறுவனங்களிடம் ‘கட்டிங்’ கேட்கும் அதிகாரிகள்!
PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM

பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், “பென்ஷன் கிடைக்காம தவிக்கறா ஓய்...” என, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், 32 வங்கிகள் இருக்கு... இவற்றில் வேலை பார்த்து, ‘ரிட்டயர்’ ஆன மேலாளர், உதவி மேலாளர்களுக்கு, ரெண்டு வருஷத்துக்கும் மேலா ஓய்வு கால பண பலன்கள், ஓய்வூதியம் வழங்கல ஓய்...
“இது சம்பந்தமா அவா, கடந்த தி.மு.க., ஆட்சியில் கூட்டுறவு துறை பதிவாளருக்கு புகார் மேல புகார் அனுப்பினா... இதனால, கூடுதல் பதிவாளர் ஒருத்தர் விசாரணை நடத்தி, பண பலன்கள் வழங்காம, மத்திய வங்கியின் பெண் அதிகாரி இழுத்தடிக்கறதா அறிக்கையே குடுத்தார் ஓய்...
“ஆனாலும், பெண் அதிகாரிக்கு அப்போதைய தி.மு.க., அமைச்சர் பெரியகருப்பன் ஆதரவு இருந்ததால, எந்த நடவடிக்கையும் எடுக்கல... ஆட்சி மாறி அஞ்சு மாசம் கடந்தும் இன்னும் பண பலன்கள், ஓய்வூதியம் கிடைக்கல... இதனால, ஓய்வு பெற்றவா எல்லாம், ‘பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பண பலன்கள் வழங்கணும்’னு, கேக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, “உமா மகேஷ்வரி மேடம்... 10 நிமிஷம் கழிச்சு கூப்பிடுறேன்...” என கூறி வைத்தபடியே, “திராவிட கட்சிகள் பாணியில வசூலை வாரி குவிக்கிறாருங்க...” என்றபடியே தொடர்ந்தார்...
“காங்கிரஸ் கட்சியின் பெரம்பலுார் மாவட்ட நிர்வாகியா, பக்கத்து மாவட்டமான அரியலுாரைச் சேர்ந்தவரை நியமிச்சிருக்காங்க... ஓய்வுபெற்ற ஆசிரியரான அவர், ‘பல லட்சங்களை குடுத்து தான் இந்த பதவியை வாங்கினேன்’னு தம்பட்டம் அடிக்கிறாருங்க...
“இதனாலயே, பல நிர்வாகிகளை துாக்கிட்டு, பணம் தர்றவங்களுக்கு மட்டும் கட்சியில பதவிகள் குடுக்கிறாரு... அதுலயும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவங்களுக்கு எந்த பதவியும் தரலைங்க...
“அதுவும் இல்லாம, மாவட்டத்துல இருக்கிற கல் குவாரிகள், கல்வி நிறுவனங்களிடம் கட்சி நிதி வசூல் பண்ணி, பாக்கெட்டுல போட்டுக்கிறாருங்க...” என்றார் அந்தோணிசாமி.
“ராஜேந்திரன், இரும் சேர்ந்து போலாம்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “கட்டிங் கேட்டு இழுத்தடிக்காவ வே...” என்றார்.
“யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய்.
“டாஸ்மாக் நிறுவனம், தமிழகத்தைச் சேர்ந்த ஏழு நிறுவனங்களிடம் பீர் வகைகளையும், 11 நிறுவனங்களிடம் மதுபானங்களையும் கொள்முதல் செய்யுது... தி.மு.க., ஆட்சியில, அக்கட்சியினர் நடத்திய நாலு நிறுவனங்களிடம் தான், அதிகமான மதுபானங்களை கொள்முதல் செஞ்சாவ வே...
“அப்ப ஒரு பெட்டிக்கு சராசரியா 50 ரூபாய் வீதம், ‘கட்டிங்’ வாங்குனாவ... இதனால, ‘குடி’மகன்கள் விரும்பிய மதுபானங்கள் கிடைக்காம, கடைகள்ல வித்ததை வாங்கி குடிச்சாவ வே...
“ஆட்சி மாறிய சூழல்ல, பெட்டிக்கு 50 ரூபாய் வாங்கியதை நிறுத்திட்டாவ... அதோட, பிற மாநில நிறுவனங்களிடம் இருந்து புது, ‘பிராண்ட்’ மது வகைகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுத்திருக்காவ வே...
“இதுக்காக, நிறுவனங்களிடம் பேசும் டாஸ்மாக் அதிகாரிகள் சிலர், கட்டிங் கேட்டு கொள்முதலை இழுத்தடிக்காவ... வெளிமாநில நிறுவனங்களின் பிரதிநிதிகளோ, ‘லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகம் நடக்குதுன்னு நம்பி வந்து ஏமாந்துட்டோமே’ன்னு புலம்புதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
